Header Ads



தெஹிவளை விகாராதிபதியுடன் நல்லிணக்க சந்திப்பு - பள்ளிவாசலுக்கு அருகில் அழுகிய இறைச்சி



தெஹிவளையில் அல்லாஹ்வின் இல்லமான தாருர் ரஹ்மான் அகற்றப்பட வேண்டுமென வலியுறுத்தி வரும் அப்பிரதேச விகாராதிபதி கலாநிதி சிறிதர்ம அசோக்க தேரருடன் முஸ்லிம் தரப்பினர் நேற்று திங்கட்கிழமை இரவு முக்கிய நல்லிணக்க சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சர் றிசாத் பதியுதீன், கல்கிஸ்ஸ, தெஹிவளை மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் திருமதி மரீனா மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் தலைவரும், முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான என்.எம். அமீன் ஆகியோர் இந்த நல்லிணக்க சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

வடமாகாணத்தில் காணப்படும் பௌத்த விகாரைகளுக்கு தான் அமைச்சராக இருந்துபோது நிதியொதுக்கீடுகள் செய்தமை, வடக்கிலிருந்து சிங்களவர்கள் வெளியேற்றப்பட்டவுடன் அந்த விகாரைகளுக்கு முஸ்லிம்கள் பாதுகாப்பளித்தமை சம்பவங்களை அமைச்சர் றிசாத் பதியுதீன் இதன்போது பௌத்த விகாராதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் முஸ்லிம்கள் தரப்பில் தவறுகள் இருக்குமாயின் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும், அரபு நாடுகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு காணப்படும் செல்வாக்கு சிங்கள - முஸ்லிம் முரண்பாடுகள் காரணமாக முறிவு ஏற்பட்டுவிடக்கூடாதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாநகர சபை உறுப்பினர் திருமதி மரீனாவும் பிரதேச சிங்கள - முஸ்லிம் உறவின் அவசியத்தை இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

நவமணி பிரதம ஆசிரியர் என்.எம். அமீன் சிங்கள - முஸ்லிம் உறவின் அவசியம், கடந்தகாலங்களில் இருசமூகங்களுக்குமிடையே காணப்பட்ட உறவு, அந்த உறவு எதிர்காலத்திலும் தொடரப்பட வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம் தரப்பினரின் கருத்துக்களை நன்கு உள்வாங்கிக்கொண்ட விகாராதிபதி, இரு சமூகுங்களுக்கிடையேயும் தோன்றும் பிரச்சினைகளை தீர்த்துவைக்க பிரதேச ரீதியிலான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியது அவசியமென குறிப்பிட்டதாக இந்தச்சந்திப்பில் பங்கெடுத்த என்.எம். அமீன் யாழ் முஸ்லிம் இணையத்திற்கு குறிப்பிட்டார்.

நேற்று திங்கட்கிழமை இரவு பள்ளிவாசலுக்கு மேல்மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான விஜயம்செய்து பிந்திய நிலவரங்களை கேட்டறிந்துகொண்டுள்ளார்.

பள்ளிவாசல் விடயத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன், மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், மாநகர சபை உறுப்பினர் திருமதி மரீனா ஆகியோரின் செயற்பாடுகளுக்கு பிரதேச முஸ்லிம்கள் நன்றி கூறியதாகவும் என்.எம்.அமீன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை தெஹிவளை  தாருர் ரஹ்மான் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் பொலிஸார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பள்ளிவாசலுக்கு அருகில் நேற்று அடையாளம் தெரியாதவர்கள் அழுகிய இறைச்சியை வீசிவிட்டுச் சென்றுள்ளதாகவும் அறியவருகிறது.

1 comment:

  1. ஐயோ இந்த பிக்குமர்ஹளுக்கு எப்படி சொன்னல்லும் விளங்கபோவதில்லை..

    ReplyDelete

Powered by Blogger.