Header Ads



விளையாட்டு துறையில் யாழ்ப்பாணம் முதலிடம் பிடிக்கும் - அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை

யாழ் மாவட்டத்தின் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் முகமாகவும் மேலும் ஆற்றல் கொண்டதாக இத்துறையை மேம்படுத்துவதற்கும் நாம் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் விளையாட்டுத்துறையில் யாழ் மாவட்டம் இந் நாட்டில் முதலாவது இடத்தைப் பிடிப்பதற்காகவும் உழைத்து வருகிறோம். இந்த வெற்றியை நாம் விரைவில் நிரூபிக்க இயலும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது என பாரம்பரிய கைத்தொழிகள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற கழகங்களுக்கிடையிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகளின் போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்  இன்றைய மாலைப் பொழுது உற்சாகமிக்கதாகவும் நம்பிக்கை தரக்கூடியதுமாக இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

யாழ் மாவட்ட விளையாட்டுத் துறையை ஊக்குவித்து மேம்படுத்துவதற்கு நாம் பல செயற்திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் ரமணன் போன்றவர்களது பங்களிப்புக்கள் பாராட்டக் கூடியவை.

யாழ் மத்திய கல்லூரியில் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்கின்றவர்களது கோரிக்கைக்கு அமைவாக பைபர் போர்ட் வழங்க உடனடி நடவடிக்கை எடுத்துள்ளேன். அதேபோன்று இரவு நேர விளையாட்டுக்களின் போது வெளிச்சம் போதாமையாக இருப்பதால் அதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலதிகப் பயிற்சிகளுக்காக அருகிலுள்ள இடமொன்றை ஏற்பாடு செய்யவுள்ளேன்.

எமது சமூகம் முன்நோக்கிச் செல்கின்ற சமூகமாக அமைய அனைத்து வழிகளிலும் நாம் உழைத்து வருகின்றோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்வில் பெண்கள் பிரிவில் கே.கே.எஸ். ஐக்கிய விளையாட்டுக் கழகத்தை எதிர்த்தாடிய லெமிரியன்ஸ் கழகம் வெற்றி பெற்றதுடன் ஆண்கள் பிரிவில் ஜொலிஸ்ரார் கழத்தை எதிர்த்தாடிய சென்ரல் எலைட்ஸ் கழகம் வெற்றியீட்டியது.  விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவும் கிண்ணங்களையும் பரிசில்களையும் வழங்கினர்.





No comments

Powered by Blogger.