Header Ads



முஸ்லிம் சகோதரர்களே வருக வருக..!



(யாழ் தமிழ் தகவல் என்ற ஊடகம் யாழ் முஸ்லிம் இணைய பேஸ்புக்கில் பகிர்ந்துகொண்ட கட்டுரையொன்றை இங்கு மீள்பதிவு செய்கிறோம்)

1990 காலப்பகுதியில்  வெறும் இரண்டு மணி நேர குறுகிய அறிவித்தலுடன் ,உடமைகளை எடுக்க எந்த அவகாசமும் வழங்காது பிறந்த நிலத்தை விட்டு துரத்தப்பட்வர்கள் யாழ் முஸ்லிம்கள்.

சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள் சொந்த இடத்தை விட்டு துரத்தப்பட்டன ,தமிழர்களாகிய எம்மிற் பலர் அனுபவித்த அகதி வாழ்வை அவர்களும் பல்லாண்டுகாலம் அனுபவித்தனர் . செல்லும் இடங்களிலெல்லாம் அகதிகள் என்று சக முஸ்லிம்களால் கூட முத்திரை குத்தப்பட்ட வாழ்வை வாழ்ந்தனர்.

இந்த இரண்டு தசாப்பத காலப்பகுதியில் சொந்த ஊரைக்காணாமல் இறந்தவர்களும் ,சொந்த ஊர் தெரியாமல் பிறந்தவர்களும் என அவர்களுள் பல மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன.

இப்போது நாட்டில் நிலவும் சுமுக நிலையில் அவர்கள் படிப்படியாக ஊருக்கு திரும்பி வருகிறார்கள். வரவே முடியாமல் சென்ற ஊர்களிலேயே வேர்விட்டுப்போனவர்களும் உண்டு. கனடா ,லண்டன் என்று தங்கி விட நேர்ந்த நம்மவர்கள் போலவே.

புலிகளால் அவசர அவசரமாக விரட்டப்பட்ட போது லொறியிலும் வான்களிலும் ,பஸ்களிலும் ஏக்கமான முகங்களோடு சென்ற எனது யாழ் இந்து நண்பர்களுடைய முகங்களும் கலங்கிய பிம்பங்களாக மனதில் நிழலாடுகிறது. அவர்களுக்கு நமது இனம் செய்த வரலாற்றுத்துரோகத்திற்கு கைமாறு என்ன செய்யப்போகிறோம் ? தெரியாது

இன்னிலையில் யாழ்ப்பாணம் திரும்பி புது வாழ்வு வாழ முயலும் முஸ்லிம் சகோதரர்கள் பல உளவியல் ரீதியான தாக்குதல்களுக்கும் முகம்கொடுக்க வேண்டி இருக்கிறது.

முஸ்லிம்களுக்கு எதிரான ஊடக நிலைப்பாடு !
அண்மையில் காரை    நகரில்          புத்தி சுவாதினமற்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர் இரு முஸ்லிம்கள் ,மிகக்கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

ஆனால் ஊடகங்கள் இதனை ஊதிப்பெருப்பித்து இரு இனங்களிற்கிடையேயும் பல ஊர்களில் குழப்பம் ஏற்பட வழிசமைத்து விட்டன. மனித வடிவில் மிருகங்கள் எல்லா இனங்களிலும் இருக்கின்றன.

அண்மையில் நாவற்குளிப்பகுதியில் தனது மருமகளான 8 வயது சிறுமியை தொடர்ந்து ஒரு வருடம் துஸ்பிரயோகம் செய்து வந்த மாமனாரும் ,உரும்பிராய்ப்பகுதியில் சைவப்பழமான முன்னாள் கல்வியதிகாரி தனது முதுமைக்காலத்தில் சிறுவர் இல்லப்பராமரிப்பாளராக இருக்கும் போது அங்கும் புத்தி சுவாதினமற்ற சிறுமியை மாதக்கணக்காக துஸ்பிரயோகம் செய்து பின்னர் அகப்பட்டுக்கொண்ட சந்தர்ப்பங்களும் தமிழர்களாலேயே தமிழர்கள் மேல் அவிட்கப்பட்ட பாலியல் வன்முறைகளிற்கு சில உதாரணங்களாகும்.

இவையைல்லாம் வேறு இனத்தவர்களால் எங்கள் மீது மேற்கொள்ளப்படவில்லை சகோதரர்களே !.

யாழ்ப்பாண பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளிடமும் ,யாழ் அரச அதிபரிடமும் உள்ள கணக்கெடுப்புக்ளை வைத்து பாலியல் துஸ்பிரயோகங்கள் காரணமாக ஏற்பட்ட முறையற்ற கர்ப்பங்களின் எண்ணிக்கையை அறிந்தீர்களென்றால் நெஞ்சு கொதிக்கும் அவற்றிலெல்லாம் முஸ்லிம் சகோதரர்கள் ஈடுபடவில்லை ,எங்கள் மேதகு பச்சைத்தமிழனே காரணமாக இருந்திருக்கின்றான்.

கண்ணை மூடியபடி ”முஸ்லிம்கள் காட்டிக்கொடுத்தார்கள்” என்று சொல்லும் நபர்களை கண்டிருக்கிறேன்.

துரோகிகள் என்று பார்த்தால் அது பண்டார வன்னியன் காலத்திலிருந்து ஈழ வரலாற்றில் நம்மில் இருக்கத்தான் செய்கின்றார்கள். எங்கே ,கண்ணை மூடி மனசாட்சிப்படி விரல்விட்டு எண்ணிப்பாருங்கள் எங்கள் இனத்தில் எமது நியாயமான போராட்டங்களை காட்டிக்கொடுத்து இன்னும் சுகபோக வாழ்வு வாழும் துரோகிகளை …ஆம் உங்கள் மனது எண்ண எண்ண எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகிறது அல்லவா?

ஓப்பீட்டளவில் சில்லரைக்காசுக்காக காட்டிக்கொடுத்த அன்னாடங்காச்சிகளே அவர்களில் துரோகிகளாக இருந்தார்கள் ,ஆனால் எம்மில் பில்லா ரேஞ்சிற்கு சுகபோக வாழ்க்கை வாழ்வதற்காக காட்டிக்கொடுத்து நம் கண்ணெதிரே வாழ்பவர்களே அதிகம். அந்த வகையிலும் நம்மை அடிக்க யாராலும் முடியாது.

எனவே முஸ்லிம்கள் எல்லோரும் போராட்டத்தை காட்டிக்கொடுத்தார்கள் அவர்கள் துரோகிகள் என்று இனிமேல் சொல்லாதீர்கள்.

நல்லவர்கள் ,கெட்டவர்கள் எல்லா சமூகங்களிலும் உண்டு. இனத்துவேச கண்ணாடியை போட்டுக்கொண்டு பார்த்தால் எல்லாம் குற்றம்தான்.

எனவே …சந்தேகக்கண்ணாடியுடன் யாழ் முஸ்லிம்களை பார்க்காது, மீண்டும் நல்வாழ்வு வாழ விரும்பும் அவர்களுக்கு கைலாகு கொடுத்து வரவேற்போம்.

யாழ் மண் அவர்களுக்கும் உரியது.

மனிதம் வாழ்க

பிற்குறிப்பு குறித்த கட்டுரையின் கீழே வெளியாகியிருந்த குறிப்பு ஒன்றையும் இங்கே அப்படியே தருகிறோம்..!

இந்தக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டவாறு அந்தப்பெரியவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபடவில்லை என்றும், அவருக்கு ஆகாத வேறொரு அரசியல் சார்ந்த கூட்டமே இந்த பெண் பிள்ளையின் குடும்பத்திற்கு பணம் கொடுத்து இவ்வாறனதொரு புகாரை கூற வைத்ததாகவும் ,சில கருத்துக்கள் கிடைக்‌கப்பெற்றிருக்கின்றன. இந்த குற்றம் சட்ட ரீதியாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்தக்கட்டுரையின் பிரதான பொருள் குறிப்பிட்ட பெரியவர் அல்ல , நமது தமிழ் சமூகத்திலும் தவறானவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு கட்டுரையாளர் எடுத்துக்கொண்ட உதாரணங்களில் ஒன்றே அது. அதை தவிர்த்து இன்னும் நுாற்றுக்கணக்கான உதாரணங்கள் தேவைப்படினும் காட்ட முடியும் என்பது கட்டுரையாளர் தரப்பு. உண்மையும் அதுவே.

