Header Ads



முஸ்லிம் உம்மத்தின் முதுபெரும் தலைவர் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத்


எம்.பீ.எம். மாஹிர்

இமாம் கஸ்ஸாலி (ரஹ்) புகழ் என்பதை நான்கு வகையாக விவரித்துள்ளார்கள். மனிதன் அல்லாஹ்வைப் புகழ்வது, அல்லாஹ் மனிதனைப் புகழ்வது, மனிதன் மனிதனைப் புகழ்வது, அல்லாஹ் தன்னைத்தான் புகழ்வது.

மனிதன் மனிதனைப் புகழும் இம்மகத்தான பணியை மனித உலகம் அன்றும் இன்றும் புரிந்து வருகின்றது. என்றும் புகழும் வாழ்வின் எல்லாத் துறைகளிலும் வளமான நிலைகண்டு வாழ்வாங்கு வாழ்ந்த வியத்தகு தலைவர் கலாநிதி அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் ஆவார்.

இலங்கை மக்களுக்கு இணையற்ற சேவை செய்தவர் ‘’பதீ’’ அவர்கள். இலங்கையின் தென் பகுதியைச் சேர்ந்த அவர் அலிகார் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற காலத்தில் அலிகார் மாணவ மஜ்லிஸ் விழாவின் பொழுது அதற்குத் தலைமைதாங்கியவர், மட்டுமன்றி அக் கூட்டத்தின் சிறப்பு பேச்சாளர்களாக பாகிஸ்தான் நிறுவிய காயிதே ஆஸம் முஹம்மதலி ஜின்னாஹ் வலது புறத்திலும் பின்னாள் இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக வந்த ஜவகர்லால் நேரு இடது புறத்திலும் அமர்ந்து மஜ்லிஸை தலைமைதாங்கி நடத்தியவர் மாணவர் பதியுத்தீன் மஹ்மூத் முஸ்லிம் சமூகத்தின் முதுபெரும் தலைவர் என்ற நிலையில் வேறுபட்ட கருத்துக்களை ஒன்றிணைத்து இஸ்லாமிய சோஷலிஸ முன்னணியை (ISF)  நிறுவி சமூக ஒற்றுமைக்கு அடித்தளம் ஏற்படுத்தினார். தன்னிகரில்லா சேவை செய்யவும், தன் சமூகத்தை ஒன் றிணைக்கவும் அயராது உழைத்தார் பதி.

அரசியல் துறையில் மட்டுமன்றி கல்வித் துறையிலும் பெரும் கவனம் செலுத்தினார் பதியுத்தீன் மஹ்முத், தனது ஆசிரியர், முஸ்லிம் சமூக முன்னணி தலைவர் அல்ஹாஜ் டாக்டர் டி.பீ.ஜாயா அவர்களின் வேண்டுகோளின் படி முஸ்லிம்களின் கல்வித் துறையில் கவனம் செலுத்தினார். அல்ஹாஜ் ஜாயாவினால் தமக்களிக்கப்பட்ட பொறுப்புக்களை இனிதே நிறைவேற்றினார். கம்பளை சாஹிரா கல்லூரி (Zahira College) ஆரம்பித்ததன் மூலமாகவும் ஜாயா அவர்களின் ஆலோசனைப்படி நாடளாவிய ரீதியில் சாஹிராக் கல்லூரிகள் அமைக்கப்பட்டன. இஸ்லாமிய கலாசாரம், நுண்கலைகள் (Fine Arts), கலைஞானத்துறை (Aesthetic), அழகியல் எழுத்துமுறை (Calligraphy) ஆகிய கல்வித் துறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு கல்விசார் முறைகள் ஊக்குவிக்கப்பட்டன. தம் வாழ்நாளில் தான் உருவாக்கிய கலைகள் தடையின்றிப் பயிலப்படுவதையும் தன் மனத்தோற்றம் நிறைவேறுதலையும் (Vision) கண்கூடாகக் கண்டார் ‘’பதி’’.

எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க அவர்களின் நட்பு அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களுக்குக் கிட்டியது. இதன் விளைவாக திரைகடல் தாண்டி உலக நாடுகள் ஒன்றியத்தின் (U.N) இலங்கைப் பிரதிநிதியாகச் செயலாற்றவும் முடிந்தது.

திருமதி.சிறிமா பண்டாரநாயக்கா அம்மை யார் பதவியின் பொழுது அமைச்சராகப் பணியாற்றிய ‘’பதி’’ இலங்கை மக்களுக்கும், முஸ்லிம்கள் ஈறாக அளப்பரிய சேவை புரிந்தார்.

கல்வி அமைச்சராகப் பதவி ஏற்பு நிகழ்வில், கல்வி அமைச்சு ஊழியர்களுக்கு அவர் ஆற்றிய உரை உறுதியானதும் உள்ளத்தை ஈர்ப்பதாகவும் இருந்தது. ‘’நான் ஒரு தேசிய மந்திரி. ஓர் இனத்தின் அல்ல, பெரும்பான்மை சமூகத்தின் உணர்வை மதித்து அவர்களுக்கு பாதகம் ஏற்படாமல் செயலாற்றுவேன். அதே நிலையில், சிறுபான்மை இனத்திற்கு அநியாயம் இழைக்கப்பட இடம்கொடுக்க மாட்டேன்’’ என்று உறுதியளித்தார்.

