ஓர் எழுத்துப் பிழைத்துவிட்டது - டாக்டர் ரயீஸின் டயறியில் இருந்து..!
மட்டக்களப்பிலிருந்து சில கிலோ மீற்றர் தூரம் தெற்கே அமைந்துள்ள தமிழ்க் கிராமம் நாவற்குடா. நாவற்குடாவிலிருந்து கொழும்பு லேடிரிட்ஜ்÷ வ வைத்தியசாலைக்கு தனது ஆறு வயது மகனுடன் வந்திருந்தார் ஒரு தமிழ்ப் பெண்.இரண்டு தசாப்தங்களாக நடந்த யுத்தம் பலியெடுத்த பல்லாயிரக்கணக்கான உயிர்களுள் அந்தப் பெண்ணின் கணவனும் ஒருவன். விதவைக் கோலத்தில் வாழ்ந்த அந்தப் பெண்ணுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். மூத்தவள் பெண். சுய தொழில் செய்து மிகவும் சிரமத்தோடு அந்தக் குடும்பத்தை நடத்தி வருகிறாள் அந்தப் பெண். அவள் அழைத்து வந்த அந்தச் சிறுவன் அவளது இரண்டாவது பையன். முதலாம் ஆண்டில் படிக்கும் மாணவன்.
பாடசாலைக்கு தனது சகோதரியுடன் நடந்து செல்வது அவனது வழக்கம். வழமை போல் தம்பியுடன் பாடசாலை சென்று திரும்பிய மூத்த சகோதரி சத்யா, தம்பி சிவா வரும் வழியில் பலமுறை கால் தடுமாறி விழுந்ததாகவும் அண்மைக் காலமாக அவனால் ஓடிவர முடியாமல் இருப்பதாகவும் தாயிடம் முறையிட்டாள்.
இதனைக் கேட்டது தான் தாமதம், அந்தத் தாய் ஓவென்று அழ ஆரம்பித்திருக்கிறாள். ஏன் சும்மா அழுகிறீர்கள் ? சாதாரணமாக கால் தடுமாறி விழுந்ததற்காக இப்படி அழ வேண்டுமா? என்று கேட்டாள் சத்யா.
அந்தத் தாய் அழுததற்கு நியாயமிருக்கிறது. இருபது வருடங்களுக்கு முன்னர் தனது இரு சகோதரர்களை பலியெடுத்த நோய் தனது மகனுக்கும் வந்துவிட்டது என்பது அந்தப் பெண்ணுக்கு உறுதியாகி விட்டது. ஆம். அந்தத் தாய் சத்யாவின் வயதில் இருக்கும் போது அவளுடன் பாட சாலைக்குச் சென்று வந்தவர்கள் தான் அந்த இரு சகோதரர்களும்.
எப்படி சிவா இன்று கால் தடுமாறி விழுந்தானோ அப்படித் தான் நாற்பது வருடங்களுக்கு முன்னால் உனது மாமன்மார் இருவரும் கால் தடுமாறி விழுந்தார்கள். அப்படி ஆரம்பித்த நோய் காலப் போக்கில் கூடிக் கொண்டே சென்றது. படிகளில் ஏற முடியாது தடுமாறினர். முழங்காலுக்கு கீழை தசை சற்று வீங்கியது போல் இருந்தது. சில வருடங்களில் அவர்களால் நடக்க முடியாமல் போனது. சக்கர நாற்காலியோடு அவர்களின் வாழ்க்கை சங்கமமாகி விட்டிருந்தது. அடிக்கடி காய்ச்சல், இருமல், சளி என்று வரும். அப்படியே சக்கர நாற்காலியோடு சில வருடங்கள் வாழ்ந்த உனது மாமன்மார் இருவரும் ஒருவர் 16 வயதிலும் மற்றவர் 18 வயதிலும் இறந்து விட்டனர் என்று அந்தத் தாய் சொன்னதும் தனது தம்பிக்கும் இதே நிலை தான் ஏற்படப் போகிறது என்பதைப் புரிந்து கொள்ளும் அளவுக்குப் படித்திருந்த சத்யாவின் கண்களும் கசிய ஆரம்பித்தன. அந்தத் தாய் வீறிட்டு அழுத வண்ணம் தனது ஆறு வயது மகனை இறுகக் கட்டி அணைத்துக் கொண்டாள்.
