ரவூப் ஹக்கீம் அனுதாபம் தெரிவிப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான மசூர் சின்னலெப்பையின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத ஓர் இழப்பாகும் என நீதியமைச்சரும் கட்சி தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கட்டார் சென்றுள்ள நீதியமைச்சர் ஹக்கீம் அங்கிருந்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த தனது அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"மசூர் சின்னலெப்பை சிறந்த அரசியல் பின்னணியையுடைய கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை நீண்ட காலமாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தலைவராக பணியாற்றியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் ஆளுமையினாலும், முஸ்லிம் காங்கிரஸின் கொள்கையினாலும் கவரப்பட்டு அப்போது அவர் சார்ந்திருந்த அரசியல் கட்சியினால் தனக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரமிக்க பதவியினையும் துறந்து எமது கட்சியிலே இணைந்து கொண்டார்.
முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக கடமையாற்றிய இவர் கட்சி முகங்;கொண்ட அனைத்து தேர்தல்களின் போதும் எமது கட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடாவடித்தனங்களுக்கும், அட்டகாசங்களுக்கும் அடிபணியாது துணிச்சலுடன் அவற்றை அடக்கி கட்சியின் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டதை எம்மால் மறக்க முடியாது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எமது கட்சியின் சார்பாக ஓரு தேசிய பட்டியல் வேட்பாளராக களமிறங்கிய இவரின் பங்களிப்பு இரண்டு உறுப்பினர்களை திகாமடுல்ல மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வென்றெடுப்பதற்கான பலத்தை சேர்த்தது.
மீண்டும் ஒரு மாகாண சபை தேர்தலுக்கு அனைவரும் தயாராகிக் கொண்டிருக்கின்ற நிலையில் இவரது திடீர் மறைவு கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவின் போது நான் நாட்டில் இல்லாமல் போனதால், ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்துகொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை உருவானதற்காக வருந்துகின்றேன்.
அன்னாரது திடீர் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது மனைவி பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் எனதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு எல்லாம் வல்ல இறைவன் அவரது பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் சுவனபதி அருள வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்கின்றேன்" என்றார்.
Post a Comment