Header Ads



இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதிகால எலும்பு - அமெரிக்கா, பிரிட்டன் ஆய்வுசெய்யும்

இலஙகையின் தென்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்திய கால மனிதனின் முழுமையான எலும்புத்தொகுதி தொடர்பாக மேலதிக ஆய்வுகளை மேற்கொள்வதற்கு வெளிநாட்டு உயிரி – மானுடவியல் ஆய்வாளர்களுக்கு தொல்பொருள் ஆய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.

களுத்துறை பஹியங்கல பஹெய்ன் குகையில் இருந்து வரலாற்றுக்கு முந்திய கால மனிதனின் முழுமையான எலும்புக்கூட்டை தொல்பொருள் ஆய்வு திணைகள ஆய்வாளர்கள் கடந்த 15ம் நாள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து கடந்தவாரம் தொல்பொருள் ஆய்வுத் திணைக்களப் பணிப்பாளர் கலாநிதி சேனாரத் திசநாயக்க, கலாநிதி சிரான் தெரணியகல ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குழு அங்கு சென்று பார்வையிட்டது.

இதையடுத்தே, இந்த எலும்புத்தொகுதியை வெளிநாட்டு உயிரி - மானுடவியல் ஆய்வாளர்களின் உதவியுடன் ஆய்வுகளை மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

“இந்த எலும்புத்தொகுதியின் மாதிரிகளை காபன் காலஅளவுக் கணிப்புப் பரஜசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம்.“ என்று தொல்பொருள் ஆய்வுத்திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் நிமால் பெரேரா தெரிவித்துள்ளார்.

“வரலாறுக்கு முந்திய மனிதனின் இந்த எலும்புத்தொகுதி 12,000 ஆண்டுகளுக்கு முந்தியதாக இருக்கலாம் என்று நம்புகிறோம். இந்த எலும்புத் தொகுதியைப் பாதுகாக்கும் வசதிகள் இல்லை என்பதால் அந்த இடத்திலேயே அது இருக்கும். வெளிநாட்டு நிபுணர்கள் வந்த பின்னர் அதனைப் பாதுகாப்பது எப்படி என்று முடிவு செய்யப்படும். அவர்களின் ஆலோசனைப்படியே எதிர்கால ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அதேவேளை இந்த எலும்புத் தொகுதியை ஆய்வு செய்ய தாம் பிரித்தானிய நிபுணர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தொல்பொருள் ஆய்வுத் திணைக்களப் பணிப்பாளர் கலாநிதி சேனாரத் திசநாயக்க சீன செய்தி நிறுவனமான ‘சின்ஹுவா‘விடம் கூறியுள்ளார். இந்த மனித எலும்புத் தொகுதியுடன் ஆதிமனித பயன்படுத்திய உணவுப் பொருட்கள், கல் ஆயுதங்கள், மிருக எலும்பு ஆயுதங்கள், மற்றும் அணிகலன்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.