ஜனாதிபதி மௌனம் கலைப்பாரா..?
(இன்று வியாழக்கிழமை 10 ஆம் திகதி வெளியாகியுள்ள விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தை இங்கு தருகிறோம்)
தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தை முன்னிறுத்தி பௌத்த தீவிரப் போக்கு கொண்ட பிக்குகள் தலைமையிலான குழுவினர் முன்னெடுத்துவரும் விரும்பத்தகாத நடவடிக்கைகள் இந்த நாட்டின் அமைதிக்கு ஆரோக்கியமான ஒன்றாக தெரியவில்லை.
இனவாதத்தையும் முஸ்லிம்கள் மீதான வெறுப்பையும் மிகப் பகிரங்கமாகவே வெளிப்படுத்தும் இந்த பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினரின் சட்டத்தை மீறும் நடவடிக்கைகள் கட்டுக்கடங்காது செல்வதையே அவதானிக்க முடிகிறது.
தம்புள்ளை பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையை நடத்த விடாது தடைகளை ஏற்படுத்தியதுடன் அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்ததோடு பள்ளிவாசலுக்குள் நுழைந்து சேதம் விளைவித்த பௌத்த பிக்குகளுக்கு எதிராக இதுவரை எந்தவித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. குறித்த அராஜகத்தை தலைமையேற்று நடத்திய இனாமலுவே சுமங்கல தேரரிடம் இதுவரை பொலிசார் ஒரு வாக்குமூலத்தைக் கூட பெற்றிருப்பதாக தெரியவில்லை.
இவ்வாறானதொரு தாக்குதல் நடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறு சம்பவ தினத்துக்கு முன்னரே தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தும் பாதுகாப்புத் தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதோடு குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழிதிறந்து கொடுத்தமை தொடர்பில் எந்தவொரு அரசாங்க உயர்மட்ட அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அன்றைய தினம் அராஜகத்தை அரங்கேற்றியதோடு மட்டும் நின்றுவிடாது தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை வெளியிட்டு வரும் இனாமலுவே சுமங்க தேரரின் வாயை அடைப்பதற்கு எவரும் இதுவரை அழுத்தங்களை வழங்கவும் இல்லை.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள குறித்த தேரர் முஸ்லிம்கள் இந்த நாட்டைக் கொள்ளையடிக்க வந்தவர்கள் எனவும் பௌத்தர்களின் வரலாற்றை சூறையாட முனைவதாகவும் அப்பட்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கிறார். அவரது நச்சுக் கருத்துக்கள் இளம் பௌத்த தலைமுறையினர் மத்தியில் நிச்சயம் தவறான கருத்தியல்களைக் கட்டமைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அது மாத்திரமன்றி முஸ்லிம்களுக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டங்களும் பிரசாரங்களும் இன்று தம்புள்ளையில் தொடங்கி களுத்துறைக்கும் காலிக்கும் கொழும்புக்கும் பரவத் தொடங்கியுள்ளமையும் இந்த நாட்டின் பௌத்த-முஸ்லிம் உறவுக்கு ஆரோக்கியமானதாக தெரியவில்லை.
குறிப்பாக வெசக் பண்டிகை நிகழ்வுகளுக்காக சில பகுதிகளில் வெளியிடப்பட்ட பௌத்த போதனைகள் அடங்கிய பிரசுரங்களில் கூட நேரடியாகவே முஸ்லிம்களைத் தாக்கும் வகையிலும் முஸ்லிம்களை இந்த நாட்டின் துரோகிகளாகச் சித்தரிக்கும் வகையிலும் திட்டமிட்ட பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதும் மிகவும் ஆபத்தானதாகும்.
தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்திற்கு இதுவரை உறுதியானதொரு தீர்வு எட்டப்படாத நிலையில் பௌத்த தீவிரப் போக்காளர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுப்பது தொடர்பில் ஏன் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் மௌனமாக இருக்கிறார்கள் என்பது புரியவில்லை.
தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் உலமா சபை பிரதிநிதிகளும் ஜனாதிபதியைச் சந்தித்து விளக்கியிருக்கின்றனர். வெசாக் கொண்டாட்டங்கள் முடியும் வரை அமைதி காக்குமாறும் அதனைத் தொடர்ந்து நிலையான தீர்வு ஒன்றைப் பெற்றுத் தருவதாகவும் ஜனாதிபதி இவர்களிடம் உறுதியளித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டதையடுத்து முஸ்லிம்கள் அமைதி காப்பதையும் அவர் உரிய தீர்வைப் பெற்றுத் தருவார் எனும் எதிர்பார்ப்பில் இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
ஆனால் துரதிஷ்டவசமாக இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பௌத்த தரப்பினர் மாத்திரம் தொடர்ந்தும் இதனைப் பெரிதுபடுத்தியும் சட்டத்தை மீறும் வகையிலுமே நடந்து வருகின்றனர். இவர்களைக் கட்டுப்படுத்துவதற்கோ அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களை தடுத்து நிறுத்துவதற்கோ ஜனாதிபதி எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காது மௌனம் சாதிப்பது முஸ்லிம்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
முஸ்லிம்களை மாத்திரம் அமைதியாக இருக்குமாறு கூறிவிட்டு பௌத்த தீவிரப் போக்காளர்களின் செயல்களைக் கண்டுகொள்ளாதிருப்பதன் மர்மம் என்ன என்பதுதான் நமக்கும் புரியாத புதிராக இருக்கிறது.
திட்டமிடப்பட்ட மறைமுகமான நிகழ்ச்சி நிரல் ஒன்று அரச ஆதரவில் அரங்கேற்றப்படுவதகவே சந்தேகிக்க வேண்டிஉள்ளது. முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டி அதன் மூலம் முஸ்லிம் களுக்கு எதிராக அடக்குமுறையை கட்டவிழ்த்து விட தருணம் பார்ப்பதாகவே எனக்குப் படுகிறது
ReplyDeleteஅரசியல், மதமயப்படுதலின் விளைவே தற்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் .அன்பையும் ,பண்பையும் போதிக்க வேண்டிய மத குருமார்கள் இனவெறியைத் தூண்டி தங்கள் இருப்பை தக்க வைக்கும் முயற்சிதான் தமிழ் ,கிருஸ்தவ ,முஸ்லிம் இன வெறிப் பிரச்சாரம் .தனித் தமிழ் ஈழம் என்ற கனவுகளுடன் முஸ்லீம்களை கருவறுத்த
ReplyDeleteபுலிகள் எங்கே போனார்கள் என்பதை இன வெறியர்கள் சிந்தித்துப்பார்த்தால் ஒரு முறை நல்லது .தமிழர்கள் மன்னிக்கவும் ,புலிகள் மட்டும் தான் எங்கள்வெறுப்புக்குரிய மிருகங்கள் .இன்றும் உயிரைக் கொடுத்துப் பழகும் தமிழ்
நண்பர்கள் எங்களுக்கு இருக்கிறார்கள் .
ஜனாதிபதியின் மவுனம் அவரின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு கொண்டுபோகாமல் இருந்தால் சரிதான் .வாலிபர்களே! தரம் கெட்ட அரசியல்வாதிகளின் மற்றும் மார்க்கம் தெரியாத அரைகுறைகளின் சொல் கேட்டு சீரழிவுகளை ஈடுபடுத்தி விடாமல் நம்முடைய ஆயுதம், தொழுகை துஆ மூலம் உதவி தேடுங்கள் .பொறுமையாளர்களுடன் அல்லாஹ்
இருக்கிறான் .
Meeraan