இனங்களுக்கிடையில் ஒற்றுமை வலுப்பெற்றுள்ளது - 3வது யுத்த வெற்றி விழாவில் மஹிந்த
20 வருட கால யுத்தத்தை வேறு வழிகளில் நடத்த முயற்சிக்கின்றனர். அதன் ஒரு வெளிப்பாடே வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோருகின்றனர். சமாதானத்தை தொடர்ந்தும் பாதுகாக்க இந்த முகாம்கள் அவசியமென்பதை நான் வலியுறுத்துகிறேன். அச்சுறுத்தல்கள் நீடிக்கும்வரை இராணுவ முகாம்களும் இருக்கும்' என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூறினார்.
கொழும்பில் இடம்பெற்ற, யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
"இலங்கையின் வரலாற்றுப் புத்தகத்தில் இடம்பெற்ற ஒரு பொன் நாளில் இன்று நாம் இருக்கின்றோம். நாட்டில் கடந்த 30 வருடங்களாக நிலவிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து கௌரவமான சமாதானத்தை ஏற்படுத்திய நாள் இன்று.
இலட்சக்கணக்கான வட பகுதி மக்களைக் காப்பாற்றுவதற்காகவும் நாம் சுதந்திரமாக நடமாடுவதற்காகவும் யுத்தத்தில் தங்களது உயிர்களையும் உடல் உறுப்புக்களையும் இழந்த படையினரை நாம் கௌரவிக்க வேண்டும்.
யுத்தம் முடிவுற்ற பின்னர், இத்தொகைப் படையினரை என்ன செய்யப் போகிறீர்கள்? இவர்களை பராமரிப்பதற்கு பாரியளவு தொகையினைச் செலவிட நேரிடுமே? என்றும் பலரும் பலவாறாக கேள்விகளை எழுப்பினர்.
நாட்டில் பயங்கரவாதம் நிலைகொண்டிருந்த போது அதனை முற்றாக ஒழிக்கும் பாரிய பொறுப்பு அன்று படையினருக்கு இருந்தது. ஆனால் இன்று, பெற்றுக்கொண்ட சுதந்திரத்தைக் கட்டிக்காக்கவும், இந்த நாட்டின் அபிவிருத்தியில் பங்குபற்றவும், நாட்டை அழகுபடுத்துவதுமான பொறுப்புக்களை படையினருக்கு நாம் வழங்கியுள்ளோம்.
இன்று எமது நாட்டில் எவரும் எந்தவொரு குற்றச்செயல்களையும் செய்ய முடியாது. பாதாள உலகம், போதைப்பொருள் விற்பனைகளில் ஈட்டு வந்தோரையும் நாம் இப்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம்.
கடந்த 30 வருடங்களாக நாட்டில் நிலவிய யுத்தத்தின் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருந்த பல்வேறு தடைகள் தற்போது முற்றாக நீக்கப்பட்டு முழுமையான சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள போதிலும் சிலரின் மனங்களில் போடப்பட்டுள்ள பயங்கரவாதம் எனும் தடைகள் இன்னமும் நீங்கவில்லை.
மேற்படி நபர்களின் மனங்களில் உள்ள பயங்கரவாதம் எனும் கொடியத் தடை நீங்கப்படும் பட்சத்திலேயே அவர்களாலும் முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.
இன்று இனங்களுக்கிடையில் ஒற்றுமை வலுப்பெற்றுள்ளமையை நாம் பார்க்கின்றோம். பெற்றுக்கொண்ட வெற்றியைப் பாதுகாப்பதற்கு பொறுமை வேண்டும். எதிர்காலம் தொடர்பில் திட்டம் வேண்டும். எமது எதிர்கால சந்ததியினர் பயமற்ற அபிவிருத்தியான நாட்டுக்குள் வாழ்வதற்கு வழிசமைத்து அதற்கான நடவடிக்கைகளைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். உங்கள் அனைவருக்கும் சுபம் உண்டாகட்டும்' என்று ஜனாதிபதி மேலும் கூறினார்.

முட்டாள் தனமான கருத்து .தலைக்கு மறை கழன்று விட்டது.கண்ணுக்கு முன்னாலேயே இனவெறி ருத்திரத் தாண்டவமாடுகிறது.வாயை புனித நீர் கொண்டு கழுவியபபின் வார்த்தைகளை வெளியிடுங்கள் .
ReplyDeleteMeraan