Header Ads



கொய்யாவாடி அரசினர் முஸ்லிம் பாடசாலைக்கு ஏற்பட்ட பரிதாபம்..!

திடீர் ஆசிரியர் இடமாற்றத்தினால் புத்தளம் கல்பிட்டி கோட்டத்திலுள்ள கொய்யாவாடி அரசினர் முஸ்லிம் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக பாடசாலை அபிவிருத்திச் சங்கமும்  பிரதேச மக்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது; 1990 ஆம் ஆண்டு வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்து நுரைச்சோலை, கொய்யாவாடியில் மீள்குடியேறிய மக்கள் எதிர்கால செல்வங்களுக்காக கல்வியை வழங்க வேண்டுமென்ற தூய எண்ணத்துடன் 1996 ஆம் ஆண்டு  ஓலைக் கொட்டகையில் ஆரம்பிக்கப்பட்ட கொய்யாவாடி முஸ்லிம் வித்தியாலயம் தனது வெற்றிப் பாதையில் பல தடைகளைத் தாண்டி க.பொ.த.(சா/தரம்) வரையில் தரமுயர்த்தப்பட்டு கோட்டம், வலயம், மாகாண மட்டங்களில் பல சாதனைகளைப் படைத்து கோட்ட மட்டத்தில் தனக்கென தனித்துவமான இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

இப் பாடசாலையில் 550 இற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இப் பாடசாலையில் திடீரென ஏற்பட்ட ஆசிரியர் இடமாற்றம் காரணமாக பாரிய சவாலை எதிர் நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. அதிபர் உட்பட 24 ஆசிரியர்களுடன் இயங்கிய இப் பாடசாலை   தற்போது 10 ஆசிரியர்களுடனும் 5 தொண்டர் ஆசிரியர்களுடனும்  ஊர் மக்களின் ஒத்துழைப்பில் தற்போது இயங்கி வருகின்றது.

வட மாகாணத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் இப் பாடசாலைக்குத் தேவையான பௌதீக வளங்கள் ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர் கதையாக நீண்டு கொண்டு  செல்வதை பதிவுகள் நினைவு கொள்ளச் செய்கின்றன.

பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க  அதிகாரிகள் பேதங்களை மறந்து மாணவர்களின் எதிர்காலம் ஒளிமயமானதாக அமைய உரிய நடவடிக்கை எடுக்குமாறும் பாடசாலை  அபிவிருத்திச் சங்கமும் பெற்றோர்களும் கேட்டுக் கொள்கின்றனர்

No comments

Powered by Blogger.