சிங்கப்பூரில் பெண்கள் இனிமேல் ஜன்னல்களை சுத்தம் செய்ய முடியாது
சிங்கப்பூரில் ஜன்னல் சுத்தம் செய்யும் போது, பணிப் பெண்கள் தவறி விழுந்து பலியாவதால், அவர்கள் இதுபோன்ற பணிகளை செய்ய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. சிங்கப்பூரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த, இரண்டு லட்சம் பெண்கள் வீட்டு வேலை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பல அடுக்கு கொண்ட குடியிருப்புகளில் வேலை செய்யும் பணிப் பெண்கள், பால்கனியில் துணி காயவைக்கும் போதும், ஜன்னல்களை சுத்தம் செய்யும் போதும், தவறி கீழே விழுந்து விடுகின்றனர்.
இந்த ஆண்டில் மட்டும் ஒன்பது பெண்கள் இதுபோன்று கீழே விழுந்துள்ளனர். இவர்களில், ஏழு பேர் இறந்து விட்டனர். நேற்று முன்தினம் இந்தோனேசியாவை சேர்ந்த, 29 வயது பணிப் பெண், ஜன்னலை சுத்தம் செய்யும் போது, 12வது மாடியில் இருந்து, கீழே விழுந்த போது, கீழ் மாடியில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்றி விட்டனர். இந்த செய்தி, பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால், ஜன்னலை சுத்தம் செய்யும் பணியில், உரிய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு இல்லாமல் பணிப் பெண்கள் இந்த வேலையை செய்யக்கூடாது என, சிங்கப்பூர் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Post a Comment