4 comments:

  1. வட மாகாணத்தைப் பொறுத்தவரை என் அனுபவத்தில் காட்டிக் கொடுத்ததாக சரித்திரமில்லை.இன சுத்திகரிப்பு செய்தபின் கூட விரல் விட்டு எண்ணக் கூடிய ஒருசிலர் செய்திருக்கலாம்.சகல கொள்ளைகார இயக்கங்களுக்கும் படியளந்தது வட மாகாணச் சோனகனே.கிழக்கு முஸ்லீம்கள், அவர்களுக்கு இயக்க கொள்ளைக்காரர்களால் ஏற்பட்ட உயிரழிவு பொருலளிவு இன்னும் பல தொல்லைகளால் அவர்கள் சில முடிவெடுத்தார்கள்.அதற்கு வட புல முஸ்லீம்கள் எப்படி பொறுப்பாவார்கள்.
    Meraan

    ReplyDelete
  2. கட்டுரையை எழுதியவர் பெயர் தெரியாவிட்டாலும், அவரை பாராட்டுகின்றோம்.

    இத்தகைய நல்ல உள்ளங்களை கண்டு, மற்றவர்களும் தமது சிந்தனையில் மாற்றங்களை கொண்டுவர முயல வேண்டும்.
    ஊடகங்களின் செயல்பாட்டிலும், தமிழ் மக்களின் சிந்தனைப் போக்கிலும் மாற்றங்களை எதிர் பார்க்கின்றோம்.

    ReplyDelete
  3. காரைநகரில் வலுவிழந்த ஊமை பெண்ணை வல்லுறவு புரிந்ததாக கூறப் படுவதில் உண்மை இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைகளில் குறிபிட்ட பெண் மீது வல்லுறவு புரியப் பட்டதட்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்று தெரிகிறது. மேலும் இரும்பு வாங்கச் சென்ற இரண்டு பெரும் எப்படி அப்பெண்ணை வல்லுறவு புரிந்திருக்க முடியும். அப்பெண்ணின் தாயார் என்ன செய்து கொண்டிருந்தார்.
    பயத்தினால் வாய் பேச முடியாத அந்தப் பெண் கத்தவே அயலவர்கள் அதனை தவறாக புரிந்து கொண்டனன்ர். வாலிபர்கள் பேச விடாமல் தாக்கப் பட்டு மரத்தில் கட்டி வைக்கப் பட்டு பிறகு போலீசில் ஒப்படைக்கப் பட்டுள்ளனர். வல்லுறவு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தாக்குதலும் அதட்கு பின்னரான சம்பவங்களும் நடந்துள்ளன. முசில்ம் சகோதரர்கள் சிலர் கூட விடயத்தை தீர இரு பக்கமும் விசாரிக்காமல் குற்றம் நிகழ்துள்ளது என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். இது தவறான போக்கு. முதலில் எதனையும் தீர விசாரிக்க வேண்டும்.
    அதனால் தான் நபி முஹம்மது ஸல் அவர்கள் தீர விசாரிப்பதை பற்றி கூறும் பொது பின்வருமாறு கூறினார்கள்.
    ஒருவர் தனது கன்னங்கள் உடைக்கப் பட்டு கண்கள் இரண்டும் வெளியே தொங்கும் நிலையில் உங்களிடம் வந்து இன்னார் தன்னை அடித்து விட்டார் என்று கூறினால் அதனை நீங்கள் நம்பாதீர்கள். முதலில் இரு பக்கமும் தீர விசாரியுங்கள். அதன் பிறகு முடிவுக்கு வாருங்கள் என்று.

    ReplyDelete
  4. இந்த கட்டுரையை எழுதியவர் ஒரு தமிழராக இருந்தால் தமிழீழ வரலாற்றில் அவரும் ஒரு துரோகியே ( பணத்திற்காக தாய் மொழியை விற்கும் கேவலம் கெட்டவர்). அது இருக்க ஒரு மிலேச்சத்தனமான பாலியல் வல்லுறவை நியாயம் கற்பிக்கும் விதம் கேலிக்குரியாதாக இருக்கிறது. ஒரு பாலியல் வன்புணர்வை நியாயப்படுத்த இன்னும் இரண்டு குற்றங்களை ஒப்பிட்டால் போதுமா?. பாலியல் கொடுரம் செய்த அந்த இளைஞர்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் கொடுக்கும் தண்டனை கொடுக்கவில்லையே என சந்தோசப்படுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.