கற்களில் மாணிக்கம் சிறந்து விளங்குமாற்போல் தோற்றம் ஒன்றாயினும் தோழமையுடனும், அன்புடனும் பழகக்கூடிய அரும் தலைவர் பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள். வாழ்வின் இறுதிக்கட்ட காலத்தில் கம்பளையில் வாழ்ந்த போதும் நெருங்கிப் பழகும் பெரும்வாய்ப்பு கட்டுரையாளர்களுக்குக் கிடைத்தது. அவருடைய மாணவியும் பின்னர் இசைத் துறையை ரஷ்யாவில் பயின்றவருமான ஆசிரியை மரீனா ஆப்தீன், ‘’பதி’’ அவர்களை கண்ணும் கருத்துமாகக் கவனித்தார். இக் காலகட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் அல்ஹாஜ் எம்.எச்.எம்.அஷ்ரப் கம்பளை வந்து ‘’பதி’’ யுடன் முஸ்லிம் சமூகத்தைப் பற்றி கலந்துரையாடிய சம்பவங்கள் அநேகம்.

‘’எனக்குப் பின் என் சமுதாயத்தைக் காக்க ஏற்ற தலைவர் அல்ஹாஜ் எம்.எச்.எம்.அஷ்ரப் என்பதில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். அவருக்கு உங்கள் ஒத்துழைப்பை நல்குங்கள்’’ என கண்டி குயீன்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தில் குறிப்பிட்டார். இக் கூட்டத்தில் தலைவர் அஷ்ரப் உட்பட ரவூப் ஹக்கீம், குத்தூஸ் இஸ்மாயில், ஹசன் அலி தியாகத்துடன் சேவை செய்யும் தொண்டர்களும் பெரும் கூட்டத்தினரும் கலந்து கொண்ட பொழுது ‘’நாரே தக்பீர்’’ எனும் ‘’தக்பீர் முழக்கம்’’ இன்னும் காதுகளில் ஒலிக்கின்றது.

அன்று இலங்கை இஸ்லாமிய நிலையத்தில் நாங்கள் நடாத்திய ‘’நபிமணி வாழ்வும் வாக்கும்’’ கருத்தரங்கம் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் எம்.எச்.முஹம்மத் தலைமையில் நிகழ்த்தப்பட்டது. கல்வி மந்திரியாக அல்ஹாஜ் டாக்டர் பதியுத்தீன் மஹ்மூத் அதிக வேலைகளுக்கு மத்தியிலே நேரகாலத்தோடு வந்தார். சில நேரம் தான் கலந்து கொள்ள முடியும் என்று சொன்னவர் தன் நண்பர்களான பேரறிஞர்களைக் கண்டு அன்றைய தினத்தில் இருந்த எல்லா வேலைகளையும் தள்ளிப் போட்டுவிட்டு அன்று முழுவதும் மஃரிப் வரை கலந்து கொண்டு சிறப்பித்த பெருங்குணம் யாருக்கு வரும்!

ஒரு தனிப்பட்ட குறிப்பு: பதியுத்தீன் மஹ்மூத் அவர்களின் அன்பிற்கு ஒரு சாட்சி எனலாம் கட்டுரையாசிரியரின் திரு மண வைபவம். 1974இல் நடைபெற்றபொழுது மணவாளனின் மாப்பிள்ளைத் தோழனாக ‘’பதி’’ வர விரும்பினார். அவ்வாறு வந்தார்.

முஸ்லிம் உம்மத்தின் முதுபெரும் தலைவர் கலாநிதி அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் இணையற்றவராக, இதயம் கவர்ந்தவராக என்றும் இலங்குவார். tv

1 comment:

  1. இப்போதும் கண் முன்னால் பதியின் முகம் நிழலாடுகிறது .அப்போதைய ஒஸ்மானிய கல்லூரியின் அதிபர் ஜனாப்.அப்துல் குத்துஸ் அவர்களின் பெரு முயற்சியின் காரணமாக ஒஸ்மானியாக் கல்லூரி புனர் நிர்மாணம் செய்யப்பட்டு,மாடியில் மண்டபம் கட்டப்பட்டு மஹ்முத் மண்டபம் என் பெயர் சூட்டப்பட்டு பதியின் கைகளினாலே திறப்புவிழாவும் செய்யப்பட்டது.சோனக தெருவே விழாக்கோலம் பூண்டு மிகவும் சந்தோசமாக இருந்தது.அதன் இப்போதையஅழிவுக் கோலத்தைப் பார்க்கும் போது எழுதுவதற்கு வார்த்தைகள்?
    இப்போதும் எங்கள் அதிபர் இருக்கிறார்,அவரிடம் பதியை பற்றிய விபரங்களை கேட்டு எழுதுங்கள் .
    Tharik Daoud

    ReplyDelete

Powered by Blogger.