யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு வீடு தேவை - இந்தியாவிடம் வலியுறுத்தினார் ஏ.எச்.எம்.அஸ்வர்
யாழ் குடாநாட்டிலிருந்து வெளியேற்ற ப்பட்ட முஸ்லிம் மக்களுக்கும் இந்திய உதவியுடன் கட்டப்பட்டுவரும் 50 ஆயிரம் வீட்டுத் திட்டங்களில் வீடுகள் வழங்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் கேட்டுக்கொண்டார். பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்திருந்த இந்தியப் பாராளுமன்றக் குழுவினரைச் சந்தித்தபோதே அஸ்வர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
இந்திய லோக்சபாவின் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்தியக் குழுவினருடனான சந்திப்பு பாராளுமன்றக் கட்டடத்தொகுதியின் குழு அறையில் நடைபெற்றது. அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர்,
2 மணித்தியாலங்களில் யாழ் குடாநாட்டிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். இவர்கள் இன்னமும் சிங்கள கிராமங்களில் தொடர்ந்தும் தங்கியுள்ளனர். இந்த இனச் சுத்திகரிப்புக்கு எதிராக எந்தவொரு தமிழ் தலைவர்களும் குரல்கொடுக்கவில்லை.
இந்த நிலையில் இந்திய வீட்டுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்கும் வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கைச்சாத்திட்டு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அசோக்.கே.காந்தாவிடம் கையளித்திருந்தோம். இந்திய வீட்டுத்திட்டங்கள் முஸ்லிம்களுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதிப்படுத்த தற்பொழுது இலங்கைக்கு வந்திருக்கும் இந்தியப் பாராளுமன்றக் குழுவினர் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த வேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையின் கீழ் தமிழ்மொழி மற்றும் கலாசாரம் முன்னொரு போதும் இல்லாத வகையில் இலங்கையில் செழித்தோங்குகிறது. வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் கம்பன் விழா வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
4 நாள் நடைபெற்ற இந்த விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியும் பொன்னாடைபோர்த்திக் கெளரவிக்கப்பட்டிருந்தார். இதில் இந்தியாவின் பிரபல இலக்கியவாதிகளும் கலந்துகொண்டிருந்தனர். அது மாத்திரமன்றி தமிழ் நாட்டில் அச்சிடப்படும் புத்தகங்கள் வெள்ளவத்தை தமிழ் சங்கத்தில் வெளியிடப்படுகின்றன. வேல் தேர்திருவிழா உள்ளிட்ட பல்வேறு தமிழ் விழாக்கள் சந்தோசமாகக் கொண்டடப்படுகின்றன.
உதாரணமாக கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை பம்பலப்பிட்டி மற்றும் ஹெவலொக் வீதி ஆகிய இடங்களில் வசித்துவரும் தமிழர்கள் சிறப்பான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். நீங்கள் நேரம் ஒதுக்கி இந்த இடங்களுக்குச் சென்று பார்த்தால் உண்மை நிலைமையை புதுடில்லிக்கு சொல்ல முடியும்.
தமிழ் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறினார்கள். எந்த தமிழ் சமூகத்தை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என நான் கேள்வியெழுப்புகிறேன். யாழ்ப்பாண சமூகத்தையா, மட்டக்களப்பு, மலையகம் அல்லது கொழும்பு தமிழ் சமூகத்தையா அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா சுட்டிக்காட்டியதற்கு அமைய, தமிழ் முதலமைச்சர் தனது அமைச்சரவையில் தமிழ் மற்றும் முஸ்லிம் அமைச்சர்களைக் கொண்டுள்ளார்.
முன்னர் அந்த அமைப்பிலிருந்த விநாயகமூர்த்தி முரளிதரன் தற்பொழுது மீள்குடியேற்றப் பிரதியமைச்சராகவுள்ளார். அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் அபிவிருத்தித் திட்டங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முழுவீச்சில் பங்கெடுத்துள்ளார். இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தனித்த பிரதிநிதித்துவத்தைப் பற்றிப் பேசினால், மலையகத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், வடக்கில் ஈ.பி.டி.பி.யின் நிலைமை என்ன? இந்த விடயங்கள் இந்தியாவிலோ அல்லது ஏனைய நாடுகளிலோ நடைபெற்ற பேச்சுக்களில் உள்ளடக்கப்படவில்லை.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் துரித கதியிலான பொருளாதார அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவதுடன், இங்கு நிலையான சமாதானச் சூழ்நிலை காணப்படுகிறது என்பது தெரிந்ததாலேயே சீமான், வைகோ திருமாவளவன் மற்றும் ஏனைய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உங்கள் குழுவிலிருந்து மீளெடுக்கப்பட்டனர். அவர்கள் இங்குவந்து உண்மை நிலையைப் பார்த்தால் மீண்டும் மீண்டும் தாம் கூறிவரும் குற்றச்சாட்டுக்களை தொடரமுடியாது என்றும் அஸ்வர் எம்.பி. மேலும் கூறினார்.
இந்தச் சந்திப்பில் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக்.கே.காந்தா, அரசாங்கத்தின் பிரதம கொரடா தினேஷ் குணவர்த்தன, எதிர்க்கட்சியின் பிரதம கொரடா ஜோன் அமரதுங்க, சஜித் பிரேமதாச, அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா, பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர், பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான இராஜரட்ணம், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டருந்தனர். இந்தச் சந்திப்பு வெளிப்படையாக நடைபெற்றதுடன், வரவேற்கத் தக்கதாகவிருந்ததென இந்தியக் குழுவிக்கு தலைமைவகிக்கும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருந்தார்.

கிரிகட் வர்ணனை என்று வந்து வெறுப்பேற்றிய
ReplyDeleteஅஸ்வருக்குள் இவ்வளவு திறமைகள்,
உருப்படியான உரை, பாராட்டுக்கள்.