உலகிலேயே மிக மோசமான பணி பத்திரிக்கை நிருபர் பணிதான் - ஆய்வில் தகவல்
உலகிலேயே மிக மோசமான பணி பத்திரிக்கை நிருபர் பணி என்று சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வேலைவாய்ப்பு ஆலோசனை மையத்தின் சார்பில் 200 பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.உடல் உழைப்பு, வேலை பார்க்கும் சூழல், வருமானம், மன அழுத்தம், வேலை பாதுகாப்பு உள்ளிட்டவைகளின் அடிப்படையில் நல்ல பணி, மோசமான பணி என்று தரம் பிரித்து ஆய்வு நடத்தப்பட்டது.
பாத்திரம் கழுவுவது, மாமிசம் நறுக்குவது, ஓட்டலில் உணவு பரிமாறுவது, வீடுகளில் மின்சார அளவை கணக்கிடும் பணி உள்ளிட்டவைகளுடன் பத்திரிகை நிருபர் பணியும் மோசமான பணி பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
மரம் வெட்டுவது, மாட்டு பண்ணை தொழில், இராணுவ வீரர், எண்ணெய் துரப்பணி பணியாளர் உள்ளிட்ட பணிகளும் மோசமான பணியில் இடம் பெற்றுள்ளன.
தீயணைப்பு வீரர், விமானி, ராணுவ தளபதி, பொலிஸ் அதிகாரி, ஒருங்கிணைப்பாளர், மக்கள் தொடர்பு அலுவலர், நிறுவன நிர்வாகி, பத்திரிகை புகைப்படக்காரர், டாக்சி டிரைவர் உள்ளிட்ட பணிகள் மன அழுத்தம் ஏற்படுத்தக்கூடிய பணி வகையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கணிசமான சம்பளம், மன அழுத்தம் குறைவு, உடலுழைப்பு குறைவு ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது மென்பொருள் பொறியாளர் பணி தான் இருப்பதிலேயே நல்ல பணி என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
நவீன தொழில்நுட்பங்களின் தாக்கம், உடனடியாக செய்திகளை தரவேண்டிய கட்டாயம் இவற்றால் ஏற்படக்கூடிய மன அழுத்தம், வேலை வாய்ப்பு மற்றும் சம்பளம் குறைவு போன்றவற்றால் நிருபர் பணி மோசமான பணி வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
Post a Comment