Header Ads



முபாரக் மீது மீண்டும் விசாரணை நடத்துங்கள் - இஹ்வானுல் முஸ்லிம்மின் கோரிக்கை

ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்திய மக்கள் மீது ராணுவத்தை உபயோகித்து கொலைச் செய்த வழக்கில் ஹுஸ்னி முபாரக்கிற்கு ஆயுள்தண்டனை வழங்கியதற்கு ஆதரவும், எதிர்ப்பும் எகிப்தில் கிளம்பியிருக்கும் சூழலில், தண்டனை போதாது என்றும் முபாரக்கை மீண்டும் விசாரணைச் செய்யவேண்டும் என இஃவானுல் முஸ்லிமீன் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

முபாரக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது தேவைக்கு அதிகமாகவே ஆதாரங்கள் இருந்தபோதிலும் அரசு தரப்பு வழக்குரைஞர் அவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதில் தோல்வியைத் தழுவியுள்ளார் என்று இஃவான் குற்றம் சாட்டியுள்ளது.

இஃவானுல் முஸ்லிமீன் தவிர மனித உரிமை அமைப்புகளும், பலியானவர்களின் உறவினர்களும் இத்தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்திய மக்களை கொலைச்செய்ய தலைமை தாங்கிய முபாரக் அரசின் ஆறு பாதுகாப்பு தலைமை அதிகாரிகளை நீதிமன்றம் விடுவித்துள்ளதை அங்கீகரிக்க இயலாது என்று ஆம்னஸ்டி இண்டர்நேசனல் தெரிவித்துள்ளது.

முபாரக்கிற்கு தண்டனை வழங்கியது வரவேற்கத்தக்கது என்றாலும் சரியான நீதியை நடைமுறைப்படுத்த நீதிமன்றத்தால் இயலவில்லை என்று ஆம்னஸ்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து கெய்ரோ நீதிமன்ற வளாகத்தில் மோதல் உருவானது. முபாரக்கின் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் மோதலில் ஈடுபட்டனர். போலீசார் மீது கல்வீச்சும் நடந்தது. முபாரக்கை தூக்கிலிடக்கோரி மக்கள் தஹ்ரீர் சதுக்கத்தை நோக்கி திரளுவதாக அல்ஜஸீரா கூறுகிறது. இம்மாதம் அதிபர் தேர்தலின் 2-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் வேளையில் எகிப்து மீண்டும் போராட்ட சூழலுக்கு செல்கிறது.

இஸ்லாமிய அமைப்புகள் தீர்ப்பை எதிர்த்து போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

அதேவேளையில், நீதிமன்றத் தீர்ப்பிற்கு பிறகு தோரா சிறைக்கு முபாரக் கொண்டுச் செல்லப்பட்டார். ஆனால், அவரது உடல்நிலை சீர்கெட்டதை தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அல் அஹ்ராம் பத்திரிகை கூறுகிறது.

நேற்று ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபீபுல் ஆத்லியும் இதர நபர்களும் தோரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் உடல்நிலை மோசமடைந்தாக காரணம் காட்டி முபாரக் இதுவரை மருத்துவமனையில்தான் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதிபர் தேர்தலில் போட்டியிடும் எஃப்.ஜே.பியின் வேட்பாளர் முஹம்மது முர்ஸி கூறுகையில், தான் வெற்றிப் பெற்றால் முபாரக் தண்டனை முடியும்வரை சிறையில்தான் அடைக்கப்படுவார் என்று கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.