Header Ads



இப்படியும் ஒரு போட்டி..! - ஜெயிப்பது யார்..?


நெளுக்குளத்தை அண்மித்த பகுதியில் காணப்படும் புதையல்பிட்டி என்ற கிராமத்தில் ஏராளமான புதையல்கள் மறைந் திருப்பதாக பரபரப்பான தகவல்கள் அண்மைக் காலமாக வெளிவந்தபடியுள்ளன.  இந்தத் தகவல்கள் வெளிவரத் தொடங்கியதும் புதையல் பிட்டி தமக்கே சொந்தம் என்று உரிமைகோரி வருகின்றனர்.

நீண்ட காலமாக புத்த பிக்குமார் தமது உறைவிடமாக இந்தப் பகுதியைப் பயன்படுத்துவதால் குறித்த கிராமம் தமது புத்த சங்கத்துக்குரித்தானது என்று தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்தப் பகுதியில் புதையல் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கும் இலங்கை தொல்பொருள் திணைக்களம் குறித்த புதையல் பிட்டியில் உள்ள 5 ஏக்கர் விஸ்தீரணமான இடப்பரப்பு தமது திணைக்களத்துக்கே உரித்தானது என்று ஆதார பூர்வமாக நிறுவ முனைகின்றது.

ஆனால் 80 வருடங்களுக்கும் மேலாக புதையல் பிட்டியில் வசித்து வரும் கிராம வாசிகளோ "இது நாங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் தமிழ்க் கிராமம். ஆகவே இது எங்களுக்கு மட்டுமே உரித்தானது. தற்போது எமது கிராமத்தில் புதையல்கள் இருப்பதாக வெளியான தகவலை அடுத்தே பிக்குகளும், தொல் பொருள் திணைக்களத்தினரும் புதையல் பிட்டியை அபகரிக்க முயற்சிக்கின்றனர்.இதனை நாம் ஒருபோதும் அனுமதியோம்'' என்று போர்க் கொடி தூக்கியுள்ளனர்.

இவ்வாறு மூன்று தரப்புகள் புதையல் பிட்டிக்கு சொந்தம் கொண்டாடுவதால் இந்த சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இது தொடர்பாக எவரும் முரண்பட வேண்டாம் என்றும் அமைதியான முறையில் உரிய தீர்வு பெற்றுத் தரப்படும் என்றும் பொது மக்களிடம் நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.