Header Ads



தமிழ் ஊடகங்களின் கவனத்திற்கு..! - முஸ்லிம்கள் சகலரும் குற்றவாளிகள் அல்ல..!!



யாழ் முஸ்லிம் இணையமானது இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் ஊடகத்துறையினருக்கான தொழில்சார் ஒழுக்கக் கோவையின் அடிப்படையிலும், ஊடக அமைப்புக்களின் ஆலோசனைகளையும் கவனத்திற்கொண்டு முஸ்லிம் சமூகம் சார்பில் செயற்பட்டுவருகிறது.

தொழில்சார் ஊடகக் கல்வி, ஊடகத்துறை அனுபவம், மூத்த ஊடகவியலாளர்களின் வழிகாட்டுதல், சகோதர ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பு, பரஸ்பர புரிந்துணர்வு, வாசகர்களின் பெரு ஆதரவுக்கு மத்தியிலும் யாழ் முஸ்லிம் இணையம் இயங்கிவருகிறது.

அந்தவகையில் அண்மைய சில நாட்களாக தமிழ் ஊடகங்களின் பார்வை இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது திரும்பியுள்ளதை நாம் நோக்க முடிகிறது. சமூகம் சார்ந்தியங்கும் ஒரு ஊடகம் என்றவகையில் சில விடயங்களை இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் ''வலதுகுறைந்த தமிழ் சகோதரி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற முஸ்லிம் இளைஞர்கள்'', ''யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் சிறுவனை கடத்தி மதமாற்றம் செய்த முஸ்லிம்கள்'' என்ற அடிப்படையில் தமிழ் ஊடகங்கள் செய்திகளை பதிவிட்டிருந்தன.

இந்த செய்திகளின் அடிப்படையை நோக்கும் போது அனைத்து யாழ்ப்பாண முஸ்லிம்களையும் குற்றவாளிகளாக நோக்கும் ஒருபோக்கு காணப்படுகிறது. ஊடக தர்மத்தின் அடிப்படையில் செய்திகளை பதிவிடும் போது குற்றத்துடன் தொடர்புடைய நபரை அவர் சார்ந்த சமூகத்துடன் சுட்டிக்காட்டுவது தவறானது.

இவ்வாறான செயற்பாடுகள் சமூகங்களுக்கிடையேயான நல்லிணக்கத்திற்கு வேட்டு வைப்பதாக அமைந்துவிடும். உள்நாட்டு போர் காரணமாக கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நிம்மதியை தொலைத்துவிட்டு அலையும் நமது சமூகங்களுக்கிடையே தற்போது அவசரமாக தேவைப்படுவது இனநல்லிணக்கமே.

யாழ்ப்பாணத்தில் வலதுகுறைந்த சகோதரி மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் பலாத்காரத்தை யாழ் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் யாழ் முஸ்லிம் இணையம் கண்டிக்கிறது. சம்பந்தப்பட்ட அந்த பெண்ணிடமும், அவர்களின் குடும்பத்திடமும் யாழ் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் மன்னிப்பு கேட்டுநிற்கிறோம். அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனையும் வழங்கப்படவேண்டும் என்பதே எமது தெளிவான நிலைப்பாடு.

அதேவேளை ஒருவர் அல்லது இரு முஸ்லிம்கள் செய்யும் தவறுகளுக்கு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளியாக நோக்கும் தமிழ் ஊடகச் செயற்பாடுதான் முஸ்லிம்கள கவலைகொள்ளச் செய்துள்ளது. குறிப்பாக தமிழ் இணைய ஊடகங்கள் சட்டத்தை தம் கையிலெடுத்து முஸ்லிம் சமூகத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்துவதற்கு முற்பட்டுள்ளமை எந்தவகையிலும் நியாயப்படுத்தமுடியாத ஒரு அசிங்கம் நிறைந்த செயற்பாடாகும்.

22 வருட துயர்மிகு இடப்பெயர்வின் பின்னர் யாழ்ப்பாண முஸ்லிம் சமூகம் தற்போதுதான் தமது தாயகப்பிரதேசத்தில் மெல்லமெல்ல மீளக்குடியேற ஆரம்பித்துள்ளது. முஸ்லிம் சமூகத்தின் இந்தமீள்குடியேற்றத்தை வரவேற்கவேண்டியது தமிழ் மக்களினதும், அவர்கள் சார் ஊடகங்களினதும் தலையாய கடமையாகும்.

