எகிப்தில் அமைதியான தேர்தல்
எகிப்தில் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முதல் முறையாக அதிபர் தேர்தல் நடந்தது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று ஆர்வமுடன் வாக்களித்தனர். எகிப்தில் கடந்த 1981ம் ஆண்டு அதிபரானவர் ஹோஸ்னி முபாரக். முப்பது ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி மக்களின் கடும் அதிருப்தியை சந்தித்தார். கடந்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி கெய்ரோவில் முதல் முறையாக முபாரக்கை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் குதித்தனர். நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. அவர்களில் பலரை கொன்று குவித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அதிபர் பதவியில் இருந்து முபாரக் விலகினார். அவர் மீது இப்போது விசாரணை நடந்து வருகிறது.
ஆட்சி பொறுப்பேற்ற ராணுவ கவுன்சில், அதிபர் தேர்தல் நடத்த உறுதி அளித்தது. அதன்படி, எகிப்தில் நேற்று தேர்தல் நடந்தது. இதில் 13 பேர் போட்டியிடுகின்றனர். எனினும், வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் அமர் மூசா, முன்னாள் பிரதமர் அகமது ஷபிக் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலை கண்காணிக்க 14 நாடுகளை சேர்ந்த 22 சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வாக்குப் பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆனால், 6 மணிக்கே வாக்குச் சாவடியை மக்கள் முற்றுகையிட்டு ஆர்வத்துடன் காத்திருந்தனர். இரவு 8 மணி வரை வாக்குப் பதிவு நடந்தது.
தேர்தலின் போது எந்த வன்முறையும் நடக்கவில்லை. அமைதியான முறையில் பெண்கள் உள்பட லட்சக்கணக்கானோர் வாக்களித்தனர். இந்த தேர்தலில் அதிக வாக்குகள் பெறும் 2 பேர் ஜூன் மாதம் நடக்கும் அடுத்த கட்ட தேர்தலை சந்திப்பார்கள். அதில் வெற்றி பெறுபவர்கள் ஜூலை 1ம் தேதி அதிபராக பதவியேற்பார்கள். முதல் கட்ட வாக்குப் பதிவு இன்றுடன் முடிகிறது.


Post a Comment