இலங்கையைச் சீரழிக்க சில நாடுகள் கண்களை மூடிக்கொண்டு செயற்படுகின்றன - மஹிந்த
இலங்கையை சீரழிப்பதற்காக சில நாடுகள் கண்களை மூடிக் கொண்டு செயற்படுவதாக குற்றம் சாட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பயங்கரவாதத்துக்கு ஆதரவானவர்களே இவ்வாறு செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார். நாகுலுகம வேவ்தத்த விகாரையில் ஞாயிற்றுக்கிழமை காலை புதிய மண்டபம் ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்; கடந்த காலங்களில் நாட்டை மீட்டெடுப்பதற்காக எமக்கு போராட வேண்டியிருந்தது. இதன்படி பயங்கரவாதத்தை அழித்து நாட்டை மீட்டெடுத்தோம். இதே வேளை முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை சமூகத்தில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றவர்களாக கட்டியெழுப்பினோம்.
ஆனபோதும் இன்று சர்வதேசத்துக்குள் இருந்துகொண்டு இலங்கை தொடர்பாக பல கருத்துக்களை கூறி நாட்டை சீரழிப்பதற்கு பயங்கரவாதத்திற்கு ஆதரவானவர்கள் செயற்படுகின்றனர். இதில் சில நாடுகள் கண்களை மூடிக்கொண்டு செயற்படுகின்றன.
எமக்கு இந்த நாட்டை பிரிக்க முடியாது. நாம் இந்த நாட்டை ஒருமித்த நாடாக உருவாக்கியுள்ளோம்.பிரதேச சபைகள், மாகாண சபைகள் அனைத்தும் இணைந்து நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றன. இன்று எமது இனங்களுக்கிடையே ஒற்றுமையுள்ளது. ஓரினம் என்ற ரீதியில் எமக்குப் பொறுப்புகள் உள்ளன. இதன்படி எமது நாட்டை அபிவிருத்தி செய்யாமல் இருக்க முடியாது. சிலருக்கு இது தொடர்பாக அக்கறை கிடையாது.
இதேவேளை நாட்டின் பௌதீக அபிவிருத்திகளைப் போன்று எதிர்கால சந்ததியினரை கல்வி ரீதியிலும் அபிவிருத்தி செய்ய வேண்டும். அவர்களுக்கு மனித உரிமைகள் தொடர்பாகவும் மூத்தவர்களை இன்முகத்துடன் பேணுவது தொடர்பாகவும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இவ்வாறாகச் சிறந்த எதிர்காலச் சந்ததியினரை உருவாக்காத பட்சத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளில் எந்தப் பலனும் கிடையாது.
இவ்வாறு நற்குணங்களைக் கொண்ட சந்ததியினரை உருவாக்கும் பொறுப்பு சமயத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு மாத்திரமன்றி நம் அனைவருக்கும் உண்டு.

Post a Comment