இதைவிடுத்து ஒருவர் அல்லது இருவர் செய்யும் தவறுகளுக்காக முழு சமூகத்தையும் குற்றவாளிகள் போன்று காட்சிப்படுத்துவது தமிழ் மக்களை தவறாக வழிநடத்தவும், முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வலைகள் தோன்றவும் வழிவகுத்துவிடும். எனவே எதிர்வரும் காலங்களிலாவது தமிழ் ஊடகங்கள் தமிழ் - முஸ்லிம் உறவின் இன நல்லிணக்கத்தின் அவசியம்கருதி செயற்பட முன்வரவேண்டும்.

தவறுகள், பிழைகள், அநீதிகள் நடைபெறும் வேளைகளில் அதுகுறித்து பொலிஸாருக்கு அறிவித்து, அல்லது சமூகங்கள் சார்பிலான சமய குருமாரிடம் விவகாரங்களை ஒப்படைப்பதே பொருத்தமானது.

இடைவெளியுடன் பயணிக்கும் சமூகங்களுக்கிடையிலான உறவை சீரமைக்க தமிழ் ஊடகங்கள் தம்மை ஆர்ப்பணிக்க வேண்டுமென நாம் வேண்டுகோள் விடுக்கிறோம். அவ்வாறான தமிழ் ஊடகங்களுடனும், தமிழ் - முஸ்லிம் உறவில் ஆர்வம் கொண்டுள்ள சக்திகளுடனும் முஸ்லிம் சமூகத்தின் நலன்கருதியும், யாழ்ப்பாண முஸ்லிம்களின் நலன்கருதியும் நாம் இணைந்து பணியாற்ற தயாரென்பதையும் இங்கு சுட்டிக்காட்டவிரும்புகிறோம்.

யாழ் முஸ்லிம் இணையத்தை தினமும் தரிசிக்கும்  பல்லாயிரக்கணக்கான உறவுகளில் 27 சதவீத்தினர் தமிழ் தரப்பினர் ஆவர். அவர்கள் எமது இந்த தகவலை உரிய இடங்களுக்கு எடுத்துச்செல்வார்கள் என்று நம்புகிறோம்..!

8 comments:

  1. ரமேஷ்
    புங்குடுதீவு

    நல்ல கருத்துக்கள் வரவேற்கிறோம்..!

    ReplyDelete
  2. கம்பு எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன் ஆகிவிட முடியாது. யாழ்ப்பாண முஸ்லிம்கள் சிலரும் இப்ப புதுசா புதுசா வெப்சைட் தொடங்கியிருக்கினம். அவங்களுக்கு ஏதாவது புத்திமதி சொல்லுங்க தம்பி

    எம்.காதர்
    சோனகத்தெரு வீதி
    யாழ்ப்பாணம்

    ReplyDelete
  3. தமிழ் இணைய தளங்களும்,பத்திரிக்கைகளும் தங்கள் வியாபாரத்தை அதிகரிப்பதற்காக சிங்களவர்களையும்,முஸ்லீம்களையும் கரிச்சுக்கொட்டுவதே இவர்களுடைய தொழிலாகப் போய்விட்டது .நம்மை குடியேற விடாமல் தடுப்பதற்கு புலி சார்பு ஊடகங்களும்,புலிக்கு வால் பிடித்தவர்களும் கூட்டாக இயங்குகின்றனர்.மனசாட்சி,நீதி,நேர்மை,நல்லொழுக்கம் அரசிடமும்மில்லை, ஒரு சில ஊடகத் துறை மக்களிடமுமில்லை.காசு,புகழுக்காக எவ்வளவு தூரமும் கீழ்த்தனமாக இறங்கி இனங்களை கேவலப்படுத்துகின்றனர்.
    இஸ்லாம் என்றால் என்ன என்று ஓரளவாவது தெரிந்து கொண்டுதான் விமரிசிக்க வேண்டும்.
    முஸ்லீம்களுடைய கடமை இஸ்லாத்தைப்பற்றி
    மாற்றுமதத்தவர்களுக்கு எத்தி வைப்பது மட்டும்தான் .
    ஏற்றுக்கொள்வதும்,மறுப்பதும் இறைவன் நாட்டம்
    இஸ்லாத்தில் வற்புறுத்தி மதமாற்றுவது மிகவும்
    வெறுக்கத்தக்க செயல்.
    உங்கள் மார்க்கம் உங்களுக்கு,எங்கள் மார்க்கம் எங்களுக்கு.
    யாழ்.முஸ்லீம் ஊடாக உங்களுக்கு அழைப்பு விடுகிறோம்.இஸ்லாத்தை தெரிந்து கொள்ள விரும்பினால் www.onlinepj.com அல்லது srilankamoors.com உடன் தொடர்பு கொள்ளுங்கள்.
    Meraan

    ReplyDelete
  4. I agree with Meraan.

