Header Ads



சிரியாவில் கொடூர அடக்குமுறை - ஜும்ஆ குத்பாவில் யூசுப் கர்ளாவி ஆவேசம்



வன விலங்குகளைகூட தோற்கடிக்கும் வகையில் கொடூர அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டு நிரபராதிகளை கொடுமைச் செய்யும் அரசின் கீழ் ஆற்றும் பணியை ராஜினாமாச் செய்துவிட்டு மக்களுடன் சேருமாறு சிரியா ராணுவத்தினருக்கு உலக பிரசித்திப் பெற்ற முஸ்லிம் மார்க்க அறிஞர் ஷேக் யூசுஃப் அல்கர்ழாவி அழைப்பு விடுத்துள்ளார்.

கத்தர் தலைநகர் தோஹாவில் உள்ள உமர் பின் கத்தாப் மஸ்ஜிதில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரை நிகழ்த்திய கர்ழாவி இவ்வாறு கூறினார்.

மேலும் அவர் கூறியது: “இறையச்சமும், மனசாட்சியும் கொண்ட ராணுவத்தினர் எவரும் தனது சகோதரர்கள் மீது நடத்தப்படும் கொடூரங்களில் பங்காளர்கள் ஆகிவிடாதீர்கள்.

ஐ.நா சபை நியமித்த கண்காணிப்பாளர்களால் சிரியாவில் எதுவும் செய்ய இயலவில்லை. கத்தாபி உள்ளிட்ட அரபுலக சர்வாதிகாரிகளின் நிலைமைதான் சிர்யாவின் ஆட்சியாளர்களுக்கும் ஏற்படும். சிரியா மக்களுக்காக தொடர்ந்து பிரார்த்திப்பது முஸ்லிம்களின் கடமையாகும்.

உணவு கிடைக்காமல் யெமனில் லட்சக்கணக்கான குழந்தைகள் எலும்பும், தோலுமாக மரண அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர். அந்த நாட்டின் தேவைகளை நிறைவேற்ற வேண்டியது அரபு-இஸ்லாமிய நாடுகளின் கடமையாகும். நேற்று முன்தினம் நடந்த யெமன் நட்புறவு நாடுகளின் கூட்டத்தில் கிடைத்த தொகை அவர்களின் தேவைகளை நிறைவேற்ற போதுமானதல்ல.” இவ்வாறு கர்ழாவி கூறினார்.  (தூது)

No comments

Powered by Blogger.