Header Ads



உங்கள் வீட்டு மாப்பிள்ளையும் கடத்தப்படலாம்..! - காத்தான்குடியில் நடந்த உண்மைச் சம்பவம்


எம்.பி.எம்.பைறூஸ்
நேற்று வெள்ளிக்கிழமை பி.ப. 4.30 மணியிருக்கும். காத்தான்குடி 5 ஆம் குறிச்சி ஊர்வீதியில் பஜரோ வண்டியில் மாப்பிள்ளை வந்து இறங்குகிறார். பின்னால் ஒரு கார். 20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள். சுமார் 40க்கும் மேற்பட்ட நண்பர்கள் புடைசூழ மாப்பிள்ளை வந்திறங்கிய போதிலும் அவர்களை வரவேற்க அங்கு யாரும் இருக்கவில்லை. ஏன் அவர்களை யாருமே ஒரு பொருட்டாகக் கூடக் கருதவில்லை என்றுதான் சொல்லலாம்.

திருமண வீடென்றால் மாப்பிள்ளையை வரவேற்கத்தானே வேண்டும்? இது என்ன கதை என்று நீங்கள் கேட்கலாம்.

நமதூரில் அடிக்கடி நடக்கும் ‘மாப்பிள்ளை கடத்தல்’ கலாசாரம் பற்றித்தான் நான் இங்கு சில விடயங்களைச் சொல்ல விரும்புகிறேன்.

பள்ளிவாயலில் நிகாஹ் வைபவம் முடிந்தபிறகு மாப்பிள்ளையை மணமகள் வீட்டுக்கு அழைத்து வருவதுதானே வழக்கம்? ஆனால் இப்போது நமதூரில் சற்று வித்தியாசமாக கல்லடிக்கோ, கடற்கரைக்கோ கடத்திச் சென்றுவிடுகிறார்கள். இதைச் செய்வது ஏதோ திட்டமிட்ட சக்திகள் அல்ல. மாப்பிள்ளைமாரின் நண்பர்கள்தான். நேற்றும் இதே சம்பவம் என் கண்ணெதிரே நடந்தபோது என்னால் பொறுக்க முடியவில்லை. அதனால்தான் இப்படியொரு கட்டுரையை எழுதி எல்லோரிடமும் விடயத்தைப் போட்டு வைக்க வேண்டி வந்தது.

குறித்த திருமண நிகாஹ் வைபவம் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயலில் அஸர் தொழுகையோடு நடைபெற்றபோதிலும் உரிய நேரத்துக்கு மாப்பிள்ளை மணமகள் வீட்டுக்கு வந்துசேரவில்லை.

அஸர் தொழுகைக்கான அதான் 3.11 மணிக்கு. ஆனால் 4 மணி தாண்டியும் மாப்பிள்ளை மணமகள் வீட்டுக்கு வரவில்லை. முதலாம் குறிச்சி பள்ளியிலிருந்து மோட்டார் சைக்கிள்களிலும் துவிச்சகர வண்டிகளிலும் வந்தவர்கள் உரிய நேரத்துக்கு வந்து சேர்ந்துவிட்டாலும் பஜரோ வண்டியில் ஏற்றப்பட்ட மாப்பிள்ளை இன்னமும் வந்து சேரவில்லை என்பதால் அங்கு சிறு சலசலப்பு ஏற்பட ஆரம்பித்துவிட்டது.

ஒருவர் சொன்னார். ‘உங்களுக்குத் தெரியாதா, இப்ப நம்ம ஊர்ல இதானே கல்ச்சர்… மாப்புளட கூட்டாளிமாரு அவர கடத்திட்டு எங்கயாலும் போயிருப்பாக. கொஞ்ச நேரம் பார்ப்பம். எப்புடியும் இங்க வரத்தானே வேணும்’

அப்படியிருக்கையில்தான் மணமகளின் தந்தை வந்தார். அவரது முகத்தில் திருமணக் களை இருக்கவில்லை. பள்ளிக்குப் போகும்போது அவரது முகத்தில் இருந்த மகிழ்ச்சி பள்ளியிலிருந்து வந்த போது அவரிடம் இருக்கவில்லை. கையைப் பிசைந்து கொண்டு அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்.

