கொம்பனித்தெரு பள்ளிவாசல் அகற்றப்படமாட்டாது - கோட்டாபய ராஜபக்ஸ
கொம்பனித்தெரு மீள் அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் அப்பகுதி மக்கள் அதிக வசதிகளையும் சிறப்பான வாழ்விடங்களையும் பெறுவார்கள் என தெரிவித்துள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து மக்கள் ஒருபோதும் விரட்டியடிக்கப்பட மாட்டார்கள். மக்களை அதே இடத்தில் சிறப்பாக வாழவைப்பதே எமது நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கொம்பனித்தெரு பகுதி மீள் அபிவிருத்தி செயல் திட்டத்தின் அமுலாக்கம் தொடர்பாக பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் நிகழ்வு வெஸ்லிமாண ஸ்ரீலங்கா கண்காட்சி மற்றும் மரபுமுறை மண்டபத்தில் நடைபெற்றது.இங்கு உரையாற்றும் போதே பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொம்பனித்தெருவில் மீள் அபிவிருத்தி செயல் திட்டத்தின் மூலம் அப்பகுதி மக்கள் அதிகரித்த வசதிகளையும் சிறப்பான வாழ்விடங்களையும் பெறுவார்கள். இந்த அபிவிருத்தித் திட்டம் பூர்த்தியான பின்னர் ஏனைய நகரங்களிலும் இவ்வாறான அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்து மக்களின் வாழ்வு வசதியாக நாம் செயல்படுவோம். கொம்பனித்தெருவில் தத்தம் பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து மக்கள் ஒருபோதும் விரட்டியடிக்கப்படமாட்டார்கள்.
இப்போது இருப்பதைவிட கூடுதலான வசதிகளுடன் சிறந்த சுற்றாடலில் மக்களை அதே இடத்திலேயே வசதியாக வாழ வைப்பதே எமது நோக்கம். நாட்டு மக்களுக்குத் தேவையான வீடுகளைப் பெறுவதற்கும், வீடுகளை நிர்மாணிப்பதற்கும் உதவி ஒத்தாசைகளை வழங்குவதே அரசின் நோக்கம்.
பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்படும் போலியான பிரசாரங்களை நம்பாமல் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். கொம்பனித்தெருவிலுள்ள மலே வீதி, நீதியரசர் அக்பார் மாவத்தை, ஜாயா பிரதேசம், மற்றும் மஸ்ஜிதுல் ஜாமிஆ மாவத்தை ஆகியவற்றின் மீள் அபிவிருத்தி செயல் திட்டத்துக்காக இனம் காணப்பட்ட பகுதியின் பூர்வாங்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த மீள் அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். இதனை எனதோ, மேயரினதோ, நகர அபிவிருத்தி அதிகார சபையினதோ சம்பந்தப்பட்ட இந்திய நிறுவனத்தினதோ திட்டமாக மட்டும் கொள்ளாமல் இதனை உங்கள் திட்டமாக நீங்கள் நினைக்க வேண்டும்.
இங்கு 536 வீட்டுத் தொகுதிகளும் 100 கடைத் தொகுதிகளும் நிர்மாணிக்கப்படும். வசதிகள் அற்ற சுத்தமில்லாத சூழலில் வாழும் உங்களுக்கு வசதியான வீடுகள் கிடைக்கும். இந்திய டாட்டா கட்டட நிறுவனமும், இந்திய 18 எஸ். ஜீ. நிறுவனமும் இத்திட்டத்தில் பங்கேற்றுள்ளன. இதன் மூலம் உச்ச பயனை நீங்களே அடையப் போகிaர்கள். இந்த அபிவிருத்தித் திட்டத்தின் போது இங்குள்ள மஸ்ஜித் அகற்றப்பட மாட்டாது.
அந்த மஸ்ஜிதை மேலும் அபிவிருத்தி செய்து தரவே இந்திய நிறுவனமும் விருப்பம் தெரிவித்துள்ளது. இது விடயத்தில் அச்சம் கொள்ளத் தேவையில்லை தவறான பிரசாரங்களால் கலக்க முறவும் தேவையில்லை. இத்திட்டத்தின் மூலம் வீடுகள் மட்டும் கிடைப்பதில்லை சுயதொழில், வர்த்தக நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். சுற்றாடலில் வியக்கத்தக்க மாற்றங்கள் உருவாகும். இத்திட்டம் உங்களுக்காக, உங்களின் சொந்த இடங்களில் மேற்கொள்ளப்படுவதைப் பற்றி நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.
நீங்கள் முதலீட்டாளர்களை நம்ப வேண்டும். அவநம்பிக்கை கூடவே கூடாது. இதில் அரசியல் இல்லை. வேறு இரகசிய நிகழ்ச்சி நிரல்களும் கிடையாது. சந்தேகங்கள் எழுந்தால் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் கலந்து பேசி அவற்றைக் போக்கிக் கொள்ளுங்கள். நகரின் முன்னேற்றமே எமது பிரதான இலட்சியம். கொழும்பு தற்போது சுத்தமாக உள்ளது. அழகாகக் காணப்படுகிறது. இது எமக்கு பெரு நிறைவும், மகிழ்ச்சியும் தருகிறது.
நாங்கள் யாருக்கும் அநீதி இழைக்க மாட்டோம். உங்கள் நியாயபூர்வமாக தேவைகளை நாம் பூர்த்தி செய்வோம்.எனவே உங்கள் திட்டமான இதனை நீங்களே வெற்றிகரமாக்க வேண்டும். அதுவே எமது திர்பார்ப்பாகும் என்றார்

Post a Comment