அமெரிக்கர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ள பாம்பு ரோபோ
இதய சிகிச்சைக்கு பயன்படும் பாம்பு வடிவிலான ரோபோவை, அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
மருத்துவத்துறையில், பல சிக்கலான சிகிச்சைக்களுக்கு ரோபோ பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் பிரிஸ்பைடெரியன் மருத்துவமனை இதய நிபுணர் மைக்கேல் அர்ஜென்சியானோ தலைமையிலான குழுவினர், பாம்பு வடிவிலான மெல்லிய ரோபோவை வடிவமைத்துள்ளனர்.இதய சிகிச்சை மற்றும் புராஸ்டேட் புற்றுநோய் அறுவை சிகிச்சை போன்றவற்றை எளிதாக மேற்கொள்ள, இந்த ரோபோ பெரிய உதவியாக இருக்கும். இந்த ரோபோவுக்குள் சிறிய கேமரா, கத்தரிகோல், இடுக்கி மற்றும் பல சென்சார்கள் உள்ளன. நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோவை வடிவமைத்த விஞ்ஞானிகள் குழு குறிப்பிடுகையில், "இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள பெரிய அளவில் மார்பு பகுதியை கிழிக்க வேண்டியதில்லை. எந்த இடத்தில் அறுவை சிகிச்சை தேவையோ, அந்த பகுதியில் மட்டும் துளையிட்டு, 25 காசு சுற்றளவுள்ள இந்த பாம்பு ரோபோவை உள்ளே செலுத்தி சிகிச்சை செய்யலாம். சிறிய ரணத்துடன் இந்த சிகிச்சை முடிந்து விடுவதால், நோயாளி விரைவில் குணமடைய வாய்ப்பு உள்ளது. புற்றுநோய் கட்டிகள் போன்றவற்றை அறுவை சிகிச்சை செய்யும் போது, அதனுடன் பிணைந்துள்ள நரம்புகள் துண்டிக்காமல் இருக்கவும் இந்த ரோபோ உதவுகிறது.
பெரிய அளவு கொண்ட பாம்பு ரோபோவையும் உருவாக்கியுள்ளோம். மீட்பு பணிகள், குகைகளுக்குள் சென்று ஆய்வு மேற்கொள்வது, மனிதர்கள் செல்ல முடியாதஇடங்கள், மரத்தின் உச்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்த பெரிய பாம்பு ரோபோவை பயன்படுத்தலாம் இவ்வாறு அவர்கள் கூறினர்.

Post a Comment