மகாவம்சத்தின் புதிய அத்தியாயத்திலும் பொன்சேக்காவுக்கு இடமில்லை
இராணுவ வரலாற்று நூலில் இருந்த நீக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பற்றி, புதிதாக எழுதப்படும் மகாவம்ச அத்தியாயங்களிலும் சேர்க்கப்படமாட்டார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிங்கள வரலாற்று நூலான மகாவம்சத்தில் புதிதாக மூன்று பகுதிகளை சேர்க்க மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளார்.
30 ஆண்டுகாலப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததில் மகிந்த ராஜபக்ச ஆற்றிய பங்களிப்பை மையப்படுத்தியதாக மகாவம்சத்தின் புதிய பகுதிகள் சேர்க்கப்படவுள்ளன. எனினும் மகாவம்சத்தின் புதிய பகுதிகளில் சரத் பொன்சேகா பற்றிய எந்தக் குறிப்புகளும் இடம்பெறமாட்டாது என்று கலாசார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.
புதிதாக உருவாக்கப்படவுள்ள மகாவம்சப் பகுதிகளில் 1978 தொடக்கம் 2011 வரையான காலப்பகுதியின் நிகழ்வுகள் உள்ளடக்கப்படவுள்ளன. இதில் முக்கியமாக விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது பற்றிய வரலாற்றுக் குறிப்புகளே இடம்பெறவுள்ளன.
இராணுவத்துக்குத் தலைமையேற்று விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து 30 ஆண்டுகாலப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததில் சரத் பொன்சேகா முக்கிய பங்கு வகித்திருந்தார். எனினும் இவரது பெயர் மகாசவம்சத்தின் புதிய பகுதிகளில் சேர்க்கப்படமாட்டாது என்று கலாசார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.
இராணுவ நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து முன்னாள் இராணுவத் தளபதிகள் வரிசையில் இருந்து நீக்கப்பட்ட சரத் பொன்சேகா பற்றிய குறிப்புகள் இராணுவ வரலாற்று நூலில் இருந்தும் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment