யாழ்ப்பாண முஸ்லிம்களை வேரறுக்கும் திட்டம் (பகுதி -3)
இப்னு அய்யூப்
எமது கடந்த ஆக்கத்தில் எமது மக்களை மீளவும் குடியேற்றுவதற்கான திட்டமிடல் ஒன்றின் தேவை குறித்துப் பேசியிருந்தோம் இப்பகுதியில் அத்தகைய திட்டமிடலை யார் மேற்கொள்வது அதனை யார் அமுல்நடாத்தப்போகின்றார்கள் போன்ற விடயங்கள் குறித்து எமது கவனத்தை செலுத்துவோம். இது குறித்து எமக்கு ஒரு சீரான பார்வை இருக்கின்றபோது மட்டும்தான் எம்மால் முன்னோக்கி நகர முடியும். இவை இல்லாத காரணத்தினால் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களை மீளவும் குடியேற்றுகின்ற முயற்சியில் சாணேற முழம் சறுக்கும் நிலையை நாம் உணர்கின்றோம். எம்மவர்களின் சிந்தனைப்பாங்கு, மனோநிலைகள், அவர்களின் நடத்தைக் கோலங்கள் மீள்குடியேற்றத்தில் வெகுவாக தாக்கம் செலுத்துகின்றன.
தற்போதைய யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துடன் தொடர்புடைய மக்களை பின்வருமாறு நோக்க முடியும்.
o யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறியுள்ளோர்
o யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறுவதற்காக பதிவுகளை மேற்கொண்டுள்ளோர்
o யாழ்ப்பாணத்தோடு தொடர்புகளைப் பேணவிரும்பும் மீளக்குடியேறாதோர் (உள்நாடு/வெளிநாடு)
o யாழ்ப்பாணத்தோடு தொடர்புகளை ஏற்படுத்த விரும்பாதோர் (உள்நாடு/வெளிநாடு)
o யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொள்ளாத முஸ்லிம்கள்
யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறியுள்ளோரின் நிலையைப் பார்க்கும்போது பரிதாபமே ஏற்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் உழைக்கும், கூலித்தொழிலாளிகளே அதிகமாக குடியேறியுள்ளனர், 04 ஆலிம்கள் மாத்திரம் குடும்பங்களுடன் குடியேறியுள்ளனர், அரசாங்க உத்தியோகத்தர்களின் குடும்பங்கள் 03, வியாபாரிகளின் குடும்பங்கள் 15 மாத்திரமே மீளவும் குடியேறியிருக்கின்றனர், எனவே ஒரு சீரான சமூக அமைப்பை ஏற்படுத்துதல் என்பது மிகவுமே கடினமானதாக இருக்கின்றது. எவரையும் பலாத்காரப்படுத்தி யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேற வைக்க முடியாது. இருப்பினும் சமூகச் சமநிலையொன்று இல்லாத சூழலில் சீரான மீள்குடியேற்றம் சாத்தியமாகாது. தற்போது மீளக்குடியேறியுள்ள 95%ற்கும் அதிகமானவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களே எனவே அவர்களால் ஒரு சீரான சமூக அமைப்பை உருவாக்கிக் கொள்வதில் பல்வேறு அசாத்தியப்பாடுகள் நிலவுகின்றன.
தற்போது குடியேறியிருக்கின்றவர்களிடையே நாம் எவ்வாறு ஒரு சமூகமாக கட்டுக்கோப்புடன் வாழ்வது, எமது தொழில் முயற்சிகளை எவ்வாறு மிக நேர்மையாகவும் இஸ்லாமிய அடிப்படைகளைப் பின்பற்றியும் அமைத்துக் கொள்வது போன்ற விடயங்களில் பலவீனங்கள் இருக்கின்றன. எமது இளைஞர்களிடையே உத்வேகமும் முயற்சிகளும் குறைவடைந்துள்ளன, கற்றலுக்கான ஆர்வம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது, புதிய வியாபார, தொழில் முயற்சிகளைத் தொடங்குவதில் பாரிய பிற்போக்குகள் காணப்படுகின்றன. நம்பிக்கையூட்டுகின்ற எந்த நடவடிக்கைகளையும் எம்மால் யாழ் முஸ்லிம் வட்டாரத்தில் தற்போது மீளக்குடியேறியுள் ளோர்களிடம் காணக்கூடியதாக இல்லை. அதுமாத்திரமன்றி பல்வேறு சமூகச் சீர்கேடுகளுடன் கூடியவர்களும் யாழ்ப்பாணத்தில் வந்து தஞ்சம் அடைந்திருப்பது வெட்கத்தை விட்டு வெளியில் சொல்லவேண்டிய உண்மையாகும். இவ்வாறான ஒரு சிக்கல் நிறைந்த சமூக அமைப்ப்பொன்றை கொண்ட எமது மண்ணில் மிகவும் துள்ளியமான திட்டமிடல்களுடன் கூடிய வழிகாட்டலகளும் மனிதவள அபிவிருத்தி முயற்சிகளும் துரிதப்படுத்தப்படவேண்டும்.
தற்போது தலைவர்கள் என தம்மை அடையாளப்பட்டுத்தும் அனைவரும் தமது சமூகம் குறித்த சீரானபார்வை அற்றவர்களாகவே இருக்கின்றார்கள். அவர்களை கொத்தடிமைகளாகவும் மடையர்களாகவும் வைத்திருப்பது குறித்த தலைவர்களுக்கு வசதியானதாகும். எனவே குறித்த சமூகத்தில் சமூக மாற்றம் குறித்து அவர்கள் ஒருபோதும் சிந்தித்தது கிடையாது.
யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறுவதற்காக பதிவுகளை மேற்கொண்டுள்ளோரைப் பொறுத்தவரையில் அவர்களிடையே இரண்டு சாரார் இருக்கின்றார்கள் ஒரு சாரார் உண்மையில் எமது மண்ணைப் பாதுகாக்க வேண்டும் அதற்காக தம்மாலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற உணர்வோடு இருக்கின்ற நல்லுள்ளம் கொண்டவர்கள். இன்னும் ஒரு சாரார் இங்கே கிடைக்கின்ற நலன்கள், சமூக நலத்திட்டங்களை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் மாத்திரம் இருப்பவர்கள். இந்த இரண்டாவது சாரார் யாழ்ப்பாணம் குறித்த மோசமான பதிவுகளை யாழ்ப்பாணத்திற்கு வெளியிலிருப்பவர்களுக்கு மத்தியில் பரப்பிக்கொண்டும் மீள்குடியேற்றத்துக்கு தடையாகவும் இருக்கின்றார்கள் என்ற ஒரு அவதானமும் பரவலாக இருக்கின்றது.
யாழ்ப்பாணத்தோடு தொடர்புகளைப் பேணவிரும்பும் மீளக்குடியேறாதோர் (உள்நாடு/வெளிநாடு) இந்தப்பகுதியினர் யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரம் குறித்த அக்கறையுடன் இருக்கின்றார்கள், அங்கே என்ன நடக்கின்றது என்பதைக் கண்டுகொள்வதிலும் தம்மாலான முயற்சிகளையும் பங்களிப்புகளையும் வழங்கிக்கொண்டிருக்கின்றார்கள், இவர்களுக்கு உள்ள பிரச்சினை யாதெனில் யாரை நம்புவது, சம்மேளனத்தை நம்புவதா அங்கே இருக்கும் பள்லிவாயல் நிர்வாகங்களை நம்புவதா அல்லது அமைப்புக்களை நம்புவதா என அவர்களிடம் முரண்பாடுகள் இருக்கின்றன, இத்தகையவர்கள் நிலைமைகளைக் கூர்ந்து அவதானித்து மிகவும் பொறுத்தமான ஒரு தெரிவுகளை மேற்கொள்வது சாலச் சிறந்தது, இத்தகையவர்களின் பங்களிப்புகள் நிச்சயம் யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு அவசியப்படுகின்றது.
அடுத்து யாழ்ப்பாணத்தோடு தொடர்புகளை ஏற்படுத்த விரும்பாதோர் (உள்நாடு/வெளிநாடு) இவர்கள் யாழ்ப்பாணத்தோடு தொடர்புகளை ஏற்படுத்த விரும்பாமைக்கான காரணிகள் பல உள்ளன, இவர்களாலேயே யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டார மண்ணின் இருப்புக்கு வேட்டு வைக்கப்படுகின்றது. முஸ்லிம் வட்டாராத்தில் விற்கப்பட்ட காணிகளில் பெரும்பாலானவை இவர்களுக்குச் சொந்தமானது. மிகவும் வருத்தமான செய்தி யாதெனில் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேற விரும்பாத இவர்களாலேயே பல்வேறு ஊடக முயற்சிகள் யாழ்ப்பாண முஸ்லிம்களின் பெயரால் மேற்கொள்ளப்படுகின்றன , வசைபாடும் ஊடகங்களாகவும் மனிதர்களுக்கு மத்தியில் பகைமையினை வளர்க்கும் ஊடகங்களாகவும் இவை செயற்படுகின்றன். குறிப்பாக பேஸ் புக் என்னும் சமூக வலையமைப்பில் நுழையும் இவர்கள் தாம் என்ன செய்கின்றோம் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் இருப்பது வேதனைக்குரியதாகும்.
இறுதியாக யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொள்ளாத முஸ்லிம்கள்: இவர்கள் கல்வி, வியாபாரம், தொழில்வாய்ப்புகள் போன்ற தேவைகளுக்காக யாழ்ப்பாணத்தில் குடியேறியிருக்கின்றார்கள், இவர்களுக்கும் யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்துக்கும் இடையினால தொடர்புகள் மிகவும் குறைவானதாகவே இருக்கின்றது, உண்மையில் இவர்களுடனான தொடர்புகள் நிச்சயம் பலப்படுத்தப்படவேண்டியதாகும், மீள்குடியேற்ற பொறிமுறைக்குள் இவர்களும் உள்வாங்கப்படுவது அவசியமாகின்றது.
இத்தகைய பலதரப்பட்ட பகுதியினரை உள்ளடக்கியதாகவே யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இதற்கு தலைமை தாங்குவது யார்? இது எம் முன்னால் உள்ள பாரிய பொறுப்பு வாய்ந்த வினாவாகும், தற்போது இருக்கின்ற அரசியல் தலைமைகள் இப்பாரிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு தலைமை வகிப்பார்களா? அல்லது ஆலிம்களும் உலமாக்களும் தலைமைத்துவத்தை வழங்குவார்களா?பள்ளிவாயல் நிர்வாகிகள்? தனவந்தர்கள்? கல்விமான்கள்? என பல்வேறு தெரிவுகளிலும் எமது விடைகள் தொட்டுச் செல்கின்றன. தற்போதைய நிலைமையில் ஒத்த கருத்துடைய கூட்டுத் தலைமைத்துவமே சாத்தியமானதாகும். அத்தகைய தலைமைத்துவத்தைத் தீர்மானித்த நிலையில் எமது அடுத்த கட்டமாக இருக்கின்ற எமது சமூகத்தின் மீள்குடியேற்றம் குறித்த திட்டமிடல் குறித்து நாம் கலந்தாலோசிக்கவும் முடிவுகளை நோக்கி நகரவும் முடியும் என நினைக்கின்றேன்.
இத்தகைய பலதரப்பட்ட பகுதியினரை உள்ளடக்கியதாகவே யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இதற்கு தலைமை தாங்குவது யார்? இது எம் முன்னால் உள்ள பாரிய பொறுப்பு வாய்ந்த வினாவாகும், தற்போது இருக்கின்ற அரசியல் தலைமைகள் இப்பாரிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு தலைமை வகிப்பார்களா? அல்லது ஆலிம்களும் உலமாக்களும் தலைமைத்துவத்தை வழங்குவார்களா?பள்ளிவாயல் நிர்வாகிகள்? தனவந்தர்கள்? கல்விமான்கள்? என பல்வேறு தெரிவுகளிலும் எமது விடைகள் தொட்டுச் செல்கின்றன. தற்போதைய நிலைமையில் ஒத்த கருத்துடைய கூட்டுத் தலைமைத்துவமே சாத்தியமானதாகும். அத்தகைய தலைமைத்துவத்தைத் தீர்மானித்த நிலையில் எமது அடுத்த கட்டமாக இருக்கின்ற எமது சமூகத்தின் மீள்குடியேற்றம் குறித்த திட்டமிடல் குறித்து நாம் கலந்தாலோசிக்கவும் முடிவுகளை நோக்கி நகரவும் முடியும் என நினைக்கின்றேன்.
(இறுதிப் பகுதியில் மீள்குடியேற்றத்திற்கான திட்டமிடலுடன் சந்திப்போம்)

Post a Comment