யாழ்ப்பாண அரசாங்க அதிபராக சுந்தரம் அருமைநாயகம் பதவியேற்றார்
யாழ்.மாவட்ட புதிய அரச அதிபராக நியமிக்கப்பட்ட சுந்தரம் அருமைநாயகம் இன்று புதன்கிழமை காலை தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் பதவியேற்கும் நிகழ்வு யாழ்.மாவட்ட நலன்புரிச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்,
'யாழில் எழும் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றேன். யாழ்.மாவட்டத்திற்கு அரச அதிபாராக நியமிக்கப்பட்டதை நான் பெருமையாக கருதுகின்றேன். யாழ்.பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டவன் என்ற வகையில் யாழில் புவியியல் சார் நிகழ்வுகளை விளங்கிக் கொண்டுள்ளேன். இந்த மாவட்டத்தில் அரச அதிபராக கடமையாற்றுவது என்பது மிகவும் வரப்பிரசாதம் என்றே நினைக்கின்றேன்.
சர்வதேசத்தில் மிகவும் முக்கியம் பெற்று விளங்கும் யாழ்ப்பாணம் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. அந்த சவால்களுக்கு முகம் கொடுக்க நான் தயாரக இருக்கின்றேன். இந்த மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பேன். இதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்கின்றேன்.
அனைத்து உத்தியோகத்தர்களும் ஒரு இலக்கை அடைவதற்காக முயற்சிக்க வேண்டும். அபிவிருத்தி தொடர்பாக நீண்ட கலந்துரையாடல்களை நடத்தி செவ்வனே செய்வதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்கின்றேன்' என்று கூறினார்.

Post a Comment