இந்த சோகமயமான சூழலின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாத அந்த ஆறு வயதுச் சிறுவன் தாயின் அழுகைக்கு அர்த்தம் புரியாது பசிக்கிறது சாப்பாடு தாருங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தானாம் என்று சொன்னாள் அந்தத் தாய். பாவம் குழந்தைப் பருவம்.
எனது மகனை என்னால் இழக்க முடியாது டாக்டர். இரண்டு சகோதரர்களுடன் 16 வருடங்கள் இந்த நோயுடன் வாழ்ந்திருக்கிறேன். இது என்ன நோய்..? எனது மகனின் வாழ்க்கைப் பயணம் எந்தப் பாதையில் செல்லும் ? அதன் முடிவு என்ன? என்பதையெல்லாம் நீங்கள் சொல்லத் தேவையில்லை. ஏனென்றால் இருபது வருடங்களுக்கு முன்னால் பல வைத்தியர்கள் சொல்லி நாங்கள் கேட்டிருக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலால் எனது இரு சகோதரர்களும் அனுபவித்த துன்பங்களை நானும் உடலால் இல்லாவிட்டாலும் உள்ளத்தால் அனுபவித்திருக்கிறேன். அன்று வைத்தியர்கள் இது குடும்ப வியாதி குணமாக்க முடியாது என்றார்கள். நீங்களும் எனது மகனுக்கு அப்படிச் சொல்லி எங்களை வீட்டுக்கு அனுப்பி விடாதீர்கள் டாக்டர்.
ஏதாவது அற்புதம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்து அழுதாள் அந்தப் பெண்.
அவளின் மனோநிலையை புரிந்து கொண்ட எனக்கு அவளது எதிர் பார்ப்புக்கு எப்படி பதில் சொல்வது என்பது பெரும் பிரச்சினையாகி விட்டது. பதில் சொல்லத் தயக்கமாக இருந்தது. மாமன்மார் இருவரும் சென்ற பாதையில் தான் அந்தச் சிறுவன் செல்ல வேண்டியிருக்கிறது. அவர்களின் ப யணம் முடிவுற்ற இடத்தில் தான் இந்தப் பையனின் பயணமும் முடிவுறும். அவனது வாழ்க்கைப் பாதையை மாற்றியமைக்க மருத்துவம் இன்னும் முன்னேறவில்லை என்று பதில் சொல்வதைத் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை.
எனது மகன் கட்டிலோடும் சக்கர நாற்காலியோடும் சங்கமித்து விடுவது தான் வாழ்க்கை என்றால் நானும் வாழத் தேவையில்லை. எனக்கு ஏதாவது தாருங்கள். உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். நான் செத்து போய் விடுகிறேன். தற்கொலைக்குத் தயாரான நிலையில் இருந்தாள் அந்தத் தாய். அந்தப் பெண்ணைச் சமாளிப்பது எனக்குப் பெரும் பிரச்சினையாகி விட்டது.
கால்கள் தடுமாறி விழுவதில் ஆரம்பித்து 20 வயதிற்குள் மரணத்தைக் கொண்டு வரும் இந்த பரம்பரை நோய் என்னவென்று நீங்கள் கேட்கக் கூடும். அது தான் டுஷீன் மஸ்கூலர் டிஸ்ரொபி (Duschene Muscular Dystrophy) என்ற நோய். இது குடும்பங்களில் பரம்பரையாக வரும் மரபணு (Gene) மூலமாக கடத்தப்படும் ஒரு நோயாகும். சிலவேளைகளில் பரம்பரைக் காரணி இல்லாமலும் வரமுடியும். ஆண்களை மட்டுமே பாதிக்கும் இந்த நோய்க்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
இருபது வருடங்களுக்கு முன்னர் மரித்த சிவாவின் மாமன்மார் இருவரும் வாழும் காலத்தில் இந்த நோய் மரபணு (ஜீன்) மூலமாக பரம்பரையாகக் கடத்தப்படும் நோய் என்பது மட்டுமே அறியப்பட்டிருந்தது. மேலதிகத் தகவல்கள் எதுவும் தெரிந்திருக்கவில்லை. இருபது வருடங்களுக்குப் பின்னால் தற்போது இந்த நோய் பற்றிய பல தகவல்களை மருத்துவ உலகு அறிந்திருக்கிறது. அப்படியிருப்பினும் அதற்கான தீர்வு இதுவரைக்கும் கிடைக்கவில்லை.