‘என்னை மாப்புளட காரில ஏற வேண்டாம் என்டானுகள். இதில இடமில்லை…நீங்க வேற எதுலயாவது போங்க என்டானுகள். டெலிகொம் ரோட்டால போட்டு கடற்கரப் பக்கம் போரானுகள்….‘ என்று அவர் தகவல் சொன்ன போதுதான் இந்த மாப்பிள்ளையும் கடத்தப்பட்டுவிட்டார் என்பது ஊர்ஜிதமானது.

ஆனாலும் மணமகள் வீட்டுக்கு வந்துவிட்ட ஏனையவர்கள் எவருமே மாப்பிள்ளை வந்துசேரும் வரை காத்திருக்கத் தயாராகவிருக்கவில்லை.

‘இது இந்த ஊர்ல வழக்கமாப் போயிட்டு…இனிமே மக்ரிபுக்கு பிறகுதான் கலியாணங்களுக்கு போகனும்…. இவனுகள் அதபொழுக்கம் தெரியாதவனுகள்…பள்ளிக்குள்ள நிகாஹ் நடக்கக்குள்ள சத்தம் போட்டு கூத்தடிக்கக்குள்ளயே நினைச்சன்…இவனுகள் இப்புடி ஏதாவது ஏடாகூடமா பண்ணுவானுகள் எண்டு…..‘ என்றார் அங்கிருந்த ஒருவர். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்…

திருமணத்தை நடத்தி வைக்க வருகை தந்திருந்த மௌலவியும் பொறுமையிழந்தார். ‘நீங்கள் வந்தவர்களை நடப்பியுங்கள்….எங்களுக்கு வேற வேல இருக்கு…போகனும்...’ என்று மௌலவி சொன்ன போதிலும் மணமகள் வீட்டார் கொஞ்சம் பொறுத்துப் பார்ப்போம் என்றார்கள். ஆனாலும் மாப்பிள்ளை வந்தபாடாக இல்லை.

சிறிது நேரத்தில் மௌலவி எழுந்து வெளியே சென்றுவிட்டார். ‘எங்களுக்கு மரியாதை இல்லாத இடத்தில் நாங்கள் ஏன் இருக்க வேண்டும்? நான் சொன்னேன்தானே? அவனுகள் வரமாட்டானுகள் எண்டு! நீங்க எங்கள மதிக்காம அவனுகளயா பார்த்துக்கிட்டு இருக்கிறீங்க?‘  என்று கோபமாகக் கேட்டுக் கொண்டே வெளியேறிச் சென்ற மௌலவியை ஒருவாறு சமாதானப்படுத்தி அழைத்து வந்து அங்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கி ஒருவாறு நிலைமையைச் சமாளித்தார்கள் மணமகள் வீட்டார்.

மௌலவியும் ஏனையவர்களும் சிற்றுண்டி அருந்திவிட்டு வெளியிறங்கிச் செல்லும் சமயத்தில்தான் மாப்பிள்ளை பஜரோவில் வந்து இறங்கினார்… இல்லை..இல்லை… கடத்திச் சென்ற நண்பர்கள் மாப்பிள்ளையை விடுவித்தார்கள்…

திருமணம் என்றால் மாப்பிள்ளையின் நண்பர்களை சந்தோசமாக கரம் நீட்டி வரவேற்பதுதானே வழக்கம். இங்கும் பலர் கரம் நீட்டத் தயாராகத்தான் நின்றார்கள். ஆனால் வரவேற்பதற்காக அல்ல. விளாசுவதற்காக.

‘கலியாண ஊடு என்டதால சபூர் பண்ணி இருக்கன். இல்லாட்டி இவடத்த நடக்குறதே வேற‘ என்றார் மணமகளின் நெருங்கிய உறவினர் ஒருவர். இந்தத் திருமணத்தை நடத்தி வைப்பதில் முன்னின்று உழைத்தவர் என்பதால் அவரது வேதனையையும் வலியையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

‘கலியாணத்த நாசமாக்கிப் போட்டானுகள்….இவனுகள்ட முகத்தில முழிக்கயும் போடா…. மானம் மரியாதையெல்லாம் குறைச்சிப் போட்டானுகள்…அதபொழுக்கம் தெரியாதவனுகள்…’ இப்படி ஏகப்பட்ட வார்த்தைக் கணைகள் ஒவ்வொருவர் வாயிலிருந்தும் வெளிவந்து கொண்டிருந்தன.

