Header Ads



இலங்கை: குற்றச் செயல்களின் தேசமா..?



(14-06-2012 அன்று விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகிய ஆசிரியர் தலையங்கம் இது)

போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பிற்பாடு நாட்டில் சகஜ நிலை தோற்றம் பெற்றுள்ளதாகவும் சுதந்திரமான முறையில் அச்சமின்றி எந்தவொரு பகுதிக்கும் சென்று வர முடியும் எனவும் நாம் பெருமைப்பட்டுக் கொண்டாலும் மறுபுறம் நாடு கலாசார ரீதியாக பாரிய படுகுழியில் வீழ்ந்து கொண்டிருப்பதையும் மறந்துவிடுவதற்கில்லை.

அன்றாடம் ஊடகங்களில் இடம்பிடிக்கும் செய்திகளில் கணிசமானவை கொலை, கொள்ளை, களவு, ஆட்கடத்தல், பாலியல் வல்லுறவு, போதைப் பொருள் கடத்தல்...... என குற்றப்பட்டியல் கொண்டதாகவே அமைந்திருப்பது கவலைக்குரியதாகும்.

நாட்டின் திறந்த பொருளாதாரக் கொள்கையாலும் நவீனம் என்ற போர்வையில் மக்களை வசீகரித்திருக்கும் மேற்குலக கலாசாரத்தினாலும் இன்று இலங்கையின் கட்டுக்கோப்பு என்பது காலாவதியாகிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது.

2011 ஆம் ஆண்டில் முதல் 9 மாத காலப் பகுதியில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற குற்றச் செயல்களின் பட்டியலுக்கமைய 553 கொலைகளும் 1233 காயப்படுத்தல்களும் 744 கடத்தல் சம்பவங்களும் 1298 பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் 425 அசிட் வீச்சு சம்பவங்களும் 4419 களவுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்தப் புள்ளிவிபரங்களை நோக்குமிடத்து இவை ஒப்பீட்டளவில் மிகவும் அதிகமானவையாகும். இந்த ஆண்டிலும் இவை அதிகரித்த வண்ணமே செல்வதை அன்றாட நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

இன்று இலங்கை பெண்களுக்கும் சிறுவர்கள் மற்றும் சிறுமியருக்கும் பாதுகாப்பற்றதொரு நாடாக மாறி வருகிறதா எனும் கேள்வி இன்று பலரிடமும் தொக்கி நிற்கும் வினாவாகும்.

சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் 15 வயது சிறுமி ஒருவர் பட்டப்பகலில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. கண்காட்சி ஒன்றைப் பார்வையிட வந்த குறித்த சிறுமியை பலவந்தமாக இழுத்துச் சென்றே இந்தக் குற்றம் புரியப்பட்டிருக்கிறது.

பேஸ் புக் இணையதளம் மூலம் ஆசிரியை ஒருவரை திருமணம் புரிவதாக ஏமாற்றி அவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதோடு மாத்திரமன்றி பணம் மற்றும் உடைமைகளையும் சூறையாடிய ஆசாமி ஒருவர் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது நீதின்றில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் புதிதாக அனுமதி பெற்ற 4 மாணவிகளை சிரேஷ்ட மாணவர்கள் கூட்டாக பாலியல் சேஷ்டைகளுக்கு உட்படுத்தியமை தொடர்பான முறைப்பாடு தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்திருக்கிறார்.

வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர்கள் மற்றும் பெண் சிற்றூழியர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பில் தமக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு நாட்டில் படிப்பறிவற்றவர்கள் மட்டுமன்றி நன்கு கல்வி கற்ற உயர் பதவி வகிப்பவர்கள் கூட குற்றச் செயல்களின் பின்னணியில் இருப்பதானது இந்த நாட்டின் எதிர்காலம் பற்றிய அச்சத்தையே நமக்குள் தோற்றுவிக்கிறது.

இந்த மோசமான நிலைக்கான பொறுப்பை நாம் அனைவரும் சேர்ந்தே ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இது விடயத்தில் சகல தரப்பினரும் தமது கூட்டுப் பொறுப்பை உணர்ந்து செயற்படாதவிடத்து நாளை ஒவ்வொருவரது வீட்டிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை தவிர்க்க முடியாது போய்விடும்.

எனவேதான் இலங்கையை வெறும் கட்டிடங்களாலும் நேர்த்தியான வீதிகளாலும் ஆசியாவின் ஆச்சரியமாக கட்டியெழுப்பவதைப் பார்க்கிலும் ஒழுக்கமும் கலாசாரமும் நிறைந்த மக்களால் கட்டியெழுப்புவதே மிகவும் பயனுடையதும் தூரநோக்கானதுமான பணியாகும்.

இது தொடர்பில் நாட்டிலுள்ள சகல மத தலைவர்களும் தமது கடமையை செவ்வனே நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். மக்களை நேர்வழிப்படுத்துவதற்கான பொறுப்பு மத தலைவர்களுக்கு உரியதாகும்.

எனவேதான் சகல மத அமைப்புகளும் அவற்றின் தலைமைகளும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கலாசார ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் கட்டியெழுப்பி பாடுபட முன்வர வேண்டும்.
 

No comments

Powered by Blogger.