வடமாகாணத்தின் அடுத்தவருட அபிவிருத்திக்கு 5000 மில்லியன் ஒதுக்கீடாம்
2012 ஆம் ஆண்டு வடமாகாண சபையின் ஊடாக மாத்திரம் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி பணிகளுக்கென 5000 மில்லியன் ரூபா நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.இந்நிதியில் மாகாணத்தில் முன்னுரிமை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கென 2896 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த ஆளுநர், இந்த நிதி ஒதுக்கீட்டு ஆவணத்தில் புதுவருடத்தில் வரக்கூடிய முதலாவது திங்கட்கிழமையான எதிர்வரும் 2ஆம் திகதி கையொப்பமிடவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இந்நிதி ஒதுக்கீடு தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர் வடமாகாண நிதி ஒதுக்கீட்டு ஆவணத்தில் ஒப்பமிடும் நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநர் பணிமனையில் நடைபெறவுள்ளது.இந்நிதி ஒதுக்கீட்டு ஆவணங்கள் நிதி அமைச்சின் கீழுள்ள நிதி ஆணைக்குழுவிடம் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கவுள்ளது.
மாகாணத்தில் முன்னுரிமை அடிப்ப டையில் தெரிவுசெய்யப்பட்ட அபிவிருத்தி பணிகளுக்கென ஒதுக்கப்பட்ட 2896 மில்லியன் ரூபா நிதி வடமாகாண சபையின் கீழுள்ள ஐந்து அமைச்சுக்களுக்கும், அதன் கீழ் இயங்கும் 24 திணைக் களங்களுக்கும் வழங்கப்படும்.
அடுத்த வருடத்திலும் வடமாகாணத்தில் கல்வி அபிவிருத்தித் திட்டங்களுக்கே அதிக முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. கல்வி, சுகாதார, விவசாய, நீர்ப்பாசன, வீதி அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.
சுமார் மூன்று மாதங்களாக சகல துறையினரின் பங்களிப்புடன் அபிவிருத்தி திட்டங்கள் வகுக்கப்பட்டன. இதுதவிர வடமாகாணத்தின் பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு வடமாகாண சபைக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள 5000 மில்லியன் ரூபா நிதியைத் தவிர பொருளாதார அபிவிருத்தி அமைச்சு உட்பட பல்வேறு அமைச்சுக்கள், மாவட்ட செயலாளர்களுக்கான ஒதுக்கீடு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி உதவிகள் மூலம் மேலும் பல்லாயிரம் மில்லியன் ரூபா நிதி வடமாகாண அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக கிடைத்துள்ளது.
அதேசமயம், ஏற்கனவே பல கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டு அதன் மூலமாக பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் வடமாகாணத்தில் இடம்பெற்று வருவதுடன் பெருந்தொகையானோருக்கு அரச துறைகளில் தொழில் வாய்ப்புக்களும், நியமனங்களும் வழங்கப்படவுள்ளன என ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment