அமெரிக்கா எனது தலைக்கு விலை நிர்ணயித்துள்ளமை பயங்கரவாதமே
அமெரிக்கா என்னை காட்டிக்கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர் ஊக்கத் தொகையாக அறிவித்திருப்பதே தீவிரவாதச் செயல்தான் என்றும், இந்தியா அளித்த ஊக்கத்தால்தான் இவ்வாறு அமெரிக்கா அறிவித்துள்ளது என்றும் பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவரான ஹபீஸ் முகம்மது சயீத் தெரிவித்துள்ளார்.
மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா என்ற அமைப்பின் தலைவர் தான் சயீத். பாகிஸ்தானில் பதுங்கியுள்ள இவரது தலைக்கு தற்போது அமெரிக்கா 10 மில்லியன் டாலர் அதாவது, ரூ. 50 கோடி அறிவித்துள்ளது.
மேலும், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு பாகிஸ்தானுக்கு நெருக்கடியை தந்தாலும், இந்தியாவிற்கு மகிழச்சியை தருவதோடு, இந்தியாவின் வரவேற்பையும் பெருமளவில் பெற்றுள்ளது. இந்நிலையில், சயீத் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து பேசிய சயீத், இந்தியாவின் தூண்டுதலால் தான் அமெரிக்கா இவ்வாறு அறிவித்துள்ளது என்றும், ஒருவரின் தலைக்கு விலை வைப்பது என்பதும் கூட ஒரு வகையில் தீவிரவாத செயல்தான் என்றும் கூறியுள்ளார்.
இதனையடுத்து, இந்தியாவிற்காகவே இந்த காரியத்தை அமெரிக்கா செய்கிறது என்றும், இதனால், அமெரிக்கா பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதொடு, மிகவும் வருந்த வேண்டியிருக்கும் என்றும் கூறி, இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Post a Comment