மணமகள் வீட்டில் வழக்கமாக நடக்கும் உபசரிப்புகள் எதுவும் ஒழுங்குற நடக்கவில்லை. மாப்பிள்ளையின் உறவினர்களும் இந்தச் செயலால் தலைகுனிந்துதான் நின்றார்கள். திருமணத்தன்று ஆனந்தக் கண்ணீர் வடிக்க வேண்டிய மணமகளின் தாயார் கவலையிலும் ஏமாற்றத்திலும் வடித்த கண்ணீரைப் பார்த்து சுற்றியிருந்த பெண்களும் அழத் தொடங்கிவிட்டார்கள்.

காத்தான்குடியைப் பொறுத்தவரைக்கும் இப்படி நடப்பது முதற்தடவையல்ல. இதற்கு முன்னரும் பல சம்பவங்கள் இதேபோன்று நடந்தேறியிருக்கின்றன என்ற செய்தியை நேற்றுப் பலரும் என்னிடம் சொன்னார்கள்.

குறித்த திருமண நிகழ்வுக்கு மஃரிப் தொழுகையின் பின்னர் வந்த ஊரின் சிரேஷ்ட மௌலவி ஒருவர் இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட போது சில மாதங்களுக்கு முன்னர் இதேபோன்றதொரு சம்பவம் நடந்ததாகச் சொன்னார்.

‘4ஆம் குறிச்சில ஒரு கலியாணத்தில இப்படித்தான் நடந்திச்சி… மாப்புள்ளய பள்ளியிலிருந்து காரில ஏத்திக்கிட்டு கல்லடிக்கு பூநொச்சிமுனைக்கெல்லாம் கொண்டுபோய் 40 நிமிஷத்துக்கு பிறகுதான் கொண்டு வந்தானுகள். காருக்குள்ள ஒரு மௌலவிய ஏத்தி வச்சிக்கிட்டே அவனுகள் இந்தக் கூத்தக் காட்டியிருக்கானுகள்…. நாங்க எல்லாம் காத்துக் காத்து இருந்துட்டு கோவத்துல எழும்பி வந்துட்டம்… சந்தோசமா கலியாணத்துக்குப் போனா மனிசனோட சண்ட பிடிச்சிட்டு வர வேண்டியிருக்கு… அதுக்குப் புறகு நான் அஸருக்கு கலியாணத்துக்குப் போறல்ல…மஃரிபுக்கு பிறகுதான் போற‘ என்றார் அவர்.

நமது ஊரில் திருமண வைபவங்களில் மாப்பிள்ளைமாரின் நண்பர்களின் சேஷ்டைகள் அண்மைக்காலமாக அதிகரித்துக் கொண்டு வருகின்றன என்பதை நேற்றுப் பலரும் சொன்ன போதுதான் என்னால் உணர முடிந்தது.

‘அண்டைக்கு இப்படித்தான் ஒரு கலியாணத்துல வட்டிலப்பத்தால எறிஞ்சி விளையாடினானுகள்… அங்க வந்திருந்த வெளியூர் ஆள் ஒருவர்ட வெள்ளைச் சேட்டுல வட்டிலப்பம் வந்து விழுந்து அவருட சேர்ட்டே நாசமாப் போச்சு… உங்கட ஊர்ல இப்புடித்தானா கலியாணம் நடக்குற என்டு அவரு எங்கிட்ட கேட்டாரு‘ என்றார் இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட நண்பர் ஒருவர்.

இன்னுமொரு திருமண வைபத்தில் விருந்தினர்கள் கூடியிருக்க மாப்பிள்ளையின் நண்பர்கள் வாழைப்பழத் தோலால் எறிந்து விளையாடியதாகவும் அதில் ஒரு வாழைப்பழத்தோல் ஊரின் மிக முக்கிய உலமா ஒருவரின் தலையில் போய் விழுந்ததாகவும் அவர் ‘ஷைத்தானுகள் வந்துட்டானுகள்‘ என்று திட்டியதாகவும் வேறொரு சம்பவத்தைச் சொன்னார் மற்றுமொரு சகோதரர்….