வைத்தியம் இல்லை என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பி விடாதீர்கள் டாக்டர்.. என்று அவள் அழுத போதும் அவர்களை வீட்டுக்கு அனுப்பு வதைத் தவிர வேறு வழி இப் போதைக்கு இல்லை. இருந்தாலும் இந்த நோயின் மரபணு பற்றி தகவல்கள் அண்மைக் காலங்களில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் எதிர்காலத்தில் சிலவேளைகளில் ஜீன் மாற்றத்தின் மூலம் (Gene theraphy) சுகமளிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படக் கூடும். அதற்கிடையில் சக்கர நாற்காலியோடு வாழப் போகும் இந்தச் சிறுவனின் வாழ்க்கைப் பயணம் முடிந்து விடவும் கூடும்.
ஜீன் என்றால் என்ன? அதில் எப்படி நோய் ஏற்பட முடியும்? இது எப்படி பரம்பரையாகக் கடத்தப்பட முடியும்? என்று நீங்கள் கேட்கலாம். பல்கலைக்கழகங்களில் ஆராயப்படுகின்ற கற்பிக்கப்படுகின்ற இந்த விடயத்தை வாசகர்களும் அறிந்திருக்க வேண்டும் என்பதற்காக இதனை எழுதுகிறேன். அவதானமாக வாசித்துப் பாருங்கள்.
ஒரு புதிய காரை வாங்கினால் அதனோடு சேர்த்து ஒரு சிறிய புத்தகத்தைத் தருவார்கள் (Owners Ma-nual). அந்தச் சிறிய புத்தகத்தில் அந்த வாகனத்தின் அமைப்பு, அதன் தொழிற்பாடு , அதன் பராமரிப்பு, அதில் ஏதும் தவறுகள் ஏற்பட்டுவிட்டால் அது எங்கே , எப்படி ஏற்படும், அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்றெல்லாம் விபரங்கள் எழுதப்பட்டிருக்கும்.
மனிதனின் பௌதிக உடலை மாத்திரம் எடுத்துக் கொண்டால் ஒரு வாகனத்தைப் போன்று நாங்கள் அசைகின்றோம். எமக்கு சக்தி தேவையாக இருக்கிறது. அதற்காகத் தான் உ ணவு உண்கிறோம். சரளமாக ஓடிக் கொண்டிருந்த வாகனம் திடீரென குலுங்கத் தொடங்கி விட்டால் டயரில் ஏதாவது பிரச்சினை இருக்கக் கூடும். Owners Manualஐப் பார்த்து அதனை சரி செய்து கொள்ள முடியும். அது போலவே நடந்து செல்கின்ற சிறுவன் கால் தடுமாறி விழ ஆரம்பித்துவிட்டால் , படிகளில் ஏறமுடியாது போனால் அந்தப் பையனால் இலகுவாக எழும்ப முடியாதுவிட்டால் என்ன செய்வது ?
காரை உருவாக்கிய மனிதன் அத்தோடு சேர்த்து அதனைப் பராமரிக்கும் புத்தகத்தையும் அனுப்பி விட்டான். ஆனால் மனிதனைப் படைத்த கடவுள் மனிதனின் கட்டமைப்பு பற்றிய புத்தகத்தை அனுப்பி வைக்கவில்லை. மனிதனே தனது சொந்த மூளையைப் பயன்படுத்தி அதனைத் தயார் செய்து கொள்ளட்டும் என்று விட்டிருக்கிறான் போலும்.
மனித உடலுறுப்புகளின் ஒவ்வொரு தொழிற்பாட்டுக்கும் உடற்கலங்களிலுள்ள ஜீன் என்ற அமைப்பு அத்தியாவசியமானது. பல ஆயிரம் ஜீன்கள் தொழிற்படுவதனால் தான் எமது உடல் சாதாரணமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மனித உடலில் இருக்கின்ற எல்லா ஜீன்களையும் எழுத்தில் வடித்து விட வேண்டும். (Gene Mapping) என்ற முயற்சி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.
In Search of Holy Graille என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சி ஒரு மாபெரும் திட்டம் ! எத்தனையோ பில்லியன் பவுண்களை செலவு செய்து கடைசியாக உடலில் உள்ள ஜீன்கள் எல்லாம் இப்படித் தான் இருக்கின்றன என்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மனிதனது அடிப்படை பௌதிகக் கட்டமைப்பு இப்படித் தான் இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.
ஒரு காரின் கட்டமைப்பை விளங்க வைக்க ஒரு சிறிய புத்தகம் போதுமானது. ஆனால் மனிதனின் ஜீன் கட்டமைப்பை எழுதி வைக்க 7000 புத்தகங்கள் (Volumes) தேவையாய் இருக்கிறது. காரின் Owners Manual ஆங்கில மொழியில் 26 எழுத்துக்களால் உருவானது. ஆனால் மனிதனின் Ownres Manual ஜீனின் இரசாயன பாஷைக்கு (Chemical Letters) தேவையான எழுத்துக்கள் நான்கு மாத்திரமே.
A (Adenine), G (Guanine), C (Cytosin), T (Thyamine) A,G,C,T என்ற இந்த நான்கு எழுத்துக்களை மட்டும் உபயோகித்து இலட்சக்கணக்கான சொற்கள் (ஜீன்கள்) கொண்டதாக அமைந்திருக்கிறது மனிதக் கட்டமைப்பு, மூன்று பில்லியனுக்கு மேற்பட்ட எழுத்துக்களைக் கொண்ட மனிதக் கட்டமைப்பில் இலட்சக்கணக்கான சொற்கள் (Chemical Letters) இருக்கின்றன. ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு ஜீன். நோயற்ற மனிதன் என்றால் மூன்று பில்லியனுக்கு மேற்பட்ட எழுத்துக்களும் ஒவ்வொன்றாய் சரிபார்க்கப்பட்டு (Proof read) 7000 தொகுதிகளிலும் ஓர் எழுத்துக் கூட பிழையாகாமல் இருக்க வேண்டும்.
அப்படி ஒவ்வொரு மனிதனும் படைக்கப்படும் போது மூன்று பில்லியனுக்கும் மேற்பட்ட எழுத்துக்களையும் சரி பார்த்தே கடவுள் படைத்து உலகுக்கு அனுப்புகிறான் (Excellent poorf reader), சிலவேளைகளில் சில மனிதர்களில் சிற்சில இடங்களில் ஓரிரு எழுத்துக்கள் பிழைத்து வரவும் கூடும். சில எழுத்துக்களை கடவுள் ஏன் பிழைக்க வைக்கிறான் என்பதை அவன் மட்டுமே நன்கு அறிவான்.
சரி, அந்தச் சிறுவனுக்கு என்ன நடந்தது? இந்த 7000 எழுத்துக்களிலும் எல்லாமே சரியாக அமைந்து, ஓர் இடத்தில் மட்டும் ஓர் எழுத்து மாறி விட்டது. AGCT என்ற சொல் ACGTயாக எழுதப்பட்டு விட்டது. ஒரு சொல், மாறி எழுதப்பட்டு விட்டால் அந்தச் சொல்லின் கருத்து மாறி விடும். அதாவது ஜீன் தொழிற்படாது. இந்தப் பெயரில் இப்படி ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டால் Dystrophin என்ற புரதத்தை உருவாக்கும் ஜீன், ஒரேயொரு ஜீன் தொழிற் பாடற்றுப் போய் விட்டது. இந்த Dystrophin இல்லா விட்டால் தசைகள் வலுவிழந்து நடக்க முடியாமல்போகும். இறுதியாக மூச்சு எடுத்து விட உ தவும் தசை நார்கள் வலுவிழக்கும் போது சிறுவனுக்கு மரணம் சம்பவிக்கும்.
7000 தொகுதிகளில் எங்கோ ஒரு மூலையில் ஓர் எழுத்து பிழைத்து விட்டதால் ஓடியாடி விளையாட வேண்டிய அந்தப் பையனின் வாழ்க்கை மட்டுப்படுத்தப்பட்டு சக்கர நாற்காலியோடும் கட்டிலோடும் சங்கமமாகி விட்டது.
subhanallah!! manitha padaippukkul eththunai athisayangal iraivan antha siruvanai kunappaduththuvaanaaka
ReplyDelete