Header Ads



'வாப்பா.. பள்ளிக்குப் போக வாங்க' - தமிழ் ஊடகங்களின் குற்றச்சாட்டு தகர்ப்பு

(விடிவெள்ளி பிரதம ஆசிரியர் நண்பர் பைரூஸின் அனுமதியுடன் இந்த கட்டுரையை இங்கு மீள்பதிவிடுகிறோம்)

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் சிறுவன் ஒருவனை காத்தான்குடிக்கு கடத்திச் சென்று மதம் மாற்றியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

13 வயதுடைய குறித்த சிறுவன் சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வைத்து அவனது தாயாரினால் அடையாளம் காணப்பட்டு பொலிசாரின் உதவியுடன் மீட்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்தே இக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இச் சிறுவனை காத்தான்குடிக்கு கடத்திச் சென்று இஸ்லாமிய மதத்துக்கு மாற்றியது மட்டுமன்றி மனிதாபிமானமற்ற வகையில் நடத்தியதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.இச் சம்பவம் தொடர்பில் மூவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சிறுவனை காத்தான்குடிக்கு அழைத்துச் சென்று தனது வீட்டில் வைத்து பராமரித்த முஹம்மது நஜீம் என்பவரை ‘விடிவெள்ளி’ தொடர்பு கொண்டு இது குறித்து விரிவாக வினவியது.

சாரதியாக தொழில் புரியும் இவர் குறித்த சிறுவனை யாழ்ப்பாணத்திலிருந்து காத்தான்குடிக்கு அழைத்து வந்த காரணத்தையும் அச் சிறுவனை பராமரித்த விதத்தையும் எம்முடன் பின்வருமாறு பகிர்ந்து கொண்டார்.

நான் ஒரு சாரதி. வியாபார நிமித்தம் யாழ்ப்பாணத்திற்கு அடிக்கடி போய் வருவது வழக்கம். கடந்த வருடம் ஆகஸ்ட மாதம் அங்கு சென்றபோதுதான் இந்த சிறுவனைக் கண்டேன். அங்கு சர்பத் கடை வைத்திருக்கும் காத்தான்குடியைச் சேர்ந்த எனது நண்பர் ஒருவரே இச் சிறுவனை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

இச் சிறுவன் 3 நாட்களாக சாப்பிட எதுவுமின்றி வீதியோரத்திலேயே தங்கியிருப்பதாகவும் தனக்கு தாய், தந்தை எவரும் இல்லை என்று கூறுவதாகவும் முடிந்தால் இச் சிறுவனுக்கு உதவி செய்யுமாறும் அவர் என்னிடம் கேட்டுக் கொண்டார்.

சிறுவன் மீது பரிதாபம் கொண்ட நான் உடனடியாக 100 ரூபா பணத்தைக் கொடுத்து சாப்பாடு வாங்கிச் சாப்பிடுமாறு கூறினேன்.

பின்னர் அச் சிறுவனை அழைத்து அவனது குடும்ப விபரம் பற்றி விசாரித்தேன். தனது தந்தை 4 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டதாகவும் தாயார் இறந்து ஒரு வாரமாகிறது என்றும் தாயாரின் சடலத்துக்கு கொள்ளி வைத்துவிட்டுத்தான் நான் இங்கு வந்தேன் என்றும் அச் சிறுவன் குறிப்பிட்டான்.

இச் சிறுவனை கூட்டிச் சென்று வளர்க்குமாறு எனது நண்பர் ஆலோசனை வழங்கினார். அச் சிறுவனும் அதற்கு சம்மதம் தெரிவித்தான்.

நான் உன்னை பராமரிப்பதாக இருந்தால் நீ இஸ்லாத்துக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் என்னால் உன்னை அழைத்துச் செல்ல முடியாது என்று நான் அந்த சிறுவனிடம் சொன்னேன். அவனும் அதற்கு சம்மதித்தான்.

அவனது விருப்பத்திற்கமைவாகத்தான் நான் காத்தான்குடிக்கு அழைத்துச் சென்றேன். மாறாக கடத்திச் செல்லவில்லை.

அங்கு அழைத்துச் சென்று எனது வீட்டிலேயே தங்க வைத்தேன். புதிய காத்தான்குடி ஷுஹதா பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று இச் சிறுவனை அழைத்து வந்தமை பற்றியும் இவருக்கு கலிமா சொல்லிக் கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டேன்.

அவர்களும் சிறுவனின் சம்மதத்தைப் பெற்றே கலிமா சொல்லிக் கொடுத்தார்கள். இதற்காக சிறுவனிடமிருந்து கையெழுத்தும் பெறப்பட்டது.

பின்னர் கத்னா செய்தோம். ‘அன்வர் ஹஸன்’ என்று பெயரும் சூட்டினோம்.

காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலயத்தில் 6 ஆம் வகுப்பில் சேர்த்து படிக்க வைத்தேன். பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இல்லாத காரணத்தினால் ஆரம்பத்தில் பாடசாலையில் சேர்க்க முடியாது என்று சொன்ன போதிலும் நான் அதனைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்ததற்கமையால் பாடசாலையில் சேர்த்துக் கொண்டனர்.

அதேபோன்று குர்ஆன் மத்ரஸாவிலும் சேர்த்தேன். சூறா பாத்திஹாவை அவர் நன்கு சரளமாக ஓதுவார். குர்ஆனில் முதலாவது ஜுஸ்உவை அவர் நன்றாக ஓதுவார். இறுதியாக 2ஆவது ஜுஸ்உவை ஓதிக் கொண்டிருந்தார்.

தினமும் சுபஹ் தொழுகைக்குக் கூட பள்ளிக்குச் செல்வதற்கு அவர் உற்சாகமாக இருப்பார். எனக்கு முதல் அவர் எழுந்து என்னை வாப்பா....பள்ளிக்குப் போக வாங்க" என்று அழைப்பார்.நான் அவரை மிகவும் அன்பாக எனது பிள்ளைகளைப் போன்றே நடத்தினேன். நான் அச் சிறுவனை வைத்து வேலை வாங்கியதாகவும் மனிதாபிமானமற்ற வகையில் நடத்தியதாகவும் சொல்கிறார்கள். எனது வீட்டிலுள்ள பூ மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுமாறு அவரை நான் பணித்ததாக ஊடகங்களில் எழுதுகிறார்கள். எனது வீட்டில் பூ மரங்களே கிடையாது. ஒரே ஒரு மா மரம் தான் இருக்கிறது.

இப்படியிருக்கையில்தான் பாடசாலையில் நடைபெற்ற பரீட்சைப் பெறுபேறுகளை தருவதாக இருந்தால் இச் சிறுவனின் பிறப்புச் சான்றிதழ் தேவை என பாடசாலையினால் கேட்டார்கள். அதனைப் பெற்றுக் கொள்வதற்காகவே நான் இச் சிறுவனையும் அழைத்துக் கொண்டு அண்மையில் யாழ்ப்பாணத்திற்குச் சென்றேன்.

இருப்பினும் பிறப்புச் சான்றிதழைப் பெறுவதில் கால தாமதம் ஏற்பட்டதால் மீண்டும் இச் சிறுவனை காத்தான்குடிக்கு அனுப்பி வைக்கும் பொருட்டு யாழ்ப்பாணத்தில் தொழில் செய்யும் எனது நண்பர் ஒருவரிடம் ஒப்படைத்தேன். எனக்கு யாழ்ப்பாணத்தில் வேறு வேலைகள் இருந்ததால் இச் சிறுவனை அழைத்துச் செல்ல முடியவில்லை.

எனது நண்பர் சிறுவனை மறுநாள் காத்தான்குடிக்கு அனுப்பி வைக்கும்பொருட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது தங்குமிடத்தில் தங்கவைத்திருந்தார்.

அச் சமயமே இச் சிறுவன் தொடர்பில் அவனது தாயாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் பொலிசாருடன் வந்து சிறுவனை அழைத்துச் சென்றதாகவும் எனக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இச் சிறுவன் கடந்த ஒரு வருட காலத்தில் தனக்கு தாய் இருப்பதாக ஒரு தடவை கூட என்னிடம் சொல்லவில்லை. அவ்வாறு சொல்லியிருந்தால் உடனடியாகவே அவனை அழைத்துச் சென்று அவனது தாயாரிடம் ஒப்படைத்திருப்பேன். தனக்கு யாருமில்லை என்று ஏன் இச் சிறுவன் பொய் கூறினான் என்பதுதான் எனக்குப் புரியவில்லை" என்றும் முஹம்மது நஜீம் மேலும் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பில் தற்போது யாழ். நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. இந்த வழக்கு விசாரணை எங்கு நடக்கிறதோ,அங்கே நஜீம் போய் போதிய விளக்கத்தைக் கொடுப்பது நல்லது.போலீசில் விபரம் சொல்லி அழைத்துப் போயிருந்தால் கண்டதுகலெல்லாம் நம்மைப் பற்றி கேவலப்படுத்தி எழுதி காசு சம்பாதிக்க முடியாமல் போயிருக்கும்.காசை விட்டெறிந்தால் மறுப்பறிக்கை சிறிய அளவிலாவது பிரசுரிப்பார்கள்.
    Meraan

    ReplyDelete
  2. There are lots conflicts between this article and previous. For example in the above article he says his father dead 4 year ago but in the previous article he said his father dead in the final stage of war. Some thing wrong some where

    ReplyDelete
  3. கேட்கிறவன் கேனயனா இருந்தா எலி ஏறேப்பிளேன் ஓட்டுமாம்! இது உங்களுக்கே கொஞ்சம் அசிங்கமா தெரியலையா?

    1. 18 வயது வராத ஒரு சிறுவனை அழைத்துச்செல்வதற்க்கு இவர் அரசாங்கத்திடம் முறைப்படி தத்தெடுத்திருக்க வேண்டும்

    2. காத்தான்குடியில் இப்படி தெருவோரத்தில் எத்தனையோ பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களை எடுத்து வளர்த்திருக்கலாமே.


    3. பராமரிப்பதாக இருந்தால் நீ மதம் மாற வேண்டும் என்று சொன்னது எவ்வளவு கேவலம்!! ஒருவனின் இயலாமையை பயன்படுத்துவதே ஆகும் இது போன்ற செயல்கள்!

    இவர் அப்படி யோக்கியன் என்றால் நீதிமன்றத்தில் சென்று தனது தரப்பு வாதத்தை வைத்து தான் நிரபராதி என்று நிருபிக்க வேண்டும். அதன் பின்னர் நாம் நம்புகின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.