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு சம்பவத்தைச் சொல்லிக் கொண்டே போனார்கள். எல்லாவற்றையும் பற்றிக் குறிப்பிடுவது நமது நோக்கமல்ல. காத்தான்குடியில்தான் திருமண வைபவங்கள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட வகையிலும் ஆண் பெண் கலப்பு இன்றியும் ஏனைய ஊர்களுக்கு முன்மாதிரியாகவும் நடப்பதாக நாம் சொல்லிக் கொண்டாலும் இப்படியான சேஷ்டைகள் அந்தப் பெருமையைக் காலில் போட்டு மிதிப்பதாகவே அமைந்துவிடுகின்றன.

திருமண வைபவங்களின்போது மாப்பிள்ளையின் நண்பர்கள் மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது என்றோ அல்லது பகிடி பண்ணக் கூடாது என்றோ நாம் இங்கு சொல்ல வரவில்லை. ஆனால் அதற்கு ஒரு நேரமும் ஒழுங்கும் வரையறையும் இருக்கிறது. அதை நண்பர்கள் மாத்திரம் பங்கேற்கின்ற ஒரு சமயத்தில் வைத்துக் கொள்ளலாம். அல்லது மாப்பிள்ளையுடன் மாத்திரம் தொடர்புபட்டதாக அமைத்துக் கொள்ளலாம். குடும்பத்தினரதும் சமூகத்தினதும் மனதைப் புண்படுத்துகின்ற வகையில் இந்த சேஷ்டைகள் இருக்கக் கூடாது என்றே நாம் இங்கு சொல்ல வருகிறோம்.

‘பூனைக்கு விளையாட்டு…எலிக்கு சீவன் போகிறது‘ என்பார்களே… திருமணம் என்பது மாப்பிள்ளையின் நண்பர்களுக்கு வேண்டுமானால் விளையாட்டாக இருக்கலாம். ஆனால் நமது ஊரின் கலாசாரத்தைப் பொறுத்தவரை மணமகள் வீட்டாருக்கு அது சீவன் போகிற நிகழ்வு என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு சில மனிதர்களின் பல வருட உழைப்புகள்…. குடும்பத்தையும் ஊர் உறவுகளையும் துறந்து கடல் கடந்து சென்று படும் கஷ்டங்கள் அத்தனையுமே இந்த ஒரு நாள் சந்தோஷத்துக்காகத்தானே? திருமண தினத்தன்று மணமகள் வீட்டார் கடும் சந்தோஷத்தில் இருப்பதாக வெளிப்படையாகத் தெரிந்தாலும் அதன் பின்னால் இருக்கும் வலிகளும் கடன்களும் சுமைகளும் நாம் எல்லோரும் அறிந்தவை. அப்படிப்பட்ட ஒரு சந்தோஷத்தைக் கூட அன்றைய தினம் அனுபவிக்கவிடாமல் மாப்பிள்ளையின் நண்பர்களின் செயல்பாடுகளால் மனமுடைந்து, நொந்து போகின்ற மணமகள் வீட்டாரைப் பற்றியும் அவர்களது எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் பற்றியும் இந்த நண்பர்கள் ஒரு முறை அமைதியாகச் சிந்தித்துப் பார்க்கட்டும்.

நேற்று இந்தச் சம்பவம் நடந்த அரை மணி நேரத்துக்குள்ளேயே கட்டாரிலிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர் எனது நண்பர். மணமகளின் சகோதரர். நடந்த விடயங்களைக் கேட்டு விட்டு இப்படிச் சொன்னார். ‘நான் இங்க கிடந்து படுற கஷ்டம் அவனுகளுக்குத் தெரியுமா? கடன் சுமை தாங்க முடியாம கீழ விழுந்து கிடக்கன் நான்…. நான்  மனிசனா எழும்பி நிக்க இனி எத்தன வருஷம் போகுமோ தெரியா… அவனுகளுக்கு விளையாட்டா? என்ட ஊட்ட சந்தோசமா கலியாணம் நடக்கனும் என்டுதானே நான் இவ்வளவு கஷ்டப்படுறன்… அவனுகள் படிச்சவனுகள்(?)தானே… ஏன் இப்படி நடக்கானுகள்…. ஊட்டக் கட்டி ஒரு கலியாணத்த நடத்திப் பார்த்தா அவனுகளுக்கு எல்லாம் விளங்கும்…’ அவர் தனது மனக்குமுறல்களைக் கொட்டிக் கொண்டே போனார்.