    ReplyDelete
  5. Naushad dehiwala23/05/2012, 17:53

    நௌஷாத் தெஹிவல
    மிக நல்ல கருத்துக்கள். ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு அவர் சார்ந்த சமூகம் பொறுப்பு என்றால் ஏன் ஜெனீவாசெல்ல வேண்டும் . புலிகள் செய்த தவறுக்கு அவர்கள் சார்ந்த சமூகம் பொறுப்பேற்று மௌனமாக இருக்கவேண்டியது தானே .உங்கம்மா என்றால் அம்மா எங்கம்மா என்றால் சும்மா . ஏன் இந்த மாற்றான் தாய் மனப்பான்மை . தமிழ் மீடியாக்களே உலகம் மிக விழிப்பாக இருக்கிறது கண்ணை மூடிக்கொண்டு பால் குடித்தால் உலகம் இருண்டுவிடாது . கவனம் உங்கள் செய்கையே உங்களுக்கு ஆப்பாக வரும் அதற்கு மாவிலாறும் முல்லிவாய்க்காலும் நல்ல உதாரணம் . இனியும் திருந்தவில்லை என்றல் உங்களுக்கு விமோசனம் இல்லை . சுயநலமாக சிந்திக்காமல் திறந்த மனதாக சிந்தித்து எழுதுங்கள் .

    ReplyDelete
  6. நீங்கள் சொல்லுவது உண்மைய இணைய நிர்வாகம் .ஒருவர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த இனத்தையும் இணைப்பது தவறு.சிலர் செய்த கசப்பான காரியங்கள் தான் .இன்று முஸ்லீம் மக்கள் தமிழர்கள் செய்தார்கள் என்று சொல்லுவதற்கு கரணம்.ஒன்றுபட்ட இனமாக நாம் வாழ நினைத்தால் மட்டுமே.எம்மால் முன்னேற முடியும் மதம் மதம் என்று பாராமல் இனத்தால் தமிழராய் ஒன்று படுவோம் .இதுவே ஒரு தமிழ் இளையவர் உங்கள் சமோகம் மீது செய்தால் இன்று அவர் அடித்து கொல்லபட்டு இருப்பார் .என்பதுவே உண்மை ..இந்த நிலை மாறவேண்டும் தமிழர்களாய் ஒன்றுபட்டு வாழ கற்று கொள்ளுவோம் .எதற்கும் மதத்தை முன்னிறுத்த வேண்டாம் .இனத்தை மட்டும் முன்னிருத்துங்கள் .கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து வாழுவோம் .நன்றி புரிந்து வாழ்ந்தால் புயலும் எமக்கு சாதகமாக வீசும்

    ReplyDelete
  7. dehiwala Naushad24/05/2012, 11:51

    தெஹிவல நௌஷாத்

    எனது கருத்துக்கு பதில் அளித்த தமிழ் அன்பருக்கு நன்றி .இனங்களுக்கு இடையில் புலிகளாலும் அரசியல் வாதிகளாலும் திட்டமிட்டு அழிக்கப்பட்ட நல்லுறவை மீண்டும் ஏற்படுத்தி நான் பிறந்து வளர்ந்து படித்த எனது தமிழ் மண்ணில் மீண்டும் பழையபடி வாழ எல்லாம் வல்ல இறைவன் எங்கள் அனைவருக்கும் உதவ வேண்டும் அதற்கு தமிழ் மீடியாக்கள் நல்லவிதமான கருத்துக்களை கொடுக்க வேண்டும் . மாறாக நச்சு கருத்துக்களை கொடுத்தால் அது எதிகால சந்ததிகளுக்கு நல்லது அல்ல . சிறு பான்மை இனங்களான முஸ்லிம்களும் இந்துக்களும் தமிழ் பேசும் கிறிஸ்தவர்களும் மொழியால் தமிழர்கள். தமிழை வளர்த்தவர்கள் முஸ்லிம்களே. எனவே தமிழ் எல்லோருக்கும் பொதுவானது என்ற அடிப்படையில் எல்லோரும் ஒன்றாக வாழ உதவி புரியுங்கள்

    ReplyDelete
  8. Tamilcnn.com is attacking muslim people on purpose. This site is owned by few business thugs in canada.

    ReplyDelete

Powered by Blogger.