Header Ads



இலங்கை நிலப்பரப்பு போன்று 23 மடங்கு கடல் எல்லைப் பகுதி நாட்டுக்கு உரிமையாகிறது..

TN

இலங்கையின் நிலப்பரப்பைப் போன்று 23 மடங்கு கடல் எல்லைப் பிரதேசத்தை உரிமையாக்கிக் கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் கடல் வளம் தொடர்பான ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் முன்னோடி நடவடிக் கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இச்செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட உயர்மட்டக் குழுவொன்று நேற்று நியூயோர்க்கிற்குப் பயணமாகியுள்ளது.

இலங்கையின் கடல் எல்லை மற்றும் அதன் உரிமையைப் பேணுவது தொடர்பில் செயற்படுவதற்காக அண்மையில் அமைச்சரவையினால் துறைசார்ந்த நிபுணர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டு ‘தேசிய கடல் நடவடிக்கைக்குழு செயலகம்” என்ற நிறுவனமும் ஸ்தாபிக்கப்பட்டது.
அதன் தலைவராக கிறிஸ் தர்மகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். புலிச்சரிதவியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் என். பி. விஜயானந்த உட்பட பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட பல அமைச்சுக்களின் அதிகாரிகள் இதில் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு உரித்தான கடல் வள உரிமையைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலான சகல விடயங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்வது மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்வைக்கும் ஆவணங்களைத் தயார்படுத்தல் உள்ளிட்ட பொறுப்புக்கள் இந்த குழுவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேற்படி குழுவின் தலைவர் கிறிஸ்தர்மகீர்த்தி தலைமையிலான தூதுக்குழு நேற்று அமெரிக்கா செல்ல முன்பு தகவல் திணைக்களத்தில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தியது. இத்தூதுக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பில் அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு விளக்கினர். நேற்றைய இம்மாநாட்டில் தேசிய கடல் நடவடிக்கை குழுசெயலகத்தின் தலைவர் கிறிஸ்தர்மகீர்த்தியும், அதன் உறுப்பினரும் புவிச் சரிதவியல் ஆய்வு நிறுவனத் தலைவருமான என். பி. விஜயானந்தவும் விளக்கமளித்தனர்.

இவர்கள் மேலும் தெரிவிக்கையில்:- இலங்கை மற்றும் கடல் சூழலைக் கொண்ட நாடுகளுக்கு 200 கடல் மைல் தூரம் எல்லைகளாகவுள்ளன. அந்த சுற்றுப்பரப்பில் உள்ள எரிபொருள் மற்றும் கனிப்பொருட்கள் ஏனைய வளங்களை அந்தந்த நாடுகள் உரிமையாக்கிக் கொள்ள முடியும்.

அதேவேளை, சர்வதேச கடல் சட்டங்களுக்கு அமைவாக 800 கடல் மைல் தூர எல்லையை தக்கவைத்துக்கொள்ளும் வரப்பிரசாதமும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு உள்ளது.

இதனடிப்படையில் இலங்கைக்கு உரித்தாக்கிக் கொள்ளக்கூடிய கடல் எல்லை தொடர்பான தெரியப்படுத்தும் 450 பக்கங்களைக்கொண்ட ஆவணம் 2009 மே மாதம் 8ம் திகதி ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு முன்பதாக மேலும் 42 நாடுகள் கடல் எல்லை தொடர்பான இத்தகைய ஆவணங்களை ஐ. நா விற்கு வழங்கியுள்ள நிலையில் ஐ. நா. இது சம்பந்தமாக இரண்டு வருடங்களுக்கு மூன்று நாடுகள் என்ற வகையிலேயே பரிசீலினைக்கு எடுத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் 2028ம் ஆண்டிலேயே இலங்கையின் வேண்டுகோள் பரிசீலனைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நீண்ட காலக்கெடுவைக் குறைப்பது சம்பந்தமாக 120 நாடுகள் இணைந்து ஐ. நா.வுக்கு ஆலோசனைகளை முன்வைத்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையானது மேற்படி நாடுகளுக்கு அநீதி ஏற்பட்டிருப்பதை ஏற்றுக்கொண்டு எதிர்வரும் ஜூன் மாதம் கடல்வளம் தொடர்பான வருடாந்த மாநாட்டில் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க உத்தேசித்துள்ளது.

இந்த மாநாடு நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ளதுடன் இந்த மாநாட்டில் மேற்படி அநீதிக்குத் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும்வகையில் பேச்சுவார்த்தை நடத்தவே இலங்கை தூதுக்குழு  நியூயோர்க் செல்கிறது.

எவ்வாறாயினும், கடல் வளம் சம் பந்தமான ஐ. நா. ஆணைக்குழுவில் இல ங்கையர் ஒருவரையும் இணைத்துக்கொள்ளச் செய்வதற்கான காத்திரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.