மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸின் ஐடியா..! மாணவர்களுக்கு குஷிதான்..!!
பள்ளி வகுப்புகள் போரடிக்கிறதா, ஜாலியாக இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் மாணவர்களுக்கு ‘மூட் பிரேஸ்லெட்’ அணிவிக்கலாம் என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ஆலோசனை கூறியிருக்கிறார். இதுகுறித்த ஆய்வுக்கு ரூ.6 கோடி வழங்கியிருக்கிறார். பள்ளி வகுப்புகள் மாணவர்களுக்கு எந்தளவு ‘சுவாரஸ்யமாக’ இருக்கும் என்பது ஊரறிந்த ரகசியம். முதல் ஒன்றிரண்டு பெஞ்ச் மாணவர்கள் ‘வேறு வழியின்றி’ கவனிப்பதும் இதர பெஞ்ச்சினர் வேடிக்கை, அரட்டை, தூக்கம் என களமிறங்குவதும் சகஜமாக நடப்பது.
பையனிடம் கேட்டால், ‘அந்த ஆளு (ஆசிரியர்) சுத்த போர்’ என்பார்கள். ‘உங்க பையன் எங்க பாடத்தை கவனிக்கிறான். எந்நேரமும் அரட்டை’ என்பார் வாத்தியார். இதில் மெய்யாலுமே எது உண்மை என்று எப்படி தெரிந்துகொள்வது? மைக்ரோசாப்ட் நிறுவனரும் உலக கோடீஸ்வரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் இந்த சிக்கலை தீர்க்க வகுப்பறைகளில் கண்காணிப்பு கேமரா வைக்கலாம் என்று ஒரு ஆலோசனை சொன்னார். மாணவர்கள் தூங்குகிறார்களா, அரட்டை அடிக்கிறார்களா என்று காட்சிகளை போட்டு பார்த்து தெரிந்துகொள்ளலாம். ஆனால், அமெரிக்காவில் இதற்கு எதிர்ப்பு வலுத்தது. ‘நாங்கள் பாடம் நடத்துகிறோமா என்று உளவு பார்க்கும் வேலை இது’ என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இந்நிலையில், இன்னொரு ஆலோசனையை தெரிவித்திருக்கிறது த பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை. மாணவர்களுக்கு ‘மூட் பிரேஸ்லெட்’ போட்டுவிடுவது இத்திட்டம். வியர்வை சுரப்பிகளை நரம்பு மண்டலம்தான் கட்டுப்படுத்துகிறது. எனவே, மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் இயக்கத்துக்கு ஏற்பவே வியர்வை சுரப்பும் இருக்கும். படபடப்பு, பதற்றம் ஏற்பட்டால் குப்பென்று வியர்ப்பதற்கு இதுதான் காரணம். இந்த அடிப்படையில்தான் மூட் பிரேஸ்லெட் செயல்படுகிறது. வாட்ச் போல இதை கட்டிக்கொள்ள வேண்டும். வியர்வை அதிகமானால், கையில் ஈரப்பதம் அதிகரிக்கும். மின் அலைகளை கடத்தும் திறனும் அதிகரிக்கும்.
இத்தகவல், மூட் பிரேஸ்லெட்டில் பதிவாகும். மாணவர்கள் எந்த பீரியட்டில் ஜாலியாக இருக்கிறார்கள், எந்த பாடம் அவர்களுக்கு போரடிக்கிறது என்பதை எளிதாக தெரிந்துகொள்ளலாம் என்று விளக்கம் தருகின்றனர் தொழில்நுட்ப நிபுணர்கள். இதுகுறித்த ஆய்வுக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளை ரூ.6 கோடி ஒதுக்கியிருக்கிறது. மாணவர்களுக்கு எந்த பாடம் போரடிக்கிறது, எந்த பாடம் அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது என்று தெரிந்தால், பிடித்த கல்வியை அவர்களுக்கு வழங்க மூட் பிரேஸ்லெட் மிகவும் உதவியாக இருக்கும் என்கிறது கேட்ஸ் அறக்கட்டளை.
இத்திட்டத்துக்கும் எதிர்ப்பு இல்லாமல் இல்லை. ‘‘மாணவனுக்கு எந்த பாடம் பிடிக்கிறது என்பதை தெரிந்துகொள்ள தேர்வுகள் இருக்கின்றன. பல கோடி செலவில் ஆராய்ச்சி அநாவசியம். மேலும், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மாணவன் மிகவும் உற்சாகமாக இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் வாத்தியார் சொன்னதை கேட்டானா, பக்கத்து பையனுடன் அரட்டை அடிப்பதால் உற்சாகம் ஆனானா என்பது எப்படி தெரியும். மேலும், பலவிதமான உணர்ச்சிகளின்போதும் வியர்வை சுரப்பு அதிகமாகும். அதை வைத்து மாணவர்களை எடை போடுவது பேத்தலாகத்தான் இருக்கும்’ என்கின்றனர் ஆசிரியர்கள்.

Post a Comment