தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களை கறிவேப்பிலையாக பாவிக்கிறதா..?
வடக்கும், கிழக்கும் பிரிந்தே இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவிக்காத வரை அவர்களுடன் முஸ்லிம் கட்சிகள் பேசுவது கிழக்கு மாகாண மக்களுக்கு செய்யும் பாரிய துரோகமாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொள்கை பரப்பு செயலாளர் முபாறக் மெளலவி தெரிவித்துள்ளார். த.தே. கூட்டமைப்பு, ஸ்ரீ. முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு சம்பந்தமாக ஊடக வியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது;
இலங்கையின் இனப்பிரச்சினை என்பது முத்தரப்பைக் கொண்டதாகும். இதில் முஸ்லிம்களின் வகிபாகம் புறந்தள்ளப்பட முடியாதது என்பதை தேசியமும் சர்வதேசமும் ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழ் மக்களுக்கான தீர்வு வழங்கப்படும் போது முஸ்லிம்களுக்குமான நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டுமென்பது 1960 காலத்திலிருந்தே கிழக்கு முஸ்லிம்களின் கோரிக்கையாகும்.
இத்தகைய சூழலில் இனப்பிரச்சினை தீர்வுக்கான தேடலில் அரசு முன்வந்து செயற்படும் போது வடக்குடன் மீண்டும் கிழக்கை இணைக்க வேண்டுமென்பதில் விடாப்பிடியாக இருந்த த.தே. கூட்டமைப்பு முஸ்லிம்களின் இணக்கம் இல்லாவிட்டால் அதனை இணைக்க முடியாது என்பதை புரிந்து முஸ்லிம் சமூகத்தை தமது கோரிக்கைக்கு கறிவேப்பிலையாக பாவிப்பதற்காகவே தற்போது முஸ்லிம்களுடன் பேசுவதாக நாடகமாடுகிறது. இதன் மூலம் முஸ்லிம்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் முயற்சியாகவே நாம் இதனை பார்க்கிறோம்.
வடக்கும் கிழக்கும் நிரந்தரமாக இணைக்கப்பட வேண்டுமாயின் முஸ்லிம்களுக்கான தனி நிர்வாக அலகு தரப்பட வேண்டும் இல்லையேல் கிழக்கு பிரிந்தே இருக்க வேண்டும் என்பதே மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களது நிலைப்பாடாகும். இக்கருத்தை ஏற்றுக்கொள்வதாக த.தே. கூட்டமைப்பு இதுவரை பகிரங்கமாக தெரிவிக்கவில்லை.

Post a Comment