Header Ads



அல்லாஹ்வை, நபியை அவமதித்தால் மரண தண்டனை - குவைத்தில் தீர்மானம்

இறைவனையும், இறைத்தூதரையும் அவமதிக்கும் வகையிலான நடவடிக்கைகளுக்கு மரணத்தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்க வழிவகைச் செய்யும் மசோதாவை குவைத் பாராளுமன்ற சட்ட உருவாக்க குழு அங்கீகரித்துள்ளது.

தற்போதைய சட்டத்தில் 2-வது முறையாக திருத்தம் செய்யப்பட்ட மசோதாவிற்கு பாராளுமன்ற சட்ட உருவாக்க குழு உறுப்பினர்களில் பெரும்பாலோர் அங்கீகரித்துள்ளதாக குழு தலைவர் டாக்டர்.முஹம்மது அல் தல்லால் தெரிவித்துள்ளார். இம்மசோதா உடனடியாக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். பெரும்பாலான எம்.பிக்கள் இம்மசோதாவை ஆதரிப்பார்கள் என்பதால் இம்மசோதா வெற்றிபெறும் என கருதப்படுகிறது.

இறைவனையோ, இறைத்தூதரையோ அவமதிக்கும் செயலில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள்தண்டனை அல்லது மரணத்தண்டனை வழங்க வழி வகைச்செய்யும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமிய விவகார அமைச்சகம், சட்ட அமைச்சகம் மற்றும் சட்ட ஆலோசனை குழுக்களின் நிலைப்பாடும் மசோதாவுக்கு ஆதரவாக அமைந்தது என்று அல் தல்லால் கூறினார்.

அண்மைக் காலமாக இறைத் தூதர்களையும், இறைத்தூதரின் மனைவிகளையும் அவமதிக்கும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சோசியல் நெட்வர்கிங் இணையதளங்கள் வாயிலாக இத்தகைய அவமதிக்கும் செயல்கள் கூடுதலாக நடந்துள்ளன. குவைத்தில் தற்போதைய சட்டத்தின்படி இத்தகைய குற்றங்களுக்கு சிறிய தண்டனையே வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் இக்குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்ற மசோதா கொண்டுவரப்பட்டது. பின்னர் சட்ட உருவாக்க குழுவின் அங்கீகாரத்திற்கு விடப்பட்டது.

No comments

Powered by Blogger.