Header Ads



இளவயது கர்ப்பம், பாலியல் துஷ்பிரயோகம் - தொலைபேசி காதலும் காரணமாம்


யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களை விட தற்போது இளவயதுக் கர்ப்பங்கள் அதிகரித்து வருவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே. முகுந்தன் தெரிவித்துள்ளார். இதனால் யாழ்ப்பாண சமூகம் எதிர்காலத்தில் பாரிய சமூக, பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கவேண்டிய ஆபத்து உருவாகுமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.

யூரோ மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற, இளவயது பெண்கள் கர்ப்பம் அடைவதால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலில் சிறப்புரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது,

பதின்ம வயது கர்ப்பங்கள் அதிகரிப்பிற்கு சமூக ரீதியான காரணிகள், தனிநபர் காரணிகள், பாலியல் சார்ந்த நடவடிக்கைகள் போன்ற மூன்று விடயங்களை பகுத்து நோக்க முடியும்.

இலங்கையைப் பொறுத்த வரையில் 1000 பேருக்கு 23 பேர் என்ற விகிதத்தில் இள வயதுக் கர்ப்பங்கள் நிகழ்வதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
இலங்கையில் குறித்த எண்ணிக்கையிலான சம்பவங்கள் பாலியல் வல்லுறவு சார்ந்தவையாகவே இருக்கின்றன. இப் பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் 89வீத மானவர்கள் பதின்ம வயதுப் பெண்களாக இருக்கின்றனர்.

1990ஆம் ஆண்டளவில் 365 பாலியல் வல்லுறவுச் சம்பங்கள் பதிவு பெற்றன. ஆனால் 2011இல் இவ் எண்ணிக்கை 1636 ஆக உயர்வடைந்திருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. சில பின் தங்கிய கிராமங்களில் இடம்பெறும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பதிவு செய்யப்படாமலும் இருக்கின்றன. இவற்றினை வைத்துப் பார்க்கும் போது, நாளாந்தம் பாலியல் வல்லுறவுச் சம்பவங்களிற்கு குறிப்பாக பதின்ம வயதினரே ஆளாகின்றனர்.

இத்தகைய இள வயதுக் கர்ப்பங்கள் சமூக ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சமூகத்தில் பாதிப்படைந்த பெண்களுக்கு இருக்கும் அந்தஸ்து அற்றுப் போகின்றது. அது மாத்திரமன்றி மருத்துவரீதியிலும் பல பிரச்சினைகள் எழுகின்றன குறிப்பாக போஷாக்கின்மை, உடலியல் சார்ந்த பிரச்சினைகள், பிரசவத்தின் போது தாய், சேய் இறப்பு, கர்ப்பகால குருதி அமுக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

யாழ். குடாநாட்டினைப் பொறுத்த வரையில் இளவயதுக்கர்ப்பங்கள் அதிகரித்து வருகின்றமையால் எதிர்காலத்தில் சமூக, பொருளாதார ரீதியில் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் இதனை கருத்தில் கொண்டு கிராம மட்ட மக்கள் பங்கேற்புடனான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.

இதனை கருத்தில்கொண்டு சமூக கட்டமைப்பில் பாதகமான நிலைகளை தோற்றுவிக்காமல் இருப்பதற்காக இள வயதுத் திருமணங்கள்,  மற்றும் இள வயதினரிடையே தலை தூக்கி வரும் தொலைபேசி காதல்களை கட்டுப்படுத்துவது அவசியமாகும். மேலும் பாலியல் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்குரிய விழிப்புணர்வுச் செயற்பாடுகளை கிராம மட்ட ரீதியாக மக்கள் பங்கேற்புடன் நடைமுறைப்படுத்த வேண்டியதும் அவசியமாகும்.

இதற்கு அரசு அரச சார்பற்ற நிறுவனங்கள் தமக்குள் ஒரு வலையமைப்பை உருவாக்கி சிறப்பாக இயங்குவதன் மூலம் இவ்வாறான இளவயதுக் கர்ப்பங்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்றவற்றை இயன்றளவு குறைக்க முடியும் என்றார்.

No comments

Powered by Blogger.