ஊரில் இப்படியொரு வழக்கம் வளர்ந்து கொண்டே போனாலும் இது தொடர்பில் சமூக நிறுவனங்கள் இறுக்கமான முடிவுகளை எடுப்பதாகத் தெரியவில்லை. திருமண வைபவங்கள் தொடர்பில் சம்மேளனமும் உலமா சபையும் முன்னர் கொண்டு வந்த தீர்மானங்கள் அமுல்நடாத்தப்படினும் இப்படிப்பட்ட சில நிகழ்வுகள் அவற்றைக் கேள்விக்குட்படுத்திவிடுகின்றன. எனவேதான் இது தொடர்பில் ஊர்த் தலைமைகள் சீரியசாகச் சிந்திக்க வேண்டும். ஏற்கனவே சில குத்பா பிரசங்கங்களில் இது பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டதாகவும் உலமா சபைக் கூட்டம் ஒன்றிலும் இந்த விடயம் அலசப்பட்டதாகவும் அறிய முடிகிறது. ஆனாலும் இந்தக் கடத்தல் கலாசாரமும் சேஷ்டைகளும் வளர்ந்து கொண்டு போகின்றனவேயொழிய குறைந்தபாடாகத் தெரியவில்லை.

துரதிஷ்டவசமாக நேற்றைய சம்பவத்தில் முக்கிய பாத்திரம் ஏற்றவர்களில் நமதூரின் அதி முக்கிய, சிரேஷ;ட பிரமுகர்களின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் உள்ளடங்குகிறார்கள் என்பதையும் இந்த இடத்தில் கவலையுடன் சொல்ல வேண்டியிருக்கிறது.

நண்பர்களே….நாளை உங்களுக்கும் திருமணம் நடக்கவிருக்கிறது என்பதையும் அச்சமயம் உங்கள் நண்பர்களின் சேஷ்டைகளை முன்கூட்டியே உணர்ந்து எவரும் உங்கள் திருமணத்துக்கு வராமலே விடலாம் என்பதையும் மறந்துவிடாதீர்கள்…

பெற்றோர்களே… உங்கள் பிள்ளைகளைப் பார்;த்து ஊரார் ‘அதபொழுக்கமில்லாதவனுகள்’ என்று சபிப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா?

கவனம்! நாளை உங்கள் வீட்டு மாப்பிள்ளையும் கடத்தப்படலாம். உங்கள் வீட்டுக் கலியாணமும் களேபரத்தில் முடியலாம்.

அதற்கு முன்னர் நீங்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நான் இரவில் கண் விழித்து எழுதியிருக்கிறேன் இந்தக் கட்டுரையை!

உதவி - காத்தான்குடி இன்போ

7 comments:

  1. அஸ்ஸலாமு அழைக்கும்
    உங்களுடைய கட்டுரை இவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதில் முக்கியமான் விஷயத்தை விட்டு விட்டீர்கள் மாப்பிளைக்கு சீதனம் எவ்வளவு இதுவும் சமுதாயத்தின் முக்கிய சாபம் என்பதை மறைத்து விட்டீர்களா அல்லது மறந்து விட்டீர்களா கிழக்கு மாகாணத்தில் சிதான கொடுமை தலைவிரித்தாடுகிறது தயவு செய்து மறைக்காமல் அதையும் எழுதுங்கள் இல்லை என்றால் அல்லாஹ்விடம் அனைவரும் பதில் சொல்லி ஆக
    வேண்டிவரும் என்பதை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
    வஸ்ஸலாம்
    கத்தாரில் இருந்து
    ரியாஸ்

    ReplyDelete
  2. மணமகளின் சகோதரனின் புலம்பலில் இருந்தே புரிகின்றது, கொளுத்த சீதனம் என்பது, அது போதாமல் வீடு கூட சீதனமாக கொடுக்கப் பட்டுள்ளதை கட்டுரை ஆசிரியர் நாசுக்காக சொல்லி விட்டார்.
    ஒழுங்கா வாசித்தால் புரியும்.

