Header Ads



குஜரத்தில் 23 குழந்தைகளுக்கு எயிட்ஸ் இரத்தம் ஏற்றிய டாக்டர்கள்

குஜராத் மாநிலம் ஜுனாகத் நகரில் தனியார் குழந்தைகள் ஆஸ்பத்திரி செயல்படுகிறது. அந்த மாவட்டத்தில் உள்ள ஏராளமான குழந்தைகள் தடுப்பூசி மற்றும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்கு 23 குழந்தைகளுக்கு டாக்டர்கள் ரத்தம் செலுத்தினார்கள். ஆனால் அவர்களுக்கு தவறுதலாக எய்ட்ஸ் கிருமி பாதித்த ரத்தம் செலுத்தியதாக தெரிகிறது. 

இதையடுத்து அந்த குழந்தைகளின் உடல்நிலை 6 மாதமாக பாதிக்கப்பட்டது.   தொடர்ந்து குழந்தைகள் பாதிக்கப்பட்டதால் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதில் அவர்களுக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தில் எய்ட்ஸ் கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குஜராத் மாநில ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர். அதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடவேண்டும் என்றும் கூறியிருந்தனர்.  

 தலைமை நீதிபதி பாஸ்கர் பட்டாச்சார்யா வழக்கை விசாரித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட்டார். இதில் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். 

அதன்படி அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில் இந்த ஆஸ்பத்திரியில் 100 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 23 குழந்தைகளுக்கு ரத்தம் மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆஸ்பத்திரி நிர்வாகம் அனுமதி இல்லாமல் செயல்பட்ட சோதனைக் கூடத்தில் இருந்து ரத்தம் பெற்று குழந்தைகளுக்கு செலுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெற்றோர் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில் ரத்தம் வழங்கிய ரத்த வங்கியின் லைசென்ஸ்சை ரத்து செய்யவேண்டும் என்று கூறினார். அரசு இறுதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.   

இதற்கிடையே சம்பவம் நடந்த ஜுனாகத் நகரில் முதல்-மந்திரி நரேந்திரமோடி நேற்று மதநல்லிணக்க உண்ணாவிரதம் இருந்தார். அவரை கண்டித்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் காங்கிரசாருடன் சேர்ந்து போட்டி உண்ணாவிரதம் இருந்தனர். 

நரேந்திர மோடி உண்மையிலேயே நல்லது நடக்க வேண்டும் என்று விரும்பினால் இந்த குழந்தைகள் விஷயத்தில் அதை செய்து காட்டவேண்டும் என்று நகர துணை மேயர் கிலிஸ் கொடேசா கூறினார். 

No comments

Powered by Blogger.