நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையும் முஸ்லிம் தலைமைகளும்
(இன்றைய 31-05-2012 விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கத்தை இங்கு பதிவிடுகிறோம்)
போரின் இறுதிக் கட்டங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் மற்றும் பாதிப்புகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது தனது விசாரணைகளை முடித்து உரிய காலத்தில் ஜனாதிபதியிடம் அறிக்கையையும் கையளித்திருந்தது. அதில் வெறுமனே மக்களின் வாக்குமூலங்கள் மாத்திரமன்றி பெறுமதியான சிபாரிசுகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன.
ஆரம்பத்தில் இவ் அறிக்கையைப் பெற்று வாசித்த ஜனாதிபதி, நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை விரைவில் அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்திருந்தார். அரசாங்க தரப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர்கள் பலரும் ஜனாதிபதியின் கருத்தையை பிரதிபலித்திருந்தார்கள்.
இருந்தபோதிலும் வழமை போன்று இந்த அறிக்கையும் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையிலேயே ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்றை அமெரிக்கா கொண்டு வந்தது.
தனது பிரேரணையில் அமெரிக்கா குறிப்பிட்டிருந்த பிரதான விடயம் அரசாங்கம் தானாகவே நியமித்த குறித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தாது காலத்தை இழுத்தடிக்கிறது என்பதாகும். அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை ஐ.நா.மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு வழங்க வேண்டும் என்பதும் அமெரிக்காவின் கோரிக்கைகளுள் ஒன்றாகும்.
இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில் தற்போது நல்லிணக்க ஆணைக்குழுவின் சில சிபாரிசுகளையாவது நடைமுறைப்படுத்த வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருக்கிறது. இதன்பொருட்டு அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் கட்சிகளின் கருத்துக்களையும் தருமாறு கேட்கப்பட்டிருக்கிறது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் நடைபெற்ற காலப்பகுதியில் அது பற்றிய விமர்சனங்களை முன்வைத்த அல்லது வாக்குமூலம் அளிக்காது தவிர்ந்து கொண்ட முஸ்லிம் கட்சிகளும் அதன் தலைமைகளும் இப்போது நல்லிணக்க ஆணைக்குழு பற்றியும் அதன் சிபாரிசுகள் முஸ்லிம்களுக்கு நன்மை பயப்பனவாக உள்ளதாகவும் கூறுவது விசித்திரமானதாகவே தெரிகிறது.
அது மாத்திரமன்றி ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையை தோற்கடிக்க வேண்டும் என்பதில் கூடுதல் அக்கறை காட்டிய முஸ்லிம் அரசியல் தலைமைகள் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் என்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன என்பது பற்றித் தெரியாமல்தான் ஜெனீவா சென்றார்களா? அல்லது தெரிந்திருந்தும் அரசாங்கத்தைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக சென்றார்களா? எனும் கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், வடக்கு கிழக்கு காணிப்பிரச்சினை தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழு முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளைப் புரிந்து கொண்டு சிபாரிசுகளை முன்வைத்துள்ளது. ஆணைக்குழு முன் சாட்சியமளிக்காவிட்டாலும் கூட அதன் அறிக்கையை வாசித்துப் பார்த்து அதில் உள்ள சில விடயங்களையாவது நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜெனீவாவுக்குச் செல்ல முன்னர் அரசாங்கத்திடம் கேட்பதற்கு நமது முஸ்லிம் தலைமைகளுக்கு ஏன் வாய் வரவில்லை?
ஆரம்பத்தில் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணிய மறுத்த அரசாங்கம் இப்போது நன்றாக இறங்கி வந்திருக்கிறது. சரத் பொன்சேகாவின் விடுதலையும் ஜீ.எல்.பீரிஸின் அமெரிக்க விஜயமும் இதனை நன்கு வெளிப்படுத்துகின்றன.
அரசாங்கம் அமெரிக்காவுக்கு அடிபணிந்து நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளது என்பதற்காகவே முஸ்லிம் தலைமைகளும் இப்போது நல்லிணக்க ஆணைக்குழு பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்த வேண்டும் என இப்போதாவது இவர்கள் வாய் திறந்து கேட்பது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் முஸ்லிம் தலைமைகள் தமக்கென்றொரு நிகழ்ச்சி நிரலில் அல்லாது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடக்க முனைவது முஸ்லிம் சமூகத்திற்கு நன்மை தரக் கூடிய ஒன்றல்ல. நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் அனைத்துக்கும் காரணம் இந்த கையறு நிலைதான்.
இந்த உறக்க நிலையிலிருந்து முஸ்லிம் தலைவர்கள் எப்போது விழித்துக் கொள்ளப் போகிறார்கள்?

அன்பர்களே எமது முஸ்லிம் தலைவர்கள் பெயர் அளவில்தான் எல்லாம் எதாவது நடந்து பத்து நாட்கள் அல்லது காலம்கடந்துதான் எதாவது சொல்ல வாய் திறப்ப்பர்கள் அதுவும் அடுத்தவர்களின் அறிக்கையின் சில அடிகளை மற்றம் செய்து இவர்கள் சொல்வது போல் அப்படியே காப்பி அடிப்பார்கள் இவர்களாக சிந்தித்து அந்நேரமே அறிக்கை விட்டு தவறுகளை சுட்டிக்கடியது அரிதிலும் அரிது (அந்நேரமே தவறை சுட்டிக்காட்ட தைரியமான முஸ்லிம் தலைமகன் இன்னும் எமது நாட்டில் உருவாகவில்லை என்றே கூறலாம் காரணம் எல்லாரும் பதவி வகிப்பது அடுத்தவரின் தயவில்தான் வாய்திறந்தால் பதவி பட்டம் போய்விடும் ) . நமது முஸ்லிம் தலைவர்கள் எந்தளவுக்கு என்றால் இன்னும் ஒருவர் கையால்உணவை பிசைந்து வாயில் வைத்தவுடன் பின் மென்று விழுந்கதான் தெரியும். இதுதான் எமது தலைவர்களின் இன்றைய நடப்பு எப்போதுதான் இலங்கை முஸ்லீம்களுக்கு விடிவு பிறக்குமோ படைத்த அல்லாஹ்தான் அறிவான் அதுவரைக்கும் பொறுத்துதான் இருக்க வேண்டும்.
ReplyDeleteஇஷாக் ரஹீம்
டோஹா .கட்டார்