    ReplyDelete
  3. kaattha nagar. islaasiya maanam kaattha nagar?ippady koottaady nagaraaki viddathe enru kawalaippadukirean.

    ReplyDelete
  4. காத்தான்குடி இன்போ இணையத்தளத்தில் இருந்து
    இந்த கட்டுரை தூக்கப் பட்டு விட்டது.

    மாப்பிள்ளை சார்பில் யாராவது பட்டதாரிகள் தெஹிவளை போலீசில் முறைப்பாடு செய்தார்களா என்று தெரியவில்லை.

    நீங்களும் யோசிக்கவும்.

    ReplyDelete
  5. New merciful Islamic culture??? New Thawheeth, new jamaath .... new Marriage style... Carry-on ....

    ReplyDelete
  6. really superb bro ur matter.

    ReplyDelete
  7. இந்த கட்டுரை தனிப்பட்ட ஒருவரின் பழிவாங்கும் உணர்வால் எழுதப் பட்டது..... இந்த திருமணத்தில் இந்த திருமணம் நிச்சயிர்க்கப் பட்டதில் இருந்தே மணமகளின் சில நெருங்கிய உறவினர்களுக்கு விருப்பம் இல்லை என்பது சம்பந்தப் பட்டோருக்கு மிகத் தெளிவாக தெரியும்.. அவர்களின் பழிவாங்கும் வெளிப்பாடே இந்த கட்டுரை... எமது ஊரில் இதைவிட அதிகமான திருமண கேளிக்கைகளை நாம் பார்த்திருக்கிறோம். அதில் சிலவற்றில் இந்த கட்டுரை ஆசரியரும் கலந்துதான் இருக்கிறார்.. இது இவ்வாரு இருக்க தம்மை விட வயதில் இளையவர்கள் அவர்களது நண்பனின் திருமணத்தை இவளவு சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் நடத்துவதை கண்டு வயிறெரிஞ்ச சிலரின் விமர்சனங்களும் பழிவாங்கலும் தான் இக் கட்டுரையின் வெளிப்பாடு... இக் கட்டுரை ஆசிரியர் உண்மையை எடுத்துரைப்பவராயின் ஊரில் எப்போது இந்த நடை முறை முதலாவது ஆரம்பிக்கப் பட்டதோ அன்றே இதை எழுதி இருக்க வேண்டும்... அவரின் ஊடக வாழ்க்கை ஆரம்பித்ததில் இருந்து இது மாதிரியான எத்தனை சம்பவங்களை அவர் சந்தித்திருப்பார்??? அதை எல்லாம் சுட்டிக் காட்டாமல் அவரது நண்பன் என்ற உடனேயே பழிவாங்கி அவமானப் படுத்தும் முயற்சியில் இறங்கி விட்டார்... இதை அவர் அவரது கட்டுரைலேயே குறிப்பிட்டுள்ளார்.. எங்களது நண்பர்கள் இவ்வாறு அடுத்தவனை பழிவாங்கி அவமானப் படுத்தவில்லை மாறாக தன்னுடன் சிறு வயதில் இருந்து ஒன்றாக படித்து ஒன்றாக வாழ்ந்த நண்பனின் திருமணத்தை மகிழ்ச்சியாக நடத்தினர்.. இதில் சிலருக்கு மனகஷ்டம் ஏற்பட்டது உண்மைதான்.. அதற்காக சமந்தப் பட்டோரிடம் நாங்கள் மன்னிப்பும் கோரி விட்டோம். இப்படியான சிறிய விடயங்களை கட்டுரை ஆசரியர் பெரிய கொலை குற்றம் போல் விமர்சித்து இருக்கிறார். இது காத்தான்குடியில் இடம்பெற்ற ஒரு சிறிய நிகழ்வு. இதை தனது பழிவாங்கும் உணர்வால் உலகுக்கே ஊர் மானத்தை போகவைக்கும் அளவுக்கு இக் கட்டுரையை பிரசுரித்து இருக்கிறார் கட்டுரை ஆசிரியர்.

    ReplyDelete

Powered by Blogger.