Header Ads



வடக்கு முஸ்லிம்களுக்கு இழப்பீட்டை பெற்றுக்கொடுக்க ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும்


(இன்று வெள்ளிக்கிழமை 15-06-2012 வெளியாகியுள்ள நவமணி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தை இங்கு பதிவிடுகிறோம்)

  தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம் வலியுறுத்தப்பட்டுவரும் ஒரு காலகட்டத்தில் கொழும்பில் கடந்தவாரம் நடைபெற்ற வேர் அறுதலின் வலி கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேசப்பட்ட விடயங்கள் எமது கவனத்தை ஈர்த்திருந்தன.

  வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளின் பலாத்கார வெளியேற்றத்திற்கு உட்பட்ட முஸ்லிம்கள் தமது சொந்த வலிகளையும், வடக்கு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் தென்னிலங்கை முஸ்லிம்கள் தமது உணர்வுகளையும் கொட்டி பிரசவித்திருப்பதே இந்த கவிதை நூலாகும்.

  ஓரு சமூகத்தின் அவலங்களை சுமந்து வந்திருக்கும் இந்த கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கு தலைமை தாங்கிய முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கி தெரிவித்த கருத்துக்கள் முக்கியத்துவமிக்கதாக அமைந்திருந்தது.

  வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டிய பேசிய என்.எம். அமீன், 1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றபட்டபோது அவர்கள் இழந்த சொத்துக்களுக்கு இழப்பீட்டை பெற்றுக்கொடுப்பதற்கு ஒரு ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டுமென்றும், இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென்பதையும் சுட்டிக்காட்டி பேசியிருந்தார்.

  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனின் பூரண ஆசிர்வாதத்துடன் இந்நிகழ்வில் சிறப்பு அதீதியாக தமிழரசு கட்சியின் பாராளுமன்ற செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டிருந்தார்.

  தமிழ் கடும்போக்காளர் பட்டியலில் இருந்தும் தூர விலகி நிற்கும் மாவை சேனாதிராஜா அமர்ந்திருந்த மேடையில்தான் என்.எம். அமீன் வடக்கு முஸ்லிம்களுக்கு இழப்பீட்டை பெற்றுக்கொடுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

  முஸ்லிம் சமூகத்தின் சார்பில் என்.எம். அமீன் முன்வைத்துள்ள இந்தக் கோரிக்கை குறித்து கவனம் செலுத்தப்படுவது காலத்தின் தேவையாக உள்ளது.

  உலக வரலாற்றிலோ அல்லது இலங்கை வரலாற்றிலோ  ஒரு சமூகம் ஒருசில மணித்தியாலங்களில் தமது அசையும், அசையா சொத்துக்களை அப்படியே ஒரு அமைப்பிடம் பறிகொடுத்து என்றால் அது, 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கிலிருந்து முஸ்லிம்களை புலிகள் பலாத்காரமாக வெளியேற்றியபோது இழந்த அல்லது புலிகள் ஆயுதமுனையில் அபகறித்துக்கொண்ட இந்த சொத்துக்களாகத்தான் இருக்கவேண்டும்.

  ஒரு இறைமையுள்ள தேசத்தின் சொந்தக்காரர்கள் என்றவகையில் தாம் இழந்த சொத்துக்களுக்கு நட்டஈட்டை கேட்டுநிற்கும் உரிமை வடக்கு முஸ்லிம்களுக்கு உண்டு.

  இதுவிடயத்தில் அரசாங்கத்தின் வகிபாகம் எவ்வாறு விசாலமானதோ அதேபோன்று  தமிழர்களின் கூடிய ஆதரவைப்பெற்றதாக கருதப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் வடக்கு முஸ்லிம்கள் தொடர்பில் சில பொறுப்புகள் உண்டு.

  முஸ்லிம்கள் தாம் இழந்த சொத்துக்களுக்கு நட்டஈட்டை பெற்றுக்கொள்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கும் ஆதரவானது, அவ்வாறான ஒரு நடவடிக்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தையும் குதிக்கச்செய்வதற்கு துணைநிற்கும். எனவே வடக்கு முஸ்லிம்கள் தாம் இழந்தவற்றிக்கு நட்டஈட்டை பெற்றுக்கொள்ள உரிமையுடையவர்கள் என்று உரத்துக்குரல் கொடுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதியுடன் முன்வரவேண்டும்.

  அதேவேளை 1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் சவால்கள் தனித்துவமானவை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸகூட இந்த உண்மையை பகிரங்கமாக ஒருதடவை ஒப்புக்கொண்டிருந்தார். இந்நிலையில் தமது பாரம்பரிய தாயகமான வடக்கில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்கள் மற்றும் மீளக்குடியேற காத்திருக்கும் முஸ்லிம்களும் நிறையவே பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

  குறிப்பாக தமது பூர்வீகப் பிரதேசத்தில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்களின் எதிர்கொள்ளும் சிக்கல்கள் வேதனைமிக்கவை. தமிழ் அதிகாரிகள் தொடர்பில் வடக்கு முஸ்லிம்களிடமிருந்து வேதனையான குரல்களே ஒலித்துக்கொண்டிருக்கிறது. வடக்கு முஸ்லிமகள் விடயத்தில் தமிழ் அதிகாரிகளின் பாரபட்சம் பற்றி அமைச்சர் பஷில் ராஜபக்ஸகூட பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருந்தார்.

  அரசாங்க உயர்மட்டமே இவ்வாறு வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினை தனித்துவமானவை, அவர்கள் தமிழ் அதிகாரிகளின் பாரபட்சத்திற்கு உட்படுகின்றனர் என்ற உண்மை நிலையை ஒப்புக்கொண்டுள்ள நிலையல், இந்த வடக்கு முஸ்லிம்கள் தொடர்பில் ஒரு ஆணைக்குழவொன்றை நியமிக்கலாம்தானே என்ற ஆதங்கம் தற்போது அதிகரித்துள்ளது.

  இவ்வாறான ஒரு ஆணைக்குழவொன்றை நியமித்து வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, அவற்றிற்கான தீர்வுகளை கண்டுபிடித்து, அவற்றை நிவர்த்திக்க முன்வர வேண்டுமென்பதே முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

  வடக்கு முஸ்லிம்கள் தொடர்பில் இவ்வாறு சிறப்பு ஆணைக்குழவொன்றை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு உள்ளது. எனவே இதுவிடயத்தில் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டிய கடப்பாடு நமது முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு உண்டு. இவ்விடயத்தில் நமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் விரைந்து செயற்படுவார்களாயின் அது வடக்கு முஸ்லிம்களின் எதிர்கால இருப்புக்கு வலு சேர்ப்பதாக அமையுமென்பது வடக்கு முஸ்லிம்களின் நம்பிக்கையாகும்.

  நமது முஸ்லிம் அரசியல் தலைமைகளும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதுவிடயத்தில் விணைத்திறனுடன் பஙகாற்ற முன்வருவார்களா..?


No comments

Powered by Blogger.