பாகிஸ்தானில் சிறைச்சாலை மீது தலிபான்கள் துணிகர தாக்குதல் - பல நூறு பேர் தப்பினர் (வீடியோ)
பாகிஸ்தானில் தலிபான்கள் பலர் அடைக்கப்பட்டிருந்த ஜெயிலில் இன்று துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் தாக்குதல் நடத்தி முக்கிய கைதிகள் பலரை மீட்டு சென்றனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் கைபர் பக்துன்ஹவாக்குட்பட்ட பன்னு நகரில் முக்கிய ஜெயில் உள்ளது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். குறிப்பாக தலிபான்கள் பலர் உள்ளனர்.
இன்று காலை இச்சிறைச்சாலையை 50-க்கும் மேற்பட்ட தலிபான்கள் பயங்கர ஆயுதங்களுடனும்,கையெறி குண்டுகளுடனும் திடீர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலை அடுத்து சிறையில் இருந்து 380-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடிவிட்டனர்.
இந்த தாக்குதல் குறித்து பன்னுநகர் போலீஸ் அதிகாரி இப்திகர்கான் கூறுகையில்; இந்த தாக்குலில் ஈடுபட்ட தலிபான்கள் டிரக்கர் மூலம் ஆயுதங்களுடன் வந்து சிறை பகுதிக்கு நெருங்கினர். இவர்கள் கையெறி குண்டுகள எறிந்தும், துப்பாக்கியால் சுட்டபடியும் வந்தனர். இந்த திடீர் தாக்குதலால் உரிய பதிலடி கொடுக்க முடியாமல் போனது. எதிர்ப்பு போராட்டத்தில் 3 போலீசார் காயமுற்றுள்ளனர் . மொத்தம் 381 பேர் தப்பி ஓடி விட்டனர் என்றார்.
தலிபான் பிரமுகர் தகவல் : இந்த சம்பவம் குறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்; நாங்கள் தாக்குதல் நடத்தி கைதிகளை மீட்டுள்ளோம். இவர்களில் பலர் எங்களின் இருப்பிடத்திற்கு வந்து விட்டனர். இன்னும் சிலர் வந்து கொண்டிருக்கின்றனர் என்றார்.
முஷாரப்பை கொல்ல முயற்சித்தவர்: தப்பியவர்களில் 20 பேர் பெரும் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஆவர். இதில் ஒருவர் பாக்., முன்னாள் அதிபர் முஷாரப்பை கொல்ல நடந்த சதி திட்டத்தில் மரணத்தண்டனை பெற்ற ஆட்னன்ரஷீத்தும் அடங்குவார்.

Post a Comment