புத்தளம் மன்னார் வீதியும், முசலிப் பிரதேச மீள் குடியேற்றமும்
வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 20 வருடங்கள் கழிகின்ற இந்த நிலையிலும் இம்மக்களின் மீள் குடியேற்றம் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை. ஷஷமீள்குடியேற்றம் என்பது தமது பூர்வீகப் பிரதேசங்களில் குடியேற்றப்படுவதையே சுட்டுகிறது.| இது தொடர்பாக எனது பல கட்டுரைகள் வாயிலாக ஏலவே பேசியுள்ளேன்.
அண்மையில் புத்தளம் மன்னார் வீதியூடாக 91.73 கி.மீ. பயணம் செய்து முசலிப் பிரதேசத்தை தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இவ்வீதியூடான பயணம் இலகுவாக இருப்பினும் வீதிகள் தாரிடப்படாமல் மண் வீதியாக இருப்பதனால் புழுதிகளின் தொல்லையை அதிகம் எதிர்கொள்ளும் நிலை உள்ளது. இவ்வீதியைப் பயன்படுத்துகின்ற போது பயணத்தூரமும், பயண நேரமும் குறைவடைகிறது. இது இப்பிரதேச மக்களுக்குக் கிடைத்த ஒரு பெரும் வரப்பிரசாதமே.
இந்த புத்தளம் மன்னார் வீதி தொன்று தொட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதை வரலாற்றின் ஊடாக அறிய முடிகின்றது. புத்தள மக்களையும், மன்னார் மக்களையும் இணைக்கின்ற தொப்புள் கொடியாக இவ்வீதி அமைந்துள்ளது எனில் மிகையில்லை. ஐரோப்பியரின் வில்பத்து சரணாலயப் பிரகடனத்தின் மூலம் இவ்வீதி 1936இல் மூடப்பட்டது. வன விலங்குகளுக்கும் இவ்வனத்திற்கும் மனிதர்களால் ஏற்படும் தாக்கங்களை தடுப்பதற்காகவே அவர்களால் அப்போது இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உலகிலுள்ள அனைத்தும் மனிதரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே படைக்கப்பட்டுள்ளவை. இதை உணராமல் மனிதனின் தேவையை பின்னிலைப்படுத்தி விலங்குகளை முன்னிலைப்படுத்துவது எவ்வகையில் நியாயம். இவ்வீதியால் செல்லும் வாகனங்கள் காலை 7.30 தொடக்கம் பி.ப. 2.30க்கு இடையில் தமது பயணத்தை மேற்கொள்ளலாம். வாகனத்தின் வேகம் 40 கி.மீ. எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது. இப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகளும் கடற்படையினரின் 24 மணிநேர பாதுகாப்பும் இருக்கும் நிலையிலும் சுற்றாடலுக்கோ அல்லது விலங்குகளுக்கோ எவ்வித மனிதப்பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.
ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு பெருந்தெருக்களின் அபிவிருத்தி மிகவும் இன்றியமையாதது ஆகும். இதை உணர்ந்த கௌரவ அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் முயற்சியால் ஜனாதிபதி அவர்களின் புதல்வன் திரு. நாமல் ராஜபக்ஷ பா.உ அவர்கள் இவ்வீதியைத் திறந்து வைத்தார். இதனால் வடபுல முஸ்லிம்கள் அதிகம் மகிழ்ச்சியடைந்தனர். ஏனெனில் தமது மீள்குடியேற்றத்திற்கு இவ்வீதி பெரிதும் உதவும் என்பதனாலாகும்.
மாறாக அண்மைக்காலமாக சுற்றாடல் கோஷங்களைப் போட்டுக்கொண்டு இவ்வீதியை மீண்டும் மூடுவதற்கான முஸ்தீவுகள் எடுக்கப்படுகின்றன. இவ்வீதிப் பயன்பாட்டின் ஊடாக அநுராதபுர நகரின் பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடிய எவ்வித வாய்ப்பும் இல்லை. மாறாக அனுராதபுரத்தில் இருக்கும் வாகன நெரிசல் குறைக்கப்படும். இம்மன்னார் வீதி யாழ்நகருக்கான மாற்றுக்கரையோரப் பாதையாக உருவாக்கப்படும் போது வடக்குத் தெற்குக்கிடையிலான சிறந்ததொரு பொருளாதார உறவுப்பாலமாக திகழும் என்பது திண்ணமாகும்.
இவ்வீதியூடாகப் பயணம் செய்கின்ற போது முள்ளிக்குளம், மறுச்சுக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி, கொண்டச்சி, கொக்குப்படையான், தம்பட்டை முசலி, சிலாபத்துறை, முசலி, கூழாங்குளம், புதுவெளி, சிறுக்குளம், மேய்த்தன் வெளி, பண்டாரவெளி, மணற்குளம், இலந்தைக்குளம், பூநொச்சிக்குளம், அகத்திமுறிப்பு, பொற்கேணி, வேப்பங்குளம், பிச்சைவானிபம் குளம், நாலாங்கட்டை போன்ற பிரதேசங்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் குடியேறி இருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. முசலிப்பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களின் தொகையுடன் ஒப்பிடுகின்ற போது மீளக்குடியோரின் விகிதம் குறைவாக இருப்பதை உணரமுடிகிறது. இம்மக்கள் மீளக்குடியேற தயங்குவதற்கான அடிப்படைக் காரணங்கள் கண்டறியப்படவேண்டும்.
மீளக்குடியேறிய மக்கள் சிறிய சிறிய ஓலைக்கொட்டில்களிலும், தகரக்கொட்டில்களிலும் குடியிருப்பதை அறியமுடிந்தது. இம்மக்களோடு கலந்துரையாடிய போது தாம் பின்வரும் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டனர்.
* குடியிருப்பு நிலப்பிரச்சினை
* குடிநீர்ப்பிரச்சினை
* விவசாய நீர்ப்பாசனம் தொடர்பான பிரச்சினை
* விவசாய வாய்க்கால்கள் இன்னும் மீள் அமைக்கப்படாமை.
* நெற்காணிகளை இனங்காண்பதிலுள்ள சிக்கல்கள். (எல்லைகள்)
* காடுகளுக்குச் சென்று மரந்தடிகள் பெற்றுக்கொள்வதிலுள்ள கட்டுப்பாடுகள்.
* கட்டிடத் தேவைகளுக்கான மணல் பெறுவதிலுள்ள கட்டுப்பாடுகள்.
* மீளக் குடியோருக்கு தொழில் பெறக் கடினமாகவுள்ளது.
* புதிய வீட்டுத் திட்டங்கள் அமுல்ப்படுத்தப்படாமை.
* பள்ளிவாயல்கள் இடிந்த நிலையிலேயே இருக்கின்றன.
*உயர் பாதுகாப்பு வலயத்தினால் பிரதேச சபை, யூனியன், தபாலகம், பள்ளிவாயல், தனியார் குடியிருப்பு நிலங்கள் என்பன பாதிக்கப்பட்டுள்ளமை.
* வைத்தியசாலையில் பௌதீக வசதிகளும், வைத்திய ஆளனி வசதிகளும் போதாமை.
* நீர்ப்பாசனக் குளத்திற்குரிய அரச காணிகளை சிலர் அத்துமீறிப் பிடிக்கின்றமை.
* கூட்டுறவுச் சங்கங்கள் அதிக தூரத்தில் அமைந்துள்ளமை.
* மீளக்குடியேறியோரின் விவசாய உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த முடியாமை.
* பாடசாலைகளுக்கான பௌதிக வசதிகள் போதியளவில் இல்லை.
* க.பொ. த (சா.த.), க.பொ.த (உ.த) கற்பதற்கான போதிய வசதிகள் இன்மை.
* பாடரீதியாக வாண்மை வாய்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
* சில பிரதேச வீதிகள் மிகவும் ஒடுக்கமாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இரு வாகனங்கள் முந்திச் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. உதாரணம்: முசலி வீதி, சிறுக்குள வீதி.
* குளப் புனரமைப்பின் போது சில குளங்களில் பாரிய குழிகள் தோண்டப்பட்டுள்ளன. உதாரணம். முசலிக்குளம், புலவெளிக்குளம். இதனால் எதிர்காலத்தில் குளத்தில் நீராடுவோரும் கால்நடைகளும் நீரில் அமிழும் ஆபத்துக்கள் உள்ளன.
* ஒவ்வொரு கிராமத்திலும் பொதுத்தேவைகளைக் கருத்திற்கொண்டு அரச காணிகள் இனங்காணப்பட்டு ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
* கால்நடை வளர்ப்புக்குரிய சூழல் நிறைய உண்டு. கால் நடை அமைச்சினூடாக கால்நடைகள் பெற்றுத்தரப்படவில்லை.
* வாரிவெளி, புதுவெளி போன்ற கிராமங்களுக்கு மின் வசதி இன்னும் செய்யப்படவில்லை.
* அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவி செய்ய அனுமதிக்கப்படாமை.
மேற்சொல்லப்பட்ட பிரச்சினைகளை தீர்க்கின்ற போது மீள்குடியேறிய மக்களின் வாழ்வு மேம்பாடடைவதுடன் மீள்குடியேறுகின்ற மக்களின் தொகையும் அதிகரிக்கும்.
மேற்சொல்லப்பட்ட பிரச்சினைகளை தீர்க்கின்ற போது மீள்குடியேறிய மக்களின் வாழ்வு மேம்பாடடைவதுடன் மீள்குடியேறுகின்ற மக்களின் தொகையும் அதிகரிக்கும்.
முசலிப் பிரதேச செயலாளர், நிருவாக உத்தியோகத்தர், கிராம சேவகர்கள், பொலிஸார், கடற்படையினர் போன்ற அனைவரும் இம்மக்களுடன் மிகவும் நெருக்கமாக பழகி சேவையாற்றி வருகின்றனர். இவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள்.
வன்னித் தமிழ் மக்களின் இடப்பெயர்வின் பின்னர் முஸ்லிம் மக்களின் பிரச்சினை 2ஆம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் மறக்கடிக்கப்பட்டுள்ளதாகவும் இம்மக்கள் கூறுகின்றனர். அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்கள் மீள் குடியேற்ற அமைச்சராக இருந்த போது தமது தேவையை உணர்ந்து சிறப்பாக சேவை புரிந்ததாகவும் இன்று நிலைமை தொய்வடைந்து இருப்பதாகவும் இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், வீரக்கோன், பஷீல் ராஜபக்ஷ, விநாயகமூர்த்தி முரளிதரன், பாராளுமன்ற உறுப்பினர்களான முத்தலிபாவா பாறூக், உனைஸ் பாறூக் போன்ற அனைவரினதும் கூட்டு முயற்சி இம்மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தைக் கொண்டுவரும் என இம்மக்கள் கருதுகின்றனர்.

musaliur ashhar avarkale thodarnthu em makkal pirachchinayai velikkonduvarunkal safni
ReplyDelete