Header Ads



பிரிட்டன் கொண்டுவந்துள்ள புதிய சட்டங்கள் (முழு விபரம் இணைப்பு)

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத நாடுகளிலிருந்து தமது கணவன் அல்லது மனைவியை பிரிட்டனுக்கு வரவழைக்க விரும்பும் பிரிட்டிஷ் பிரஜைகளுக்காக அந்நாட்டு அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ள குடும்ப விசா தொடர்பான ஒழுங்கு விதிகளை நோக்கும் போது குடியேற்றவாசிகளுக்கு எதிரான போக்கு அதிகரித்துவருவதாக தென்படுகிறது. இந்தப் புதிய நடவடிக்கைகளால் இலங்கை உட்பட தெற்காசிய சமூகமே அதிகளவுக்கு பாதிக்கப்படும் நிலைமை காணப்படுகிறது. 1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்து அந்நாடுகளில் பிரஜாவுரிமை பெற்று வாழ்கின்றனர் .பிரிட்டனிலும்  சுமார் 3 இலட்சம் தமிழர்கள் வசிப்பதாக உத்தியோகப்பற்றற்ற புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. நிரந்தரவதிவிட உரிமை, பிரிட்டிஷ் பிரஜாவுரிமை, மாணவர் விசா, தொழில் விசாவென பல்வேறு வகையறாக்களின் கீழ் அங்கு தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இப்போது பிரிட்டன் அறிமுகம் செய்திருக்கும் ஒழுங்கு விதிகள் குடும்ப விசாவை மையப்படுத்தியவையாகும். 

“போலியான திருமணங்கள் பல்கிப்பெருகிக் காணப்படுவதாகவும் ஆங்கிலம் பேச முடியாதவர்களுக்கு பிரிட்டனில் குடியுரிமை பெற்று வாழ அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வரி செலுத்தும் மக்களுக்கு சுமையை ஏற்றும் குடியேற்றவாசிகளை தடுத்து நிறுத்துவதற்கு பொருத்தமான சட்டவிதிகள் இல்லாத நிலையில் அதில்மாற்றத்தைக் கொண்டு வருவதாகவும் பிரிட்டனின் உள்துறை அமைச்சர் தெரேசாமே கூறியிருக்கிறார். பிரிட்டனில் தமது மனைவி அல்லது கணவனை தருவிக்க விரும்பும் எவரும் ஆகக் குறைந்த வருமானமாக ஆண்டொன்றுக்கு 18600 ஸ்ரேலிங் பவுண்ஸை பெறுபவராக இருக்க வேண்டும். பிள்ளை இருந்தால் 22400 ஸ்ரேலிங் பவுண்ஸ் வருமானம் பெறுபவராக இருப்பதும் மேலதிகமாக இருக்கும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தலா 2400 ஸ்ரேலிங் பவுண்ஸாக வருமானத் தொகை கூடியிருக்க வேண்டும். உறவினரை வரவழைக்க விரும்புவோர் பொது நிதி எதுவுமில்லாமல் அவரே முழுமையாக இருக்க வேண்டும். பெற்றோர், பாட்டன், பாட்டி, மகன்மார், மகள் மார், சகோதரர், சகோதரிகள் ஆகிய நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் இந்த குடும்ப விசாக்களுக்கு அனுமதி வழங்கப்படும் மாமன், மாமி, சிறிய தந்தை, தாய் ஆகியோருக்கு குடும்ப விசா வழங்கப்படாது.

