வடகொரியாவின் தலைவராகிறார் 20 வயது இளைஞன்
வட கொரியாவின் சர்வாதிகாரியும் அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான கிம் ஜாங் இல்,69, கடந்த 17ம் தேதி, மாரடைப்பால் காலமானதாக, அந்நாட்டு தேசிய தொலைக்காட்சியில், நேற்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தென் கொரியா, தனது ராணுவத்தை உஷார் நிலையில் வைத்துள்ளது.
வட கொரியாவில், 1994 முதல் நாட்டின் தலைவராக இருந்து வந்த கிம் ஜாங் இல், உடல் நலக் குறைவு காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அப்போது, அவர் ரயிலில் பயணத்தில் இருந்ததாக, தேசிய செய்தி நிறுவனம் கே.சி.என்.ஏ., தெரிவித்துள்ளது.
கடந்த 2008ல், கிம் ஜாங் இல், பக்கவாதத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் சில மாதங்களுக்கு, வெளியில் வருவதைத் தவிர்த்தார். எனினும், அவரது உடல் நிலை மோசமான நிலையில் இருந்ததாகவே தகவல்கள் வெளியாயின.
சமீபத்தில், அவர் சீனா, ரஷ்யாவில் மேற்கொண்ட சுற்றுப் பயணங்கள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடப்பட்டு வந்தன.
அடுத்த தலைவர் யார்? : மேலும்,"அவரது இறுதிச் சடங்கு, இம்மாதம் 28ம் தேதி நடக்கும். 17ம் தேதி முதல் 29ம் தேதி வரை, நாட்டில் துக்க தினம் அனுசரிக்கப்படும். அவரை அடுத்து, நாட்டின் தலைமைப் பொறுப்பேற்க உள்ள தலைவரின் மகனான கிம் ஜாங் உன்-னின் பின்னால், நாம் அணிதிரண்டு நமது ஒற்றுமையைக் காட்ட வேண்டும்' எனவும், தேசிய செய்தி நிறுவனம் கே.சி.என்.ஏ., மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
கிம் ஜாங் இல்லுக்குப் பின், அவரின் மகன், கிம் ஜாங் உன் அடுத்த தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்வார் என, கடந்தாண்டு செப்டம்பரில் அறிவிக்கப்பட்டது. கிம் ஜாங் உன்னைப் பற்றி, மிகக் குறைந்த தகவல்களே இதுவரை வெளிவந்திருக்கின்றன. அவர், சுவிட்சர்லாந்தில் படித்தவர் என்றும், அவருக்கு வயது 20 என்றும் தான், அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
துக்கத்தில் மக்கள் : தேசிய தொலைக்காட்சியில், கறுப்பு உடை அணிந்த பெண் ஒருவர், துக்கத்தை அடக்க முடியாமல், கிம் ஜாங் இல்லின் மரணச் செய்தியை அறிவித்த காட்சி ஒளிபரப்பானது. இச்செய்தியைக் கேள்விப்பட்ட மக்கள் கதறி அழுவதும், சோகத்தை தாளமுடியாமல் தவிப்பதுமான காட்சிகள் திரும்பத் திரும்பக் காட்டப்பட்டன.
தென் கொரியா உஷார் : கிம் ஜாங் இல்லின் மரணச் செய்தி வெளியான பின், தென் கொரியா தனது ராணுவத்தை உஷார்படுத்தியுள்ளது. அதோடு,"மக்கள் தங்கள் வழக்கமான கடமைகளை மேற்கொள்ள வேண்டும். பதட்டம் அடைய வேண்டியதில்லை' எனவும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தென் கொரிய பிரதமர் லீ மியுங் பாக், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைத் தொடர்பு கொண்டு, கிம் மரணச் செய்தியைத் தெரிவித்தார். "தென் கொரியா உடனான ஒத்துழைப்பை, மேலும் அதிகரிப்போம். இருவரும் இணைந்து, நிலவரத்தைக் கண்காணிப்போம்' என, ஒபாமா தெரிவித்ததாக, தென் கொரிய அதிபர் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
சீனா அதிர்ச்சி : ஜப்பான் பிரதமர் யோஷிஹிகோ நோடோ தலைமையில், நேற்று திடீரென பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. கிம் ஜாங் இல்லின் மரணச் செய்தி குறித்து, அதிர்ச்சி அடைந்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மா ஷாவோஷு, நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், "வட கொரிய மக்களுக்கு சீனா தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அமெரிக்கா மவுனம் : மிக முக்கியமான இச்சம்பவம் குறித்து, அமெரிக்கா, தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது. வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், "மரணச் செய்தியைத் தொடர்ந்து, நிலவரத்தைக் கண்காணித்து வருகிறோம். கொரிய மண்டலத்தில் அமைதி நிலவ, அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது. அதோடு, அமெரிக்கா தனது நட்பு நாடுகளின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு விஷயங்களிலும் உறுதியாக உள்ளது' என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹாக், நேற்று அளித்த பேட்டியில், "சர்வதேச சமூகத்தோடு வட கொரியா இணைய வேண்டிய திருப்பு முனையாக இந்தச் சம்பவம் இருக்கும்' என்றார்.

Post a Comment