திருகோணமலை கடலில் திமிங்கலம்/டொல்பில்களை கண்டுகளிக்க விரும்புகிறீர்களா..?
ஆழ்கடலில் டொல்பின்களின் சாகசங்களை கண்டு களிக்கும் பொருட்டு திருகோணமலை துறைமுகத்திலிருந்து அதிசொகுசு கப்பல் சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இலங்கை கடற்படைக்குச் சொந்தமான (பிரின்சஸ் ஒப் லங்கா) என்ற அதிசொகுசு கப்பலே இந்த சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அந்த கப்பலின் கெப்டனும், திமிங்கிலங்களை கண்டுகளிக்கும் திட்டத்தின் முகாமையாளருமான கொமாண்டர் கோசல விஜேசூரிய தெரிவித்தார்.
திருகோணமலை துறைமுகத்திலிருந்து எதிர்வரும் 2ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள இந்த கப்பல் சேவை எதிர்வரும் நவம்பர் மாதம் வரை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிரதி சனி, ஞாயிறு தினங்களில் காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை இந்த கப்பல் சேவை இடம்பெறவுள்ளது. ஆழ் கடலுக்குச் சென்று அங்கு இடம்பெறும் திமிங்கிலங்கள் மற்றும் டொல்பின்களின் சாகசங்களை கண்டுகளிக்க விரும்பும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கு அழைப்பு விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கப்பலின் ஆசனங்களின் அமர்ந்தவாறே இரு பக்கங்களிலும் உள்ள கண்ணாடிகள் மூலம் பார்வையிடவுள்ளதுடன், திறந்த வெளியிலிருந்தும் கண்டுகளிக்க முடியும். முற்றிலும் குளிரூட்டப்பட்ட மேற்படி கப்பலில் தொலைக்காட்சி மற்றும் சிற்றுண்டிச்சாலை வசதிகளும் உள்ளன.
மேற்படி கப்பலில் பயணம் செய்ய விரும்பும் உள்ளூர் வயது வந்த உல்லாச பயணி ஒருவரிடமிருந்து 3500 ரூபாவும் 6 வயது தொடக்கம் 12 வயது வரையிலானோரிடமிருந்து 2000 ரூபாவும், வெளிநாட்டு வயது வந்த பயணியிடமிருந்து 100 அமெரிக்க டொலரும், 6 வயது தொடக்கம் 12 வயது வரையிலானோரிடம் அரைவாசி கட்டணமும் அறவிடப் படவுள்ளதாக அந்தக் கப்பலின் கெப்டன் தெரிவித்தார்.
இந்தக் கப்பலில் பயணித்து ஆழ்கட லில் திமிங்கிலம், டொல்பின்களின் சாகசங்களை கண்டுகளிக்க விரும்புபவர்கள் 0777323050 என்ற ஹொட்லைன் மூலம் தொடர்பு கொள்ள முடிவதுடன், www.whalewatching.navy.lk என்ற இணையத்தள முகவரி ஊடாக மேலதிக விபரங்களை தெரிந்து கொள்ள முடியும்.

Post a Comment