 அதே சமயம் பிரிட்டனில் குடியேற விருபும் விண்ணப்பதாரிகள் 2013 அக்டோபர் தொடக்கம் “பிரிட்டனில் வாழ்க்கை’ பரீட்சையில் சித்தியடைய வேண்டும் அத்துடன், இடை நிலைத்தரத்தில் ஆங்கில மொழிப் பரீட்சையில் சித்தியடைந்ததிருக்க வேண்டும். புதிய ஜேசடிகளுக்கான நன்னடத்தைக் காலம் 2 வருடத்திலிருந்து 5 வருடங்களாக  அதிகரிக்கப்படும். குடும்ப விசா மறுக்கப்பட்டோருக்கான மேன் முறையீட்டுக்கான முழுமையான உரிமை அகற்றப்படும் என்று பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் தெரேசாமே அறிவித்திருக்கிறார். இந்தப் புதிய சட்ட மூலத்தின் பிரகாரம் குடும்பத்தைப் பராமரிக்கிறார் என்பதை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் திருப்பி அனுப்பப்படுவதை தவிர்ப்பதற்கான உரிமையும் இல்லாமல் போகும் நிலைமை காணப்படுகிறது.

ஆனால், இந்த நடவடிக்கைகள் மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய சாசனத்தின் 8 ஆவது சரத்தை நேரடியாக மீறுவதாகக் காணப்படுகிறது. இந்த சாசனத்தின் 8 ஆவது சரத்தானது குடும்ப வாழ்க்கைக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது.  நலனோம்பல் நடவடிக்கைகளால் ஏற்படும் சுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கையாகவே இந்தச் சட்டவிதிகளை நியாயப்படுத்த பிரிட்டன் முற்படுகிறது. ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியின் அங்கமாகவே உண்மையில் இதனை நோக்க வேண்டியுள்ளது.  இதனடிப்படையிலேயே தற்பாதுகாப்பு, முன்நகர்வாக குடிவரவுத் துறைக் கொள்கையை அந்நாடு மாற்று கின்றது என்று அனுமானிக்க முடியும்.

அத்துடன் வெளிநாட்டுச் சமூகங்கள் மத்தியில் காணப்படும் “பலவந்தத் திருமணங்களை’ குற்றநடவடிக்கைகளாக கருதுவதற்கும் பிரிட்டன் திட்டமிடுகிறது.  ஆனால், இந்தப் “பலவந்தத் திருமணங்கள்’ தொடர்பாக தெரிவிக்கப்படும் வரைவிலக்கணம் குழப்பமானதாக உள்ளது. பொருளாதாரம், சமூகம், கலாசாரம் என்பனவற்றின் அடிப்படையில் “பல்கலாசாரத்தினால்’  பாரிய அளவுக்கு பிரிட்டன் அனுகூலமடைந்திருக்கின்றது. இந்திலையில் தனது தாராளவாதக் கொள்கையை அந்நாடு உறுதியாகப் பற்றிப் பிடிப்பதுடன் குடிவரவுத்துறை விதிமுறைகள் குறித்து மீளச் சிந்திப்பது வரவேற்புக்குரியதாகும்.

1 comment:

  1. nalla podiyan13/06/2012, 08:11

    லண்டன் ஒன்றும் சுவர்க்கம் இல்லை கட்டாயம் அங்கு சென்று வாளுவதத்க்கு.நாம் கஷ்டம் துன்பதில்லும் எமது நாட்டில் நிம்ம்மதியாக வாழலாம்.லண்டனில் கொலை,கொள்ளை இவைகள் எல்லாம் சர்வசாதாரணம்.நம் நாட்டில் பசிக்கு உணவு இல்லை என்றால்லும் ஒரு பிலாக்க போலசிக்க தின்று உயிரை வாழ வைக்கலாம்,ஆனால் அது லண்டனில் கிடைக்காது.

    நம் நாட்டில் இருந்து சென்றவர்கள் ஒரு சிலர் வியாபாரம் செய்றங்கள் எல்லாம் ஹரமக்ஹா தான்,கடைகளை தானே நெருப்பு வைத்து கொண்டு இன்சூரன்ஸ் சல்லி எடுப்பார்கள் அல்லது பொய் திருட்டு என்று சொல்லி இன்சூரன்ஸ் எடுப்பார்கள்.அங்கு யாறும் இறக்கம் பாசத்தோடு நடப்பது இல்லை.

    இவை எல்லாம் என்னுடைய அனுபவம் லண்டனில் விசிட் பண்ணும் போது.

    ReplyDelete

Powered by Blogger.