Header Ads



கொழும்பில் பட்டப்பகலில் நடந்த கொள்ளை (பணத்துடன் செல்பவர்களுக்கு எச்சரிக்கை + படம்)


கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் வங்கியொன்றிலிருந்து பத்து இலட்சம் ரூபா பணத்துடன் வந்த ஒருவரைத் தாக்கிப் படுகாயப்படுத்திய குழுவொன்று அவரிடமிருந்த பணத்தை அபகரித்துச் சென்றுள்ளது. கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் முத்துமாரி அம்மன் கோவிலுக்கு அருகிலேயே பிற்பகல் 3 மணியளவில் இந்தத் துணிகர வழிப்பறிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொட்டாஞ்சேனை சந்திக்கு சமீபமாகவுள்ள தனியார் வங்கியொன்றில் பத்து இலட்சம் ரூபா பணத்தை எடுத்துக் கொண்டு பிக்கறிங்ஸ் வீதியிலுள்ள தனது வீட்டிற்கு இவர் நடந்து சென்றுள்ளார்.

இவர் முத்தமாரியம்மன் கோவிலைத் தாண்டி பிக்கறிங்ஸ் வீதிச் சந்திக்கு சென்ற போது, மிக வேகமாக வந்து இவரது அருகில் நின்ற வெள்ளை நிறை சிறிய ரக வானிலிருந்து கீழே குதித்த இருவர் இவரை இரும்புக் கம்பியால் தாக்கவே மண்டை உடைந்து இவர் கீழே விழுந்துள்ளார்.

எனினும் கையில் வைத்திருந்த பணத்தை இறுகப் பற்றிப் பிடித்த போதும் கொள்ளையர்கள் அவரைத் தாக்கி விட்டு பணப்பையை அபகரித்துக் கொண்டு தாங்கள் வந்த வானில் பிக்கறிங்ஸ் வீதியால் தப்பிச் சென்று விட்டனர்.

இந்தச் சம்பவம் நடைபெற்ற போது அப்பகுதியில் பலர் நின்றிருந்த போதும் அவருக்கு உதவ எவரும் முன்வரவில்லை. அவரும் பணத்தை இழந்து, தலையில் படுகாயத்துடன் இரத்தம் வழிந்தோட வீடு நோக்கி நடந்து சென்ற போது அங்கு வந்த பத்திரிகையொன்றின் புகைப்படப்பிடிப்பாளர் அவரிடம் நடந்த விடயங்களைக் கேட்டு அவரைத் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்து விட்டு அருகிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அவரைக் கூட்டிச் சென்ற போதும் அவர்கள் சிகிச்சையளிக்க மறுத்துவிடவே, அவரை ஆட்டோ ஒன்றில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.

பட்டப் பகலில் நடைபெற்ற இந்த துணிகரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் மாரிமுத்துப்பிள்ளை சிதம்பரம் (60 வயது) எனத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments

Powered by Blogger.