Header Ads



தமிழர்களுக்கான தீர்வு முஸ்லிம்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்ய வேண்டும் - இரா.சம்பந்தன்

தமிழ் தேசிய இனத்தின் இறையாண்மைப் பிரச்சினைக்கு நாம் காண முற்படும் எந்த ஒரு தீர்வும், தமிழர் தாயகத்தில் வாழும் முஸ்லீம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு கட்டமைப்பாக அமைய வேண்டும். அது அவர்களது சமூக - பொருளாதார - அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும், அவற்றை நடைமுறைப் படுத்தக்கூடிய பொறிமுறையைக் கொண்டிருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பில் நடைபெறும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாட்டில் சற்று முன்னர் நிகழ்த்திய தலைமைப் பேருரையிலேயே அவர் இவ்வாறு எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

‘ஒன்றுபட்ட இலங்கை’ என்ற அமைப்பிற்குள், தமிழ் பேசும் மக்களாகிய எமக்கு, எமது அரசியல் - குடியியல் - பொருளாதார - சமூக - பண்பாட்டு அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய விதமான ஓர் ஆட்சியலகை ஏற்படுத்த இந்தத் தீவின் ஆட்சியாளர்கள் மனப்பூர்வமாக முன்வரவேண்டும். அந்தத் தீர்வானது, தமிழ் பேசும் மக்கள், தமது அபிலாசைகள் தொடர்பான தமது ஜனநாயகத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தக்கூடிய சட்டத் தகுதி உடையதாக அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழர்கள் எல்லோருக்குமான தலைமைச் சக்தி. தமிழ் பேசும் மக்களின் முன்னேற்றங்கள், பின்னடைவுகள் எதிலும் - முஸ்லிம், இ;ந்து, கிறிஸ்த்தவ சமூகங்களைப் பிரித்துப் பார்க்க முடியாது. ‘பெரும்பான்மை இனம்’ ‘சிறுபான்மை இனம்” என்ற சொற்பதங்கள் பரவலாக முதன்மை நிலைப்பட்டுவரும் இலங்கைத் தீவின் புதிய அரசியற் சூழலில் - தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ‘ஒரே மக்கள்’ என ஒருங்கு திரள்வதே மிகத் துல்லியமான தந்திரோபாயமாக இருக்க முடியும். அந்த வகையில், காலம் எம்மிடம் தந்துள்ள முதன்மையான பணிகளுள் ஒன்று, தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள தமிழ் பேசும் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ சமூகங்கள் முழுமையையும் இந்த விடுதலைப் பயணத்தில் ஒருங்கு திரட்டுவதாகும்.

அதே போல - தமிழர் தாயகத்திற்கு வெளியே, மலையகத்திலும் தென்னிலங்கையிலும் எமது பணிகளை விரிவாக்கம் செய்து, அங்கு வாழும் தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் உள்வாங்கிக்கொள்வதற்கான நேர்த்தியான வேலைத்திட்டங்கள் வரையப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இந்த தீவின் சிறுபான்மைச் சமூகங்கள் அனைத்தும் - தமது இன, மத, பண்பாட்டு அடையாளங்களையும் பாரம்பரியங்களையும் பாதுகாக்க வேண்டுமெனில், அவர்களுக்கு இருக்கின்ற ஒரே வழி, அவர்கள் அனைவரும் ‘தமிழ் பேசும் மக்கள்’ என்ற ஒரே குடையின் கீழ் ஒன்றிணைவதே ஆகும்.

அரசாங்கத்தில், தமிழ் பேசும் மக்கள் சார்பாக அங்கம் வகிக்கும் ஏனைய அரசியற் கட்சிகளுக்கு இருக்கும் பெரும் பொறுப்பையும் இந்த வேளையில் நான் தயவுடன் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு நியாயமான ஒரு தீர்வைத் தராமல்; அரசாங்கம் தாமதப்படுத்துவதற்குக் காரணம் - அதன் நேர்மையற்ற, மனப்பூர்வமற்ற, நல்நோக்கற்ற உளப்போக்குத்தான். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு நிபந்தனையற்று ஆதரவளிப்பதற்கு, அதனோடு இருக்கும் தமிழ் பேசும் மக்கள் சார்பான கட்சிகளுக்கு சுய தேவைகளும் வேறு காரணங்களும் இருக்கலாம், ஆனால், இந்தக் கட்சிகள் - தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் இழுத்தடிக்கும் அரசாங்கத்தின் நேர்மையற்ற போக்குக்குத் துணை போய்விடக் கூடாது.

‘ஒற்றையாட்சி இலங்கை’ என்ற அரசமைப்பிற்குள் தீர்வு காண, தமிழ் கட்சிகளது ஆதரவும் தனக்கு உண்டு எனக் காட்டித் தீர்வின் தரத்தைக் குறைக்க அரசாங்கம் எடுக்கும் கபட எத்தனங்களுக்கு இந்தக் கட்சிகள் வாய்ப்பளித்துவிடக்கூடாது. தனிப்பட்ட மற்றும் கட்சி நலன்களுக்கு அப்பால், இனத்தின் நலனை முன்னிறுத்தி இயங்க அவை முன்னவர வேண்டும். தமிழ் பேசும் மக்கள் சார்பாக, எமது இனத்தின் இறையாண்மையைக் கேள்விக்குட்படுத்தாத ஒரு வலிமையான தீர்வு யோசனையை, தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் நாம் முன்வைக்க வேண்டும். அதற்கு ஒத்துழைக்குமாறு நான் அனைத்துத் தரப்பினரையும் அன்போடு அழைக்கிறேன்.

2 comments:

  1. சம்பந்தர் அவர்களே,நமக்குள் உண்மையான மன ஒற்றுமை வர வேண்டுமென்று நீங்கள் விரும்பினால்
    சகல தமிழ் இணைய,பத்திரிக்கை,வானொலி நடாத்துபவர்களுக்கு முஸ்லீம்களைப் பற்றிய எந்த செய்திகள் போடுவதாக இருந்தாலும் இனத்தையோ,மதத்தையோ குறிப்பிடாமல்,குற்றம் செய்தவரின் பெயரை போட்டு செய்திகளை போடச் சொல்லி அறிவுரை கூறுங்கள்.மனது முழுவதும் விசக் கருத்துக்களும்,சிந்தனைகளையும் சுமந்து கொண்டு
    தமிழ் பேசும் இரு சமூகங்களும் ஒற்றுமையாக வள வேண்டும் என்று அறிக்கைகள் விடுவதில் பிரயோசனம் இருப்பதாகத் தெரியவில்லை.
    மத நல்லிணக்கம் என்ற பெயரில் மாலை போடுவது,குத்துவிளக்கு ஏற்றுவது,யாராவது சபைகளுக்கு வரும்போது எழும்பி நின்று மரியாதை செலுத்துவது இஸ்லாத்தில் மிக,மிக வெறுக்கப்பட்ட செயல்.இதை நாங்கள் செய்ய மறுக்கும் போது அதை நீங்கள் தவறான கண்கொண்டு பார்க்க கூடாது.
    இப்படியான சில விதி முறைகள் இருக்கிறது.இவைகளையும் நீங்கள் புரிந்து விட்டுக் கொடுத்து நடக்க வேண்டுமென்பதே எங்களின் விருப்பம்.
    Meraan

    ReplyDelete
  2. இவர் ஒரு நச்சுப் பாம்பு என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனாலும் இவருடிய செயற்பாடுகள் இவரை உருக்கி உறங்கவைக்கப் போகின்றது என்பது இன்னுமே இவருக்குத் தெரியாது .

    ReplyDelete

Powered by Blogger.