Header Ads



எகிப்து அபாய கட்டத்தை எட்டியுள்ளது - இஹ்வானுல் முஸ்லிமின் எச்சரிக்கிறது


எகிப்து ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் தேர்தல் முடிவுக்கு எதிராக இடதுசாரி வேட்பாளர் ஹம்தீன் சபாஹி மேன்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். தேர்தலில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அவர் அது குறித்த விசாரணை முடியும் வரை முடிவுகளை வெளியிடுவதை இடைநிறுத்தும்படி கோரவுள்ளார்.

இதனிடையே தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக மூன்றாவது இடத்தை பிடித்த சபாஹி குறிப்பிட்டுள்ளார். இதில் உள்துறை அமைச்சு அஹமட் ஷபீக்கிற்கு ஆதரவாக 900,000 வாக்குகளை சட்டவிரோதமாக பதிவு செய்ததாக சபாஹி குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் தேர்தல் சட்டத்திற்கு அமைய ஷபீக்கிற்கு போட்டியிட தடைவிதிக்கப்பட்டிருக்க வேண்டும் என சபாஹி குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஹொஸ்னி முபாரக் அரசின் உறுப்பினர்களுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையம் அஹமட் ஷபீக்கிற்கு தேர்தலில் போட்டியிட தடை விதித்து ஒரு தினத்திற்குள் தடையை விலக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே எகிப்து அபாய கட்டத்தை எட்டியிருப்பதாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அஹமட் ஷபீக் வெற்றிபெறுவதை தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அது அழைப்பு விடுத்துள்ளது.

மீண்டும் ஹொஸ்னி முபாரக் அரசு ஆட்சிக்கு வரும் வாய்ப்பு ஏற்பட்டுளதாக எச்சரித்துள்ள முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு இந்த நிலையை தவிர்க்க எதிர்க் கட்சிகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது.

எனினும் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு மக்கள் எழுச்சியை பாதுகாப்பதாக அமையும் என முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் வேட்பாளர் மொஹமட் மொர்ஸி குறிப்பிட்டுள்ளார். ‘நான் ஜனாதிபதியானால் எகிப்து முழுவதுக்குமான ஜனாதிபதியாக இருப்பேன். முஸ்லிம் சகோதரத்துவ’ அமைப்பு எகிப்து முழுவதற்குமானதாக இருக்கும் என மொஹமட் மொர்சி குறிப்பிட்டார்.

மறுபுறத்தில் நாட்டை மீண்டும் பின்னோக்கி அழைத்துச் செல்ல மாட்டேன் என அஹமட் ஷபீக் வாக்குறுதி அளித்துள்ளார். ‘அனைத்து எகிப்தியருக்கும் நான் வாக்குறுதி அழைக்கிறேன். நாம் புதிய யுகம் ஒன்றை ஆரம்பிப்போம். பின்னோக்கி செல்ல மாட்டோம்’ என்று அஹமட் ஷபீக் ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார்.

இதில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு மக்கள் எழுச்சியை கொள்ளையிட முயற்சிப்பதாக அஹமட் ஷபீக் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அஹமட் ஷபீக்கின் பேச்சாளர் அஹமட் சஹ்ரா கூறும் போது, மக்கள் எழுச்சி ஆதரவாளர்கள் தமது வேட்பாளருக்கே வாக்களித்தனர். எமது திட்டம் எதிர்காலத்தை ஒட்டியதாக இருக்கிறது.

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் திட்டம் இஸ்லாமிய சாம்ராஜ்யம் பற்றியதாக இருக்கிறது என்றார். எனினும் இந்த தேர்தல் முடிவுக்கு எகிப்து மிதவாத கட்சியான சுயாதீன எகிப்தியர் கட்சி அதிருப்தி வெளியிட்டுள்ளது.
அந்த கட்சியின் பேச்சாளர் அஹமது கைரி அல் அஹ்ரம் பத்திரிகைக்கு கூறியிருப்பதாவது; மொர்சி ஒரு இஸ்லாமிய எதெச்சதிகாரி, ஷபீக் ஒரு இராணுவ எதெச்சதிகாரி என்றார்.

No comments

Powered by Blogger.