அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்டாலும் சில நிபந்தனைகளுடனே போட்டி - ரவூப் ஹக்கீம்
பி.பி.சி. சிங்கள சேவையான சந்தேஷயவிற்கு, பொத்துவில் கூட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்ற இணக்கப்பாடே அக்கூட்டத்தில் பரவலாக காணப்பட்டது என்று கூறியுள்ளார்.
அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்டாலும் சில நிபந்தனைகளுடன் போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாடே உள்ளது என்றும் அது பற்றி அரசாங்கத்துடன் பேசப்படும் என்றும் ஹக்கீம் கூறியுள்ளார்.
இதேவேளை இலங்கையில் நடை பெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஏனைய கட்சிகளுடனான தேர்தல் கூட்டணி தொடர்பான எந்தவிதமான இறுதி முடிவும் பொத்துவில் நகரில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் எட்டப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி கூறியுள்ளார்.
பொத்துவில் நகரில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் தனித்துவம்,நியாயமான அதிகாரப் பரவலாக்கலைக் கொண்ட தனி அதிகார அலகு என்ற இலக்கைக் கொண்டதாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அடுத்தகட்ட நகர்வுகள் அமையவேண்டும் என்றும் அந்த அடிப் படையிலேயே தேர்தலில் கூட்டுச்சேரும் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் பொத்துவில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக ஹசன் அலி தெரிவித்தார்.
இந்த அடிப்படையில் குறித்த கட்சிகளுடன் எழுத்து மூல புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்றும் சுட்டிக்காட்டிய ஹசன் அலி, அரசுடன் இனைந்து போட்டியிடுவதாயின் தமது கட்சி சில நிபந்தனைகளை முன் வைக்கும் என்று கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் இக் கூட்டத்தில் தெரிவித்ததாக வெளியான தகவல்களை நிராகரித்து, அப்படி எதுவும் அவர் கூறவில்லை என்றும் கூறினார்.

Post a Comment