ஆயுள் தண்டனை கைதி பேஸ்புக் பயன்படுத்துகிறார் - அதிகாரிகள் அதிர்ச்சியில் மூழ்கினர்
மத்திய பிரதேச மாநிலத்தில் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவர், பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் இணைந்து, அதன் வாயிலாக, தகவல்களை பரிமாறிக் கொண்டதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், குவாலியரைச் சேர்ந்தவர் துர்கேஷ் பதோரியா (33 வயது) மனைவியை கொலை செய்த வழக்கில், இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளாக, குவாலியர் மத்திய சிறையில், தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், பேஸ்புக் வலைத்தளத்தில் இவர் இணைந்துள்ளதாகவும், அதன் வாயிலாக, தகவல்களை பரிமாறிக் கொண்டு, புதிய நண்பர்களை பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியானது. கடைசியாக, கடந்த 7 ஆம் திகதி பேஸ்புக் மூலமாக, தகவல்களை பரிமாறிக் கொண்டதாகவும், புகார் எழுந்தது. இது குறித்து, சிறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதில், துர்கேஷ், பேஸ்புக் வலைத்தளத்தில் இணைந்து, முறையாக தகவல்களை பரிமாறிக் கொண்டதற்கான தடயங்கள் இருந்தன. சிறையில் இருக்கும் ஒருவருக்கு கணினி வசதி எப்படி கிடைத்தது. சிறையில் இருக்கும்போது, பேஸ்புக் மூலமாக அவர் தகவல்களை பரிமாறிக் கொண்டது எப்படி என்பது, சிறை அதிகாரிகளுக்கு பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக்கில், இவரைப் பற்றிய விவரங்களும் இடம் பெற்றுள்ளன. அதில், தன்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர் என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து, சிறை அதிகாரிகள் கூறுகையில், பேஸ்புக்கில், கடந்த 2010 இல் இவர், தன் தளத்தை உருவாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த நேரத்தில், அவர் சிறையில் இருந்தார். இது எப்படி சாத்தியமானது எனத் தெரியவில்லை. ஆயுள் தண்டனை விதிக்கப்படும் கைதிகள், சிறையில் இரண்டு ஆண்டுகள் நன்றாக நடந்து கொண்டால், அவர்களை பரோலில் அனுமதிப்பது வழக்கம்.
இது போல் பரோலில் சென்ற காலத்தில், கணினி பயன்படுத்தினாரா என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர். இருந்தாலும் இந்த விவகாரத்தால் அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். அதிகாரிகள் பயன்பாட்டுக்காக, சிறையில் உள்ள கணினிகளை இயக்குவதற்கு,. ஊழியர்கள் பற்றாக்குறை நிலவிய நேரத்தில், சிறை அதிகாரிகள், துர்கேஷ் பதோரியாவின் உதவியை நாடியிருக்கலாம் என்றும், அதை அவர் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Post a Comment