இலங்கையில் அதிகரிக்கும் போதைப்பொருள் - இவ்வருடத்தில் 19,057 பேர் கைது
2012 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இதுவரை போதைப் பொருள் கடத்தல் மற்றும் அவற்றை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில் நாடளாவிய ரீதியில் 19,057 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு விசேட அதிரடிப்படையினர் மற்றும் பிற பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல் வேட்டையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த இடைப்பட்ட காலப்பகுதியில் மாத்திரம் 12 கிலோ 265 கிராம் ஹெரோயின், 51,451 கிலோ கஞ்சா, 4 கிலோ 44 கிராம் ஹொகெய்ன், 1 கிலோ 380 கிராம் அபின், 280 மில்லி கிராம் ஹான்ஸ் 3 கிலோ மெனமிபிடமின் என்பவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போதைப் பொருள் மற்றும் அபாயகரமான ஒளடதங்களை கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழ் 2 கிராம் ஹெரோயின், 2 கிராம் ஹொகெய்ன், 500 கிராம் அபின், 3 கிராம் மோபீனுக்கு மேல் தனியொருவரோ அல்லது குழுவோ வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு வைத்திருப்பவர்களைக் கைது செய்தால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து சட்ட விரோதமாக போதைப் பொருட்களைக் கொண்டு வருபவர்கள் விமான நிலையங்கள், துறைமுகங்கள், விற்பனை முகவர்கள் அல்லது தபால் மூலமாக இவற்றை இலங்கைக்குள் கொண்டு வருகின்றனர். எனவே இவ்வாறான முக்கியமான பகுதிகளை கண்காணிக்கவென இலங்கை சுங்க அதிகாரிகள், குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் கடற்படையினரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளனர். இவர்களின் பார்வையில் இருந்து தப்பிக்கும் சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிகாரிகளும் இராணுவத்தினரும் கைது செய்கின்றனர்.
போதைப் பொருள் கடத்தல், விற்பனை அல்லது சந்தேக நபர்கள் குறித்து தகவல் கிடைத்தால் பொது மக்கள் பொலிஸாருக்கு தெரிவிக்கலாம். பொது மக்களின் பங்களிப்பால் முடிந்தவரை எமது நாட்டில் நடைபெற்றுவரும் சட்டவிரோத செயற்பாடுகளை முடிந்தவரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதன் போது தெரிவித்தார்.
போதைப் பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு 0112343334/ 011 2447943, பொலிஸ் கட்டளையிடும் மத்திய பிரிவு 011 2854880, அவசர அழைப்புப் பிரிவு 119 போன்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவலை வழங்கலாமெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment