எகிப்தில் இஹ்வான் முஸ்லிம்கள் சலபிகள் முரண்பாடு..?
எகிப்தில், ராணுவ ஆட்சியை எதிர்த்து, தலைநகர் கெய்ரோவில், பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் நடந்தது. அதே நேரம், ராணுவ ஆட்சியை ஆதரித்து, மற்றொரு பகுதியில் பேரணி நடந்தது. எகிப்து மக்கள் மத்தியில், ராணுவ ஆட்சி தொடர்பாக, கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன என்பதை, இந்தப் பேரணிகள் காட்டுகின்றன.எகிப்தில், ராணுவ ஆட்சியை எதிர்த்து, கடந்த நவம்பர் 28ம் தேதி முதல், கெய்ரோவில் உள்ள தாரிர் சதுக்கத்தில், சிலர் திரண்டு தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன், திடீரென ராணுவ ஆட்சிக்கு எதிராக, போராட்டம் வெடித்தது.
பெண் ஒருவரை போலீசார் கொடுமைப்படுத்திய காட்சிகள், பல்வேறு ஊடகங்கள் வழியாக வெளியாகின. இது, போராட்டத்தை மேலும் தூண்டிவிட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம், தாரிர் சதுக்கத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு, ராணுவ ஆட்சி உடனடியாக பதவியிறங்க வேண்டும் என வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தினர். அலெக்சாண்டிரியா உள்ளிட்ட பிற நகரங்களிலும் ராணுவ ஆட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
இந்நிலையில், ராணுவ ஆட்சி மூலம் தான், நாட்டில் ஓரளவுக்கு அரசியல் நிலைப்படும் என, மற்றொரு தரப்பினர் வாதிட்டு வருகின்றனர். இவர்கள், நேற்று முன்தினம், கெய்ரோவின் பிற பகுதிகளில் திரண்டு, ராணுவ ஆட்சிக்கு ஆதரவாக பேரணிகள் நடத்தினர். ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக, ஆர்ப்பாட்டம் நடந்த போது, முக்கிய பங்காற்றிய பல இயக்கங்கள், தற்போதைய ராணுவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன. சலாபி பிரிவு அரசியல் கட்சியான அல் நூரும் ஆதரவளித்துள்ளது.
அதே நேரம், நாட்டின் மிக முக்கிய இயக்கமான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் அரசியல் பிரிவான நீதி மற்றும் விடுதலைக் கட்சி, ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளிக்கவில்லை. இதனால், மக்கள் தாங்கள் அக்கட்சியால் வஞ்சிக்கப்பட்டதாக உணர்ந்துள்ளதாகத் தெரிவித்தனர்.
Post a Comment