Header Ads



வீடுகளில் அரபு மொழி பேசும் சூழலை ஏற்படுத்த வேலைத்திட்டம் - ஹாபிஸ் நசீர் அஹமட்

ஒவ்வொரு வீட்டிலும் அரபு மொழி பேசும் ஒரு சூழலை ஏற்படுத்தும் வகையில் மத்ரஸாக்களிலும் ஏனைய கலாபீடங்களிலும் அரபு மொழிக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலான வேலைத்திட்டங்களை நாம் வகுப்போம் என முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

முஸ்லிம் காங்கிரஸ்  நீண்ட காலமாகப் புனரமைக்கப்படவில்லை. கடந்த கால சூழலே இதற்குக் காரணம். முஸ்லிம்களின் அரசியல் பாசறையாக இருக்கும் இந்தக் கட்சியிலிருந்து அரசியல் கற்றுக் கொண்ட பலர் பிரிந்து சென்றுள்ளனர். கட்சியின் புதிய பரிமாணம் அரசியல் முக்கியஸ்தர்களை மீள இணைத்துக்கொள்ள வழி வகுக்குமென நம்புகின்றேன்.

முஸ்லிம் காங்கிரஸ் வெறுமனே அரசியல் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒரு கட்சியாக, அதற்காகப் போராடும் அமைப்பாகவோ மட்டும் தொடர்ந்தும் இருக்கவே முடியாது. முஸ்லிம்களின் ஒட்டுமொத்த தேவைகளைப் பூர்த்தி செய்யும் வேலைத் திட்டங்களைக் கொண்ட கட்சியாக மிளிர நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி, சுகாதாரம், தொழில்துறை, சுயதொழில் முயற்சிகளில் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இனங்கண்டு ஒட்டுமொத்த பொருளாதார எழுச்சியை உருவாக்கும் கட்சியாக மாற வேண்டிய தேவையுள்ளது.

அத்துடன் இஸ்லாமிய அடிப்படையிலான ஒரு சமுதாய அமைப்பை உருவாக்கப்பாடுபட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் அரபு மொழி பேசும் ஒரு சூழலை ஏற்படுத்தும் வகையில் மத்ரஸாக்களிலும் ஏனைய கலாபீடங்களிலும் அரபு மொழிக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலான வேலைத்திட்டங்களை நாம் வகுப்போம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் ஒரு பங்காளிக் கட்சியாக இருந்தபோதும் எமது தனித்துவத்தை விட்டுக் கொடுத்து அரசியல் நடத்தப் போவதில்லை. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் இலங்கையில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொணட ஒரு மாகாணம். முஸ்லிம் வாக்காளர்களோ, முஸ்லிம் காங்கிரஸோ, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டுமென நினைப்பதில் எந்தத் தவறுமில்லை. அது எமது உரிமை. நாங்கள் யாரையும் திருப்திப்படுத்துவதற்காக அரசியல் நடத்தவில்லை. வேறு கட்சிகள் இந்த விடயத்தை விடடுக் கொடுத்தாலும் மு. கா. விட்டுக்கொடுக்காது. தேர்தல் தொடர்பாக அரசுடன் பேசி பொருத்தமான தீர்மானத்தை மு. கா. மேற்கொள்ளும்.

1 comment:

